For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திறமையைப் பொறுத்தே இனி கிரீன் கார்டு!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான கிரீன் கார்டு வழங்கப்படுவற்குரிய முக்கியத் தகுதியாக இனிமேல் கல்வி மற்றும் திறமையை மட்டுமே அடிப்படைக் காரணிகளாக கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசின் புதிய குடியேற்ற மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை (கிரீன் கார்டு) பெறுவதற்குரிய விதிமுறைகளில் பெருமளவில் மாற்றம் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடியேற்ற சட்டத் திருத்த மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதில், கிரீன் கார்டு கொடுப்பதற்கு ஒருவருடைய குடும்பச் சூழ்நிலையை பார்க்காமல், அவரது கல்வி மற்றும் திறமைகளையே முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியேற்றத்துறையில் நிபுணரான அருண் வக்கீல் கூறுகையில், அமெரிக்க குடியேற்றத் துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமான மாற்றமாகும். இதுநாள் வரை யாராவது கிரீன்கார்டு பெற்றிருந்தால் அவரது குடும்பத்தினருக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைத்து விடும் நிலை உள்ளது. ஆனால் அதில் தற்போது மாற்றம் ஏற்படும்.

வேலைவாய்ப்புடன் கூடிய குடியேற்றமாக இனி அமெரிக்க குடியேற்றம் அமையும். மேலும், ஏராளமான இளைஞர்கள் அமெரிக்காவில் குடிபுகுந்தாலும், அமெரிக்கர்களும் வேலைவாய்ப்புகளில் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகும் என்றார்.

வாஷிங்டனிலிருந்து செயல்படும் அமெரிக்க, இந்திய அரசியல் நடவடிக்கை கமிட்டியின் தலைவரான சஞ்சய் பூரி கூறுகையில், இது மிகப் பெரிய நடவடிக்கை. திறமையான நபர்களை மட்டும் அவர்கள் பார்க்கவில்லை, மாறாக, யார் அமெரிக்க கலாச்சாரத்துடன் விரைவில் ஒத்துப் போகிறார்கள் என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

உலகம் மாறி வருகிறது. அதற்கேற்ப அமெரிக்காவின் முகமும் மாற வேண்டியுள்ளது. திறமைகளுக்குத்தான் இனி மதிப்பு. உங்களுக்கு நல்ல ஆங்கிலமும், நல்ல திறமையும் இருந்தால் நிச்சயம் அமெரிக்காவில் உங்களுக்கு ஒரு இடம் உண்டு. எனவே இந்த குடியேற்ற சட்ட திருத்தத்தை இந்தியர்களுக்கு பாதகமான விஷயமாக கூற முடியாது என்றார்.

புதிய குடியேற்ற சட்ட திருத்த மசோதாவை இறுதி செய்ய இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் கடைசி என்று அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் குடியேற்றப் பிரச்சினை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வக்கீல் மேலும் கூறுகையில், இப்போது முதல் ஆகஸ்ட் வரை பல்வேறு வகையான திருத்தங்களை, ஆலோசனைகளை எதிர்பார்க்கலாம். இப்போது இது அரசியல் பிரச்சினையாகவும் மாறி வருகிறது.

அதிபர் புஷ்ஷுக்கு உள்ளூரில் செல்வாக்கு குறைந்து விட்டது. ஈராக் போரினால் சம்பாதித்த கெட்ட பெயரை சரி செய்து கொள்ள இந்த குடியேற்ற மசோதா அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே இந்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற அவர் தீவிரமாக உள்ளார் என்றார்.

அதேசமயம், புதிய குடியேற்ற மசோதாவில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் இந்தியர்களுக்கு பாதகமானது என்கிறார் அமெரிக் இந்திய வர்த்தக கூட்டணியின் ராபிந்தர் சச்தேவ். அவர் கூறுகையில், பாயிண்டுகள் அடிப்படையிலான குடியேற்ற விதி இந்தியர்களுக்கு நிச்சயம் சாதகம் இல்லாதது. அது நமக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

குடியேற்ற மசோதா மீதான விவாதம் அமெரிக்க செனட்டில் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதன் பின்னர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை அதை ஜூலை மாதம் பரிசீலிக்கும். பின்னர் மசோதா குறித்த விவாத மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும். பின்னர் இது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.

அதேசமயம், சட்டத் திருத்த மசோதாவில் பல மாற்றங்களும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சஞ்சய் பூரி விளக்குகளையில், அமெரிக்க சமுதாயம் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டது. குடியரசுக் கட்சியினர் பாயிண்டுகள் அடிப்படையிலான முறையை ஆதரிக்கின்றனர்.

அதேசமயம், ஜனநாயகக் கட்சியினர் குடும்பம் அடிப்படையிலான குடியேற்ற முறையை ஆதரிக்கின்றனர். எனவே இதுதொடர்பாக இரு தரப்பினரும் கூறும் பொதுவான கருத்துக்களும் மசோதாவில் இடம் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றார்.

அமெரிக்காவின் இந்த புதிய குடியேற்ற மசோதாவில் இந்தியாவின் குஜராத், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குத்தான் கடும் பாதிப்பு ஏற்படும். காரணம், அமெரிக்காவில் வசிக்கும் இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூட்டுக் குடும்பங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

அமெரிக்காவில் அதிக அளவில் தொழில் செய்து வரும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். எனவே குடும்பம் அடிப்படையில் இனிமேல் கிரீன் கார்டு கிடைக்காது என்று சட்டம் வந்தால் இவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

மேலும், பாயிண்ட் முறைப்படியான குடியேற்ற விதிகள் அமலுக்கு வந்தால் பெற்றோர்கள், கணவன் அல்லது மனைவி ஆகியோருக்கு விசா பெறுவதிலும் சிக்கல் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X