For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை இளைஞரணி மாநாடு்-கருணாநிதி பெருமிதம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhiசென்னை: நெல்லையில் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாடு இளைஞர் சமுதாயத்திற்கு புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொடர் கட்டுரை வரிசையினை நான் ஒன்றும் இளைஞர்களைப் பற்றி எழுத வேண்டுமென்ற திடீர் அக்கறை காரணமாக எழுதவில்லை. இளைஞர்களால் தான் லட்சிய வெறியுடன் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் இந்த பரந்த உலகில் பல்வேறு நாடுகளில் இளம் வயதில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று சான்றுகள் என் நெஞ்சில் நிழற்படங்களாக விரிந்து கொண்டிருக்கிறது.

நெல்லையில் மாநில இளைஞரணி மாநாடு நடைபெறுகின்ற இந்த மகத்தான சமயத்தில் நான் இங்கே தரும் சரித்திர குறிப்புகள் வளரும் இளைஞர் சமுதாயத்திற்கு புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்.

அந்த வரிசையில் எத்தனை தலைவர்கள் - எத்தனை எத்தனை வித்தகர்கள் - எத்தனை எத்தனை மேதைகள் - எத்தனை எத்தனை விற்பன்னர்கள் விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போன்று, தங்கள் வாழ்க்கையை எதிர்கால இளைய தலைமுறையினருக்கு வயலாகவும், எருவாகவும் ஆக்கித் தந்திருக்கின்றார்கள்.

அந்தக் கொள்கை சிங்கங்கள் கடந்து வந்த கல்லும் முள்ளும் நிறைந்த வழிகள், காட்டாறுகள், கள்ளிக்காடுகள், வீசிய புயல்கள், அதிர்ந்த பூகம்பங்கள் - இவற்றையெல்லாம் கடந்து நடத்திய தீரமிகு பயணங்களை - அந்த உலகம் போற்றும் உயர்ந்த மனிதர்களை - வெற்றியாயினும், தோல்வியாயினும் தலை வணங்காமல் அவர்கள் சந்தித்த நெஞ்சு நிமிர்த்திடும் நிகழ்வுகளாயினும் - அனைத்தையும் இந்த நேரத்தில் உன் போன்ற உடன் பிறப்புக்களுக்கு - ஒரு கிண்ணத்தில் உள்ள பாலையோ, தேனையோ அப்படியே பிள்ளையின் வாயில் கொட்டிவிட வேண்டுமென்று எண்ணுகின்ற தாயைப் போல் இல்லாமல், படிப்படியாக மனதில் பதிய வைக்கின்ற பாடங்களாக விளங்க வேண்டும் என்பதற்காகத் தான் வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையின் உண்மைக் கதைகளை சொல்கின்றேன்.

பிடல் காஸ்ட்ரோ:

ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக்குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர்.

கியூபா மண்ணின் நெஞ்சம் நிறைந்த அந்தத் தலைவனைப் பற்றியும் அவன் நடத்திய போராட்டத்திற்கு துணை நின்ற தளபதிகளாக இருந்தோர், பொறுமை காத்து பொறுப்பேற்றோர் ஆகிய இவர்களைப் பற்றியும் அந்தக் கியூபா நாட்டின் பெருமை போற்றும் விழா ஒன்று 2006ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற்ற போது அந்த மாநாட்டில் நான் வழங்கிய கவிதையில் சில வரிகளை மட்டும் இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

புரட்சிக்கனல்:

உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச்
சொந்தக்காரர்!

இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயக வாதியாகவும்
இரட்டை வேட அரசியல் நடத்திய பாடிஸ்டா எனும் பசுத்தோல்
வேங்கை;
அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர்
அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;
நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" எனும்
வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில்
வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!

சேகுவாரா:

பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் -
பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு;
ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில்
சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது - அந்த
சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!

தங்கத் தம்பியாம் ராவ் காஸ்ட்ரோவையும், தம்பி போன்சேகுவேராவையும்,
அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே;
பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி - இனி
கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று
நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு;
நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு!

கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி
காட்டியானார்!

கடமையும் பொறுப்பும் வந்தவுடன்
கடந்த காலத்தை மறந்து விடாமல்;
சோதனைகளை சந்தித்து மறைந்த
ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும்,
சாதனைகள் புரிந்து மறைந்த
சிபாசின் வழிகாட்டுதலுக்கும்,
மதிப்பும் மரியாதையும் அளித்திட
மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!

மக்களின் மகத்தான சக்தி
கியூபா சின்னஞ் சிறிய நாடு
ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு!
தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம்
கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் - அந்தக்
கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!

நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் - மக்கள்
நலம் பெருக்கும் சாதனைகள் பலவும்
இல்வாழ்வையும் துறந்து
இலட்சியத்துக்காக வாழ்ந்திடும் காஸ்ட்ரோவின்
புகழ்மிகு வரலாற்றின் பொன்னேடுகளாய்
புதிய புதிய பக்கங்களாய்ப் புரண்டு கொண்டேயிருக்கின்றன.
உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப் பேசுமளவுக்குக்
கரும்பு வயல்களைக் கொண்ட கியூபாவில்
சர்க்கரை வாங்குவதையே நிறுத்தி பொருளாதாரச்
சரிவு ஏற்படுத்த அமெரிக்கா ஆயத்தமானபோது;
சீனாவும், சோவியத்தும் தான் சிநேக நாடுகளாய்க்
காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்த கதை உலகறியும்!

"வாழை தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால்
யானை முறித்துப் போட்டு விடும்
அந்த யானை போன்றதே அமெரிக்கா" என்றனர்.
அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை.
வாழை மரம், தென்னை மரங்களை; யானை,
வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக!

ஆனால் அங்குசத்தை யானை விழுங்க முடியுமா?
அங்குசந்தான் கியூபா; அமெரிக்க யானைக்கு!

வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு நடந்த போது - பல
நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில்
முப்பத்திரண்டு வயது நிரம்பிய சிவப்பு நட்சத்திரமாக
முதுபெரும் தலைவர்களால் பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ
முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா -
அடுத்த கட்டம் அமெரிக்காவின் காலுக்கு அணியாக
ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த போது;
அது தான் முடியாது; அந்தக் காலையே முடமாக்குவோமென்று -
மக்களைத் திரட்டினார் பிடல் காஸ்ட்ரோ -
மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள்;
பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடினர் என்றால்; அது
பிடல் காஸ்ட்ரோவின் உறுதிக்கும் - அவரைப்
பின்பற்றும் மக்களின் மகத்தான சக்திக்கும்;
பின்பலமாய் மார்க்சின் தத்துவம் இருப்பதற்கும் -
அடையாளம் என்பதை இந்த அவையோரும் அறிவீர்
அடியேனும் அறிவேன் -

இவ்வாறு அந்த மாநாட்டில் என்னால் புகழப்பட்ட பிடல் காஸ்ட்ரோ, அவரது 21வது வயதில் ஹவானா தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தார். பிடல் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், உயரம் தாண்டுவதிலும் பிறரைத் தோற்கடித்தவர். எனவே, மாணவர்கள் மத்தியில் கவர்ச்சியுள்ள ஒருவராகவே இருந்தார்.

ஆனால், நான்கு பேரோடு சேர்ந்து வேலை செய்யும் பக்குவம் பெறாதவராக இருந்ததால், அவர் தனித்தே நடமாடிக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் மாணவர்கள் உட்பட எல்லோரும் அவருடன் நட்பாகப் பழகுவது வழக்கம். பிடல் சட்டக் கல்லூரியில் இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படிக்கும் வழக்கமுடையவராக இருந்தார். இந்த பருவத்தில் அவர் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் நூல்களை நிறையப் படித்தார்.

ஆர்த்தோடக்சோ கட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் பிடல் போய் வந்தார். இளைஞர்கள் கூட்டம் இவரைச் சுற்றியே வளையமிட்டது. இந்தத் தேர்தல் நாடகங்கள் மூலம் கியூபாவை என்றைக்கும் விடுவிக்க முடியாது. இப்போதுள்ள அரசியல் சட்டத்தை வைத்துக் கொண்டு எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. புரட்சி ஒன்றுதான் வழி. புரட்சியின் மூலம் அமையும் அரசினால்தான் ஏழைகளை வாழ்விக்க முடியும் என்று பேசி வந்தார்.

ஆர்த்தோடக்சோ கட்சியின் முக்கியப் பிரச்சாரம் செய்பவர்களில் இவரும் ஒருவராக ஆனார். பின்னர், ஆர்த்தோடக்சோ கட்சியை விட்டு விலகி புரட்சிகர இளைஞர் குழுக்களை உருவாக்கினார்.

சான்டியாகோ நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த, மொன்கடா இராணுவ முகாமை 123 போராளிகளுடன் தாக்குதல் நடத்தியபோது பிடல் காஸ்ட்ரோவுக்கு 27 வயதுதான். அந்த தாக்குதல் தோல்வியுற்று மலைகளில் தலைமறைவாக அலைந்தபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் தானே வழக்கில் வாதாடினார். காஸ்ட்ரோவை விசாரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்றம் ஒரு ராணுவ நீதிமன்றம். இவர் நீதிமன்றத்தில், நீதிபதி அவர்களே, இப்பொழுது நடைபெறும் அரசு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. இது சட்டவிரோத அரசு. நானும் எனது தோழர்களும் இதனை எதிர்க்கிறோம்.

பள்ளியில் படிக்கும்போது தாய்நாட்டை நேசிக்கும்படி கற்பிக்கப்பட்டோம். சட்டம் பயிலும் போது சட்ட மீறுதலை எதிர்க்க கற்பிக்கப்பட்டோம். இதன்படி சட்ட விரோத அரசை, தூக்கியெறியப் போராடினோம். எங்களுக்கு ராணுவ சர்வதிகாரியை தூக்கியெறிய வழியில்லாமல் போய்விட்டது.

தேர்தல் நடந்திருந்தால் தேர்தல் மூலம் தோற்கடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும். தேர்தலை ரத்து செய்துவிட்டார். நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். நாட்டையும், மக்களையும் காக்க நாங்கள் போராடுகிறோம் என்று பிடல் காஸ்ட்ரோ வாதாடியது இன்றைக்கும் புகழ்பெற்று விளங்குகின்றது.

நீதிமன்றத்தில் காஸ்ட்ரோ வெளிப்படுத்திய கருத்துகளால் அவரது புகழ் கியூபா முழுவதும் பரவியது. பலர் விடுதலை பெற்றனர். ஆனாலும், காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினர். சிறை அமைந்த பைன்ஸ் தீவு, கியூபாவின் கடலில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்திருந்தது.

தன்னையும், தனது தோழர்களையும் தயாரித்துக் கொள்ளும் இடமாக இந்தச் சிறை வாழ்க்கையை பிடல் மாற்றி அமைத்துக் கொண்டார். மக்களிடம் ஏற்பட்ட மாபெரும் எழுச்சியால் பிடல் 1955ம் ஆண்டில், அதாவது அவரது 29வது வயதில் விடுதலை செய்யப்பட்டார்.

பைன்ஸ் தீவுச் சிறையிலிருந்து மீண்ட பிடல் காஸ்ட்ரோ மெக்சிகோ சென்றார். அங்கிருந்தபடியே புரட்சிக்குத் தயார் செய்தார். ஆள் வசதி, பண வசதி எதுவுமின்றி தன்னம்பிக்கையுடன் இயங்கி கியூபாவிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் நிதியையும் ஆட்களையும் திரட்டினார். கியூபா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று இடங்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற குழுக்களை உருவாக்கினார்.

1956, நவம்பர் 26ம் தேதி கிரான்மா என்ற படகில் 81 பேர் ஆயுதங்களுடன் கியூபா வந்து சேர்ந்தனர். ராணுவ முகாமைத் தாக்கி பாடிஸ்டா ராணுவத்திற்கு பெரும்சேதத்தை விளைவித்தார். பாடிஸ்டா ராணுவத்தினரே பிடலுக்கு ஆதரவாக திரண்டனர். பிடல் காஸ்ட்ரோ தலைமையிலும், அவரது தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆருயிர் நண்பன் சேகுவாரா ஆகியோர் தலைமையிலும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து போரிட்டு சான்டியாகோவைக் கைப்பற்றி ஹவானா நோக்கி முன்னேறினர்.

1958, டிசம்பரில் பாடிஸ்டா நாட்டை விட்டு ஓடினார். புரட்சி வெற்றி அடைந்தது. பிடல் தனது முப்பத்தி இரண்டாவது வயதில் பிரதமராகப் பொறுப்பேற்றார். இவ்வாறு அந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் புரட்சிக்காரராக மலர்ந்து மணம் கமழத் தொடங்கினார்.

அந்த மாவீரன் இன்று வாழ்கிறார் என்றாலும் வாடிக் கொண்டு தான் இருக்கிறார். அவருடைய உடல்நலிவு காரணமாக. நலிவு நீங்கி நாடு மதித்திட நானிலம் போற்றிட அவருக்கு வாழ்த்துச் சொல்லி, அவரது உயிருக்குயிராய் இருந்த உத்தமத் தோழர் சேகுவாராவின் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்களை புரட்டிக் காட்டாவிட்டால் கியூபாவின் புரட்சி வரலாறு முழுமையானதாக ஆகாது என்பதால் அந்த உத்தமத் தோழரைப் பற்றியும் ஒருசில வார்த்தைகளை நாளை சொல்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X