For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 220 கிலோ நபருக்கு எடைக் குறைப்பு ஆபரேஷன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விஜயவாடாவைச் சேர்ந்த 220 கிலோ எடை கொண்ட மனிதருக்கு, சென்னை மருத்துவமனையில் வயிற்றின் அளவைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சை நடந்தது.

விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஜோஷி குமார் ஜெட்டி. இவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். லைட் ஆப் ஹோப் ஹோம் என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். இங்கு 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

ஜெட்டியின் குடும்பத்தினர் அனைவருமே மிகவும் பருமனானவர்கள். ஜெட்டியும் மிகவும் பருமனானவர். அவரது உடல் எடை 220 கிலோவாகும்.

குழந்தைகளைப் பராமரிப்பதிலேயே மிகுந்த கவனம் செலுத்தி வந்த ஜெட்டி, தனது உடல் எடையைக் குறைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் எடை நாளுக்கு நாள் அபாயகரமான அளவைத் தாண்டியது.

இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள அம்மா மருத்துவமனையில் உடல் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை நடைபெறுவது குறித்து அவருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தனது நண்பர்களின் உதவியோடு அவர் சென்னைக்கு வந்தார். விஜயவாடாவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கடந்த 17ம் தேதி அழைத்து வரப்பட்டார் ஜெட்டி.

ஆனால் மருத்துவமனை வந்து சேர்ந்த அவரை ஆம்புலன்ஸிலிருந்து உள்ளே அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய சரக்கு முனையத்திலிருந்து பாட்டரி பொருத்தப்பட்ட டிரக் வரவழைக்கப்பட்டது.

அந்த வாகனத்தில் அமர வைக்கப்பட்ட ஜெட்டி, பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதனைகள் முடிந்த பின் ஆபரேஷன் தியேட்டருக்கும் அதே வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 20ம் தேதி டாக்டர் டி.சுரேஷ் தலைமையிலான குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்தனர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரை பாட்டரி பொருத்தப்பட்ட கிரேன் மூலம் வார்டுக்கு மாற்றினர். அங்கு தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஜெட்டி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்டிக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்த்மா, மூட்டு வலி, ஆரம்ப கட்ட சர்க்கரை வியாதி ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அவருடைய இரு கால் மூட்டுக்களின் நரம்புகளும் மிகவும் பலவீனமாக இருந்ததால் அவரால் நடிக்கக் கூட முடியவில்லை.

இதையடுத்து முதலில் உயர் ரத்த அழுத்தத்தை டாக்டர்கள் கட்டுப்படுத்தினர். பின்னர் ஆபரேஷன் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடந்த ஆபரேஷனுக்குப் பின்னர் ஜெட்டியின் உடல் எடை 12 கிலோ குறைக்கப்பட்டது.

அதி நவீன லேப்ராஸ்கோப்பிக் தொழில்நுட்பம் மூலம் ஜெட்டியின் வயிற்றுப் பகுதியில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு துளையிடப்பட்டு, அவரது வயிற்றுப் பகுதியின் அளவு குறைக்கப்பட்டது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஜெட்டி குணமடைந்து விடுவார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் செய்யப்பட்டுள்ள ஆபரேஷனால், ஜெட்டியால் வழக்கமான அளவுக்கு உணவு உட் கொள்ள முடியவில்லை. இதனால் இன்னும் 10 அல்லது 12 மாதங்களில் அவரது உடல் எடையில் 75 கிலோ முதல் 80 கிலோ வரை குறைந்து விடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X