For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் பார்களுக்கு புதிய நிபந்தனைகள்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் மதுக் கடை பார் விபத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடை பார்களுக்கு புதிய நிபந்தனைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விதித்துள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் மதுக்கடை பார் மீது கருக்கல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பார் உரிமையாளர் கந்தசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பார்கள் நடத்துவது தொடர்பாக 24 நிபந்தனைகள் அடங்கிய விதிமுறைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், டாஸ்மாக் கடை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி கீழ்க்கண்ட நிபந்தனைகளை மதுக் கடை பார்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுக்கடை ஒப்பந்தக்காரர்கள் ஐஎஸ்ஐ தரச் சான்று பெறப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள், அனுமதிக்கப்பட்ட குளிர்பானங்கள், முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றை நியாமான விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

மதுக்கடை வாடகை, மின் கட்டணம், தண்ணீர் வசதி போன்ற அனைத்து செலவுகளையும் ஒப்பந்தக்காரரே செலுத்த வேண்டும்.

பிராணிகளையோ, பறவைகளையோ உயிருடன் மதுக்கடைக்கு எடுத்து வருவதோ, இருப்பு வைப்பதோ கூடாது.

விலங்குகளை, பறவைகளை மதுக்கடையில் வைத்து கொள்வதற்கோ அல்லது சமைப்பதற்கோ அனுமதி இல்லை. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.

மாதந்தோறும் ஒப்பந்தகாரரின் செயல்பாடுகள் மாவட்ட மேலாளரால் ஆய்வு செய்யப்படும். ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகளில் குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிமம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும்.

மாதந்தோரும் 5ம் தேதிக்குள் மாத உரிமத் தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து செய்வதுடன் முன் வைப்புத் தொகையும் பறிமுதல் செய்யப்படும்.

மதுக்கடை உரிமம் என்பதை தின்பண்டங்கள் விற்பதற்கும், காலி பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கும் மட்டுமே அளிக்கப்படுகிறது. மற்றப்படி மதுக்கடை டாஸ்மாக் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பிரதி மாதம் மதுக்கடை வாடகையை 5ம் தேதிக்குள் செலுத்தவேண்டும். தவறினால் முன்னறிவிப்பின்றி கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காலி பாட்டில்களை சேகரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடவேண்டும், காலி பாட்டில்களை மதுக்கடையில் சேகரித்து வைக்கக் கூடாது. மீறினால் இருப்பு வைத்தமைக்காக இட வாடகை கட்டணம் வசூலிக்கப்படும்.

மதுக்கடையில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. 21 நிரம்பிய ஆண்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மதுக் கடையை தூய்மையாக வைத்திருத்தல் ஒப்பந்தகாரரின் பொறுப்பாகும்.

வேலை நேரம் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டுமே ஒப்பந்தகாரரும், அவருடை பணியாளரும் கூடத்தில் அனுமதிக்கப்படுவர். பணியாளருக்கான அடையாள அட்டை மாவட்ட மேலாளிடம் பெற்று பணியமர்த்த வேண்டும். அடையாள அட்டையில்லாமல் வெளி நபர் எவரும் பணியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மதுக் கடை உரிம நகல் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்.

மதுக்கடையில் விற்கப்படும் திண்பண்டங்களின் விலைபட்டியல் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இவை சுகாதாரத்துடன் இருப்பதோடு, அரசின் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாக இருத்தல் வேண்டும். தரக்கட்டுபாடு சோதனைக்கு உட்படுத்தப்படும்.

மதுக்கூட உரிமத்தை ஒப்பந்தக்காரர் தவிர வேறு யாருக்கும் மாற்றி தரக்கூடாது.

திண்பண்ட விற்பனை கணக்கு வழக்குகளை டாஸ்மாக் நிர்வாகம் கோரினால் விபரங்களை உடனே அளிக்க வேண்டும்.

ஆய்வுக்காக வரும் அலுவலர்களுக்கு ஒப்பந்தகாரர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

அரசால் தடைசெய்யப்பட்ட எந்த பொருளும் மதுக்கூடத்தில் விற்க கூடாது. பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்யகூடாது.

மதுக்கடையை பொழுது போக்கு இடமாகவோ, சூதாடும் இடமாகவோ ஒப்பந்தகாரர் பயன்படுத்த கூடாது.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களையும், கீற்று கொட்டகையையும் பயன்படுத்தக் கூடாது.

காலி பாட்டில்கள் யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என முகவரியுடன் மாவட்ட மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

அரசு விதித்துள்ள சட்டதிட்டங்கள், வருங்கால விதிகள் அனைத்தும் ஒப்பந்ததாரரை கட்டுப்படுத்தும்.

மதுக்கூடத்திற்குள் தனியே மதுபான விற்பனை மற்றும் இருப்பு வைப்பது கூடாது.

நிர்வாக காரணங்களுக்காக மதுபான கடையை மூட வேண்டியிருந்தாலோ, அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தபுள்ளி பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X