For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறை சொல்லும் ராமதாஸ்: வீராசாமி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு தயாரித்து புதிய தொழிற்கொள்கை குறித்து டாக்டர் ராமதாஸ் மட்டும் குற்றம் சொல்கிறார் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை,

தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கை குறித்து கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் மூத்த அமைச்சர்களைக் கொண்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு பல முறை கூடி விவாதித்தது. அதன் பின்னர் தான் புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த கொள்கையை தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எல்லாம் ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் பாராட்டினார்கள். யாரும் ஒரு சிறு குறையைக் கூட சுட்டிக் காட்டவில்லை.

தொழிற் கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே புதிய தொழிற் கொள்கையை தோழமைக் கட்சித் தலைவர்களுக்கெல்லாம் உடனடியாக நகல்களை அனுப்பும்படி முதல்வரே தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அவ்வாறு அனுப்பப்பட்ட 33 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை நம்முடைய முக்கிய தோழமைக் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் படித்துவிட்டு, அதிலேயுள்ள சாதகங்களையும், பாதகங்களையும் தொகுத்து ஒரு நீண்ட கட்டுரையாக அனைத்து நாளிதழ்களுக்கும் வழங்கியிருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தொழிலதிபர்களும் பாராட்டிய இந்தப் புதிய தொழிற் கொள்கையில் டாக்டர் ராமதாஸ் எப்போதும் போல் சாதகங்களை விட பாதகங்கள் தான் அதிகமாக இருக்கிறதென சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய தொழிற் கொள்கையில் உள்ள சாதகங்களையெல்லாம் டாக்டர் பாராட்டியிருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தொழில்துறை வகுக்கும் அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஓர் உறுப்பினர் என்ற முறையில் டாக்டரின் சந்தேகங்களுக்கு நான் விடையளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

வேலைவாய்ப்பை உருவாக்குவது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று முக்கியமாக டாக்டர் கூறியிருக்கிறார். தொழிற் கொள்கையில் 2011ம் ஆண்டிற்கு 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்கொள்கை வேளாண் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு பாதிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

அந்த புத்தகத்தில் 6ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள, தனியார் நிறுவனங்கள் தாங்கள் அமைக்கும் தொழிற் பூங்காக்களுக்கான நிலத்தை நேரடியாக வாங்க வேண்டும். அத்தகைய பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படும் நிலங்கள் முடிந்தவரை வறண்ட, பாசனமற்ற, புன்செய் நிலங்களாக இருக்க வேண்டும். 10 சதவீதத்திற்கும் மேலான நன்செய் நிலங்கள் உள்ள செயற் குறிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது என்ற வரிகளை டாக்டர் அவசரத்தில் சரியாகப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன்.

அது மட்டும் கிடையாது, இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்குவது பற்றிய கொள்கை விரிவாக விவாதிக்கப்படவும் உள்ளது என்பதையும் அவருக்கு நான் தெரிவிக்கக் கடமைபட்டிருக்கிறேன்.

தனியார் சாப்ட்வேர் பூங்காக்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் அபரிதமான ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், நில உச்சவரம்புச் சட்டம் மீறப்படுவதற்கு வழி வகுக்கும் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

தொழிற் தொடங்குவதில் தற்போது இந்தியாவிலே உள்ள ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக் கொண்டு அதிக சலுகைகள் வழங்கி தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முனைப்பு காட்டி வருகின்ற இந்த வேளையில் நாமும் ஓரளவிற்காவது சலுகைகளை கொடுத்தால் தான் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் வருவார்கள்.

மத்திய அரசு சிறப்பு பொருளாதார மையங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது குறித்து கொள்கை முடிவுகளை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தனியார் சிறப்பு பொருளாதார மையங்களுக்கு தமிழக அரசு சலூகைகளை வழங்கி வருகிறது. நில உச்ச வரம்பச் சட்டம் மீறப்படுவதற்கு வழி வகுக்கும் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தத் தொழில் கொள்கை உயர்ந்த தொழில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக உள்ளதென்றும், தொழில் தேர்ச்சி இல்லாத பரந்த உழைக்கும் மக்களுக்கு ஆதாயம் அளிக்கும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் இல்லையென்று டாக்டர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தொழிற் கொள்கை பெரிய தொழில்களைப் பொறுத்த ஒன்றாகும். சிறு தொழில்களைப் பற்றி தனியாக வேறொரு தொழிற் கொள்கையும் விரைவில் வெளிவரவுள்ளது என்பதை டாக்டர் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X