For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்று சங்கம், இன்று பிபிஓ-சாப்ட்வேர்;மாறி வரும் மதுரை-ரியல் எஸ்டேட் கிடுகிடு!!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிபிஓ, சாப்ட்வேர் நிறுவனங்களின் திடீர் பெருக்கத்தால், ரியல் எஸ்ட்டே தொழில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஏதாவது ஒரு திட்டம் வருகிறது என்றாலே அது சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் அமலாகும். விழுப்புரத்தைத் தாண்டி எந்த பெரிய திட்டமும் வருவது வழக்கமில்லை.

பல ஆண்டுகளாகவே இந்த நிலைதான். சாப்ட்வேர் துறையிலும் கூட சென்னைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது அரசு. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. சென்னையைத் தாண்டியும் கூட பல முக்கிய தொழில்கள் வர ஆரம்பித்துள்ளன.

(இதற்கு தயாநிதி மாறனுக்கும் அவரை சில வருடமாவது அமைச்சராக வைத்திருந்த திமுகவுக்கும் ஒரு நன்றி சொன்னால் தப்பில்லை.)

அந்த வகையில் பிபிஓ நிறுவனங்களை சென்னையில் மட்டும் குவித்து வைக்காமல் பிற முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் அவற்றை உருவாக்க திமுக அரசு திட்டமிட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள டைடல் பூங்காவைப் போல இந்த நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டது.

அதன் முதல் படியாக, கோவையில் பிரமாண்டமான சாப்ட்வேர் பூங்கா உருவாகி வருகிறது. அடுத்து மதுரையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இன்னும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கவில்லை.

ஆனால் ஏற்கனவே பல சாப்ட்வேர் நிறுவனங்கள் மதுரையில் மையம் கொள்ள ஆரம்பித்து விட்டன. இன்று பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள். அதிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருப்பார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு மதுரையில் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் முகாமிட ஆரம்பித்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பே ஹனிவெல் நிறுவனம் மதுரையில் கிளை பரப்பி கோலாகலமாக நடந்து வருகிறது. தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு அருகே இந்த நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்திற்கு சென்னையில் கூட கிளை கிடையாது. பல நாடுகளில் தனது கிளையை வைத்துள்ள ஹனிவெல் நிறுவனம் மதுரையில் கிளை பரப்பியுள்ளது, மதுரை பக்கத்து பொறியியல் மாணவர்களுக்கு கிடைத்த கெளரவம் என்று கூட சொல்லலாம்.

தற்போது மேலும் சில பிரபலமான சாப்ட்வேர் நிறுவனங்கள் மதுரையை நோக்கி படையெடுக்கக் காத்துள்ளன.

இதன் காரணமாக மதுரையில் ரியல் எஸ்டேட் பிசினல் படு ஜோராக நடந்து வருகிறது.

மதுரையின் புறநகர் பகுதிகளில் அதுவும் முக்கியமாக உயர்நீதிமன்ற கிளை உள்ள வைகையின் வடகரை பகுதிகளில்தான் நிலங்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்தப் பகுதியில் தான் மதுரை மாநகரின் ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மேலும் சென்னைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் இங்குதான் உள்ளதால் இந்தப் பகுதிதான் அனைவருக்கும் பிடித்தமான ஹாட் கேக் ஆக உள்ளது.

இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ, காக்காவைக் கூட பார்க்க முடியாது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில், குறிப்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வந்த பின்னர் இப்பகுதியில் நிலங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.

தற்போது இப்பகுதியில் ஒரு ஏக்கர் 1 கோடி ரூபாய் என்ற அளவிற்கு விலை எகிறியுள்ளது, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை ஆச்சரியத்திலும், மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

வைகை தென்கரை:

இதேபோல மதுரை காமராசர் பல்கலைப்பழகம் அமைந்திருக்கும் மதுரையின் தெற்கு பகுதியான நாகமலை புதுக்கோட்டை பகுதியிலும் ரியல் எஸ்டேட் பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது.

மதுரைக்கு வரவுள்ள சாப்ட்வேர் பூங்காவை இப்பகுதியில்தான் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக, தோப்பும், துறவுமாக படு அமைதியாக, ரம்யமாக இருந்த இந்தப் பகுதியில், பிரம்மாண்டமான கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்டுவதற்கு பெரிய நிறுவனங்கள் நிலங்களை வாங்கியுள்ளன. வெகு விரைவில் இந்தப் பகுதி வயல், வரப்புகளே இல்லாத, கான்க்ரீட் காடாக மாறும் வாய்ப்புள்ளது.

மதுரையில் உயர்வகை குடியிருப்புகளின் (ஃபிளாட்) விலைகள் தற்போது சதுர அடி ரூ.1000-2000 என்ற அளவில் உள்ளது. வாடகை வீடுகள் என்றால் இருக்கும் இடத்தின் முக்கியத்துவத்தை வைத்தே நிர்ணயம் செய்கின்றனர்.

இதனால் பல நிறுவனங்கள் குடியிருப்பு திட்டங்கள் மூலம் வர்த்தக வாய்ப்புகளை முழு அளவில் பயன்படுத்தி வருகின்றன.

இன்னும் சில வருடங்களில், சென்னையைப் போல, மதுரையைச் சேர்ந்த சாதாரண மக்கள் வீடு, நிலம் வாங்குவதை கனவில் தான் காண முடியும் என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X