வெடித்துச் சிதறிய சிலிண்டர்-தீப்பிடித்து எரிந்தடாஸ்மாக் பார்-தெறித்து ஓடிய குடிமகன்கள்
தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை பாரில் காஸ் சிலண்டர் வெடித்துச் சிதறியது. இதில் பார் தீப்பிடித்து எரிந்தது. போதையில் நெளிந்து கொண்டிருந்த குடிமகன்கள், தீப்பிடித்ததைப் பார்த்ததும், போதை தெளிந்து எழுந்து ஓடி உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளராக ஜான் சாமுவேல் இருக்கிறார். கடைக்கு அருகே இவருக்கு வேண்டப்பட்ட சாலமன் என்பவர் பார் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 9 மணியளவில் பார் படு பிசியாக இருந்தது. குடிமகன்கள், கிளாஸும், சிப்ஸுமாக படு உற்சாகமாக சரக்குகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பக்கோடா போட்டுக் கொண்டிருந்தவரது அடுப்பில் காஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதையடுத்து பார் கொட்டகையில் தீப்பிடித்துக் கொண்டது.
இந்த தீவிபத்தில் சிக்கி இன்னொரு சிலிண்டரும் வெடித்துச் சிதறியது. இதனால் பார் முழுவதும் தீ பரவியது. தீயைப் பார்த்ததும், குடித்துக் கொண்டிருந்தவர்கள், போதை தெளிந்து அங்கிருந்து எழுந்து ஓடி உயிர் தப்பினர்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். பார் தீவிபத்தில் அருகில் இருந்த கடை எந்தச் சேதாரமும் இல்லாமல் தப்பியது.












Click it and Unblock the Notifications