For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

11 தோட்டங்களைப் பிரிகிறேன்... கலாம் உருக்கம்திண்டுக்கல் பல்கலையிலும் பணியாற்ற திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:ராஷ்டிரபதி பவனில் நான் உருவாக்கிய 11 தோட்டங்களைப் பிரிகிறேன் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சோகத்துடன் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் கலாம், நேற்று பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் கலாம் தனக்கே உரிய பாணியில் படு உற்சாகமாக பதிலளித்தார்.

உங்களது பதவிக்காலத்தில் உங்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கிய இக்கட்டான சூழ்நிலை எது என்ற கேள்விக்கு கலாம் பதிலளிக்கையில், ஆதாயம் தரும் பதவிகளுக்கு விதி விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியதே எனது சோதனை நேரம் என்றார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களிலேயே ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்துக்கு மீண்டும் திருப்பி அனுப்பியவர் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் 2ம் முறை போட்டியிட விரும்பவில்லை என்ற கேள்விக்கு, ஒருமித்த எண்ணத்திற்குத்தான் நான் எப்போதுமே ஆதரவு அளிப்பேன். எனது பெயருக்கு ஒருமித்த ஆதரவு காணப்படவில்லை. எனவே நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. எனது பெயரை வைத்து ராஷ்டிரபதி பவன் அரசியலாக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றார் கலாம்.

அடுத்த கேள்விக்கு கலாம் பதிலளிக்கையில், யார் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் அவர் மக்கள் ஜனாதிபதியாகத்தான் இருக்க வேண்டும். ராஷ்டிரபதி பவன், மக்கள் பவனாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.

அப்சல் குருவின் கருணை மனு குறித்த கேள்விக்கு, அதில் பல நடைமுறைகள் உள்ளன. அவற்றை இன்னும் அப்சல் குரு தாண்டவில்லை என்றார்.

பேட்டியை முடிக்கும்போது, ராஷ்டிரபதி பவனின் 11 தோட்டங்களை நான் இழக்கப் போகிறேன். இருந்தாலும் என்ன, கற்பனையில் அதை நினைத்துக் கொண்டே இருப்பேன். கற்பனைகள் மிக அழகானவை என்றார் தனது வெள்ளைச் சிரிப்புடன் கலாம்.

மொகல் தோட்ட வளாகத்தில் கலாம் உருவாக்கியவைதான் இந்த 11 தோட்டங்களும். ஒவ்வொரு வகை மலர்கள், பழங்கள், மூலிகைகள் அடங்கியவை இந்த தோட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றவுள்ளார். அதுதவிர மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள கிராமியப் பல்கலைக்கழம், பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்தில் உள்ள வானவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கலாம் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளாராம்.

பேட்டிக்கு வந்திருந்த 150 பேருக்கும் கலாம் தேநீர் விருந்தளித்தார். பின்னர் ஒவ்வொரு செய்தியாளருக்கும் கை குலுக்கினார்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த அப்துல் கலாம்!

முன்னதாக கலாம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

2002ம் ஆண்டு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு விசிட் செய்தார் கலாம். அதேபோல பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள அவர் நேற்று மாலை 4 மணிக்கு உச்சநீதிமன்றம் சென்றார்.

அங்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகளை அவர் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த கலாம், நீதிபதிகளுடன் பேசினார். பின்னர் கலாமுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X