For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெற்ற துணைவேந்தர், மனைவி, காவலாளி கொலை: 2 கூலிப்படையினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர், அவரது மனைவி மற்றும் அவரது வீட்டு காவலாளி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் பட்டகசாலியன்விளையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது (75). மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் விஞ்ஞான பெயரீட்டு கழக தலைவராக இருந்தவர். கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

இவரது மனைவி கதிஜா பீவி (70). மாலிக் முகமதுவுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாலிக் முகமதுவும், அவரது மனைவி கதிஜா பீவியும் பட்டகாசலியன்விளையில் பெரிய பங்களாவில் தனியாக வசித்து வந்தனர்.

இவரது வீட்டில் காவலாளியாக மறவன்குடியிருப்பை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் மாலிக் முகமதுவும், காவலாளி ஞானப்பிரகாசமும் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். பிரேத பரிசோதனையில் இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கதீஜா என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

டி.எஸ்.பி (பொறுப்பு) ஸ்டேன்லி மைக்கேல் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். கொலைகள் நடந்து 4 நாட்களுக்கு பிறகே தெரிய வந்ததால் கொலை நடந்த வீட்டில் இருந்து எந்த ஆதாரங்களும் போலீசுக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து முதலில் கதிஜாவை தேடும் பணியில் போலீசார் இறங்கினர்.

மாலிக் முகமதுவையும், ஞானப்பிரகாசத்தையும் கொன்ற கும்பல் பணத்திற்காக கதிஜாவை கடத்தி சென்று இருக்கலாம் என போலீசார் கருதினர். 4 நாட்கள் ஆகியும் அவரது நிலை என்னவென்று தெரியததால் போலீசார் மிகுந்த குழப்பமடைந்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கருகிய நிலையில் பெண் உடல் கிடப்பதாக போலீசார் கடந்த 10ம் தேதி வழக்கு பதிவு செய்திருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.

அவர் கதிஜாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை போலீசார் ஒலக்கூர் விரைந்தனர். இதில் கருகிய நிலையில் கிடந்தது கதிஜாதான் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்தானா என்பதை உறுதிபடுத்துவதற்காக கதிஜாவின் உறவினர்கள் சிலரையும் போலீசார் அழைத்து சென்றிருந்தனர்.

கதிஜா பீவி கடத்தப்பட்டு உயிரோடு இருக்கலாம் என்று கடந்த 3 நாட்களாக அவரது உறவினர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவரும் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலைக் கேட்டு உறவினர்ள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று மாலிக் முகமது வீடு முழுவதும் சோதனை நடந்தது. இதில் அவர் வைத்திருந்த பணம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் அப்படியே இருந்தன. சொத்து பத்திரங்கள், வங்கி கணக்குகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இருவர் கைது:

கொலை சம்பவம் தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர்களை போலீஸார் நாகர்கோவில் கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னையில் கைதானவரிடமிருந்து மாலிக் முகமதுவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாலிக்முகமதுவின் உறவினர் ஒருவர் தான் கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்ய சொன்னதாக தெரிய வந்துள்ளது. 4 பேர் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றம் செய்துள்ளார்கள்.

சொத்துக்காக கொலை:

மாலிக் முகமதுவுக்கு சொந்தமான நிலமொன்று சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலம் விற்றது தொடர்பாக அவரின் உறவினருக்கு பங்கு தொகை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாலிக் முகமதுவை தீர்த்து கட்ட முடிவு செய்த அந்த உறவினர் நாகர்கோவிலை சேர்ந்த கூலிப்படையினரை அழைத்து கொண்டு மாலிக்கின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

மாலிக்கையும், அவரது காவலாளியையும் கொலை செய்த அவர்கள் அப்போது வீட்டில் இல்லாத கதீஜா பீவி வீட்டிற்கு வரும்வரை காத்திருந்து அவர் வந்தவுடன் அவருடைய காரில் அவரை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ஒலக்கூர் ஆற்று பாலத்தில் வீசி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒரு பகுதியினர் 2 நாட்களில் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X