
போலி அரசு அலுவலகம் நடத்தி வந்த ஐவர் கைது!
சென்னை:தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள், பல்கலைக்கழக, கல்லூரிகளின் மதிப்பெண் பட்டியல்கள் உள்ளிட்டவற்றை போலியாக அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
சென்னையின் வட பகுதியில் ஒரு கும்பல் போலியாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிட்டு விற்று வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்க இணை ஆணையர் ரவி மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
![]() |
இந்தக் கும்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய பத்திரப் பதிவாளர் அலுவலகம், ஆட்சித் தலைவர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாறு வேடத்தில் போலீஸார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த வேட்டையில் சில புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராமலிங்கம் என்பவர்தான் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிய வந்ததது. இதையடுத்து ராமலிங்கத்தைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் போலீஸார் சோதனை போட்டபோது ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டைகள், போலி ரேஷன் கார்டுகள் சிக்கின. பழனி என்பவர் இதைத் தனக்குத் தயாரித்துக் கொடுத்ததாக ராமலிங்கம் கூறினார்.
![]() |
இதையடுத்து அயனாவரத்தைச் சேர்ந்த பழனியை போலீஸார் மடக்கினர். அவரது வீட்டுக்குப் போலீஸார் போனபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அது வீடு போல இல்லை, ஒரு அரசு அலுவலகம் போலக் காணப்பட்டது.
பல்வேறு நபர்கள் போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கும் பணியில் படு மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். டேபிள், சேர்கள் போட்டு ஆளாளுக்கு ஒரு பிரிவை ஒதுக்கி விட்டது போல வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள், பிரபலமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் போலி மதிப்பெண் பட்டியல்கள், பட்டங்கள், சாதிச் சான்றிதழ்கள், டி.சி., உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
நிஜ சான்றிதழ்களை மிஞ்சும் அளவுக்கு படு தத்ரூபமாக போலிச் சான்றிதழ்கள் இருந்தன. அரசு வழங்கும் சான்றிதழ்களில் இடம் பெற்றுள்ள ஹோலோகிராம் முத்திரை சகிதம் படு பக்காவாக அவை அச்சடிக்கப்பட்டிருந்தன.
![]() |
இதுதவிர நூற்றுக்கணக்கான அரசு முத்திரைகளுடன் கூடிய ரம்பர் ஸ்டாம்புகளும் குவிந்து கிடந்தன. கடந்த ஐந்து வருடங்களாக இந்த போலித் தொழிலை செய்து வருகிறார் பழனி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த அலுலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், சிடிக்கள், ஸ்கேனிங் இயந்திரம், பிரிண்டர்கள், டைப் ரைட்டர், போலி ரப்பர் ஸ்டாம்புகள், போலிச் சான்றிதழ்கள், பிற ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பழனி, ராமலிங்கம் தவிர அவர்களுக்கு உடந்தையாக இருந்த சேப்பாக்கம் சுந்தரபாண்டியன், ராயப்பேட்டை தனசேகரன், ராயபுரம் பெருமாள் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டார். இந்த வேட்டையை நடத்திய இணை ஆணையர் ரவி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆரம்பத்தில் இந்தத் தொழிலை ஆறுமுகம் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவர்தான் செய்து வந்தனர்.
அப்போது அவர்களுக்கும், தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறையில் உவியாளராக வேலை பார்த்து வந்த பழனிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பழனியுடன் உதவியுடன் ராஜமாணிக்கமும், ஆறுமுகமும் இதை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் இறந்து விடவே, பழனி இத்தொழிலை ஏற்றுக் கொண்டு தொடர்ந்தார்.
தனியாக ஒரு கும்பலை உருவாக்கி மாநிலம் முழுவதும் இந்த போலி சான்றிதழ்களை புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு ஒருமுறை சிபிசிஐடி போலீஸார் இவரைக் கைது செய்தனர். இதையடுத்து அரசுப் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதன் பின்னர் 2002ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த முறை சென்னை போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இந்த போலி சான்றிதழ் தயாரிக்கும் தொழிலில் அவர் பல லட்சம் சம்பாதித்துள்ளார். மாதவரத்தில் அவருக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான வீடு உள்ளது.
தனது கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு வேலையை ஒதுக்கிக் கொடுத்து அரசு அலுவலகம் போலவே இந்த போலி சான்றிதழ் தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.
சான்றிதழின் மதிப்புக்கேற்ப, ஒவ்வொன்றுக்கும் ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை விலை வைத்து விற்று வந்துள்ளார். இந்த கும்பல் மூலம் 6000 போலி கல்விச் சான்றிதழ்கள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவற்றைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த அச்சகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும், இவர்களின் சான்றிதழ்களை வாங்கி தமிழகம் முழுவதும் விநியோகித்த புரோக்கர்களையும் கைது செய்வோம் என்றார் ரவி.