
எனது பெயரை கெடுக்க சதிபிரதமருக்கு தயாநிதி மாறன் கடிதம்!
சென்னை:
எனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் பி.எஸ்.என்.எல். டெண்டர் விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரிவான மொபைல் போன் சேவையை வழங்குவதற்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடக்கவிருந்ததை தான் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி விட்டதாக சமீபத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் புகார் குறித்து தயாநிதி மாறன் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
![]() |
இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில் தயாநிதி மாறன் கூறியுள்ளதாவது:
ஒரு குறிப்பிட்ட வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரின் தூண்டுதலின் பேரிலேயே எனது பெயர் தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொழிலதிபர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழித்து விட்டு தனியார் செல்போன் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக பாடுபட்டு வருகிறார்.
டெண்டர் விவகாரம் தொடர்பாக எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. நான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது டெண்டர் விவகாரங்களில் தலையிட்டதே கிடையாது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமல்லாது, எம்.டி.என்.எல், நிறுவன டெண்டர் விவகாரங்களிலும் நான் தலையிட்டதில்லை. பி.எஸ்.என்.எல். வாரியம்தான் டெண்டர்களை முடிவு செய்யும்.
எனக்கு எதிராக திட்டமிட்ட, குறுகிய நோக்கத்துடன் கூடிய ஒரு சதித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பத்திரிக்கைகள் மற்றும் பிற மீடியாக்கள் மூலம் மக்கள் மனதில் என் மீதான சந்தேக விதைகளை தூவும் முயற்சி நடக்கிறது.
இதன் மூலம் எனது மதிப்பு, மரியாதை, நற்பெயரை கெடுக்க திட்டமிடப்பட்டு செயல்படுகிறார்கள். எனவே எனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகியுள்ள புகார் குறித்து பிரதமர் அலுவலகம் உடனடியாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின்போது நான் குறிப்பிட்டுள்ள வெளிநாடு வாழ் தொழிலதிபரின் தலையீடு குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
விரைவில் இந்த விசாரணையை நடத்தி எனது நற்பெயருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை துடைத்து, பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியார் கைக்குப் போவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்.