For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரக்தியில் மலேசிய தமிழர்கள்: மனித உரிமை ஆணையம்

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் மலேசியத் தமிழர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். இதன் வெளிப்பாடுதான் அவர்களின் போராட்டம் என்று மலேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேராசிரியர் கூ கே கிம் கூறியுள்ளார்.

மலேசியத் தமிழர்களின் போராட்டம் குறித்து கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூ கூறுகையில், இந்திய சமுதாயத்தினர், குறிப்பாக தமிழர்கள் மலேசியாவில் பெரும் பாரபட்சத்திற்கு ஆளாகியுள்ளனர். நாடு சுதந்திரமடைந்ததற்கு முன்பும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிய பிறகும் அவர்களின் நிலை மாறவில்லை.

பெரும் விரக்தியில் அவர்கள் உள்ளனர். அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பவிடவில்லை. இதனால்தான் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள பிற இனத்தவரோடு ஒப்பிடுகையில் இந்திய வம்சாவளியினர் மகா மோசமான நிலையில் உள்ளனர். தமிழர்களின் போராட்டம் புறக்கணித்து விடக் கூடியதோ அல்லது கேலி செய்து பேசக் கூடியதோ அல்ல. அவர்களின் போராட்டத்திற்குக் காரணம் உள்ளது. இது இன துவேஷத்துடன் பார்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல.

அதேசமயம், தமிழர்களின் இன்றைய நிலைக்கு மலேசிய அரசை ஒட்டுமொத்தமாக குறை கூறி விட முடியாது. இந்திய வம்சாவளியினருக்காக உழைக்கும் கட்சிகள் என்று கூறும் கட்சிகளையும் அவர்கள் பார்க்க வேண்டும். அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதை யோசிக்க வேண்டும்.

இந்தியர்களுக்காக உழைக்கும், பாடுபடும் கட்சி என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கூறுகிறது. அப்படியானால், இந்தியர்களின் இன்றைய நிலையை சரி செய்ய அது என்ன செய்தது. இந்தியர்கள் மட்டுமல்லாது, பிற இனங்களைச் ேசர்ந்த கட்சிகளும் கூட அந்தந்த இனத்தினரை முழுமையாக மேலே தூக்கி விடவில்லை.

அமைதியான முறையில், கூடி தங்களது எதிர்ப்புகளையும், அதிருப்தியையும் வெளிக்காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்று ஐ.நா. மனித உரிமை சாசனம் கூறுகிறது. இந்த சாசனத்தை மலேசிய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் தமிழர்களின் போராட்டமும் கூட நியாயமானதுதான்.

அமைதியான முறையில் நடக்கும் ஊர்வலங்களையும், கூட்டங்களையும் கலைக்க, குலைக்க தேசிய பாதுகாப்பு என்ற பெயரை பயன்படுத்துவது அரசுகளின் வாடிக்கைதான். அதைத்தான் இப்போது மலேசிய அரசும் செய்துள்ளது என்றார்.

இதேபோல மலேசிய அரசின் நடவடிக்கையை மலேசிய பார் கவுன்சில் தலைவர் அம்பிகாவும் குறை கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

அமைதியான முறையில் நடந்திருக்க வேண்டிய தமிழர்களின் கூட்டத்தை மலேசிய போலீஸார் தேவையில்லாமல் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வன்முறையில் முடித்துள்ளனர்.

தேவையில்லாமல் போலீஸார் தங்களது பலப் பிரயோகத்தை காட்டியுள்ளனர். இங்கிலாந்து தூதரகம் நோக்கி வந்தவர்கள் எந்தவித வன்முறையிலும் ஈடுபடவில்லை. அசம்பாவதத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை. அப்படி இருக்கையில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைத்தது ஏன்.

இந்திய சமுதாயத்தினரின் குறைகளை மலேசிய அரசு பரிவுடன் கவனிக்க வேண்டும். அவற்றைத் தீர்க்க முன்வர வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைதியான முறையில் கூடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அது குடிமக்களின் உரிமையும் கூட. ஆனால் அதை மலேசிய அரசும் , காவல்துறையும் மீறியுள்ளன.

தனது மக்களின் குறைகளை பரிவுடனும், கணிவுடனும் கேட்டு அதை நிவர்த்தி செய்வதே ஒரு நல்ல அரசுக்கு அழகு என்று கூறியுள்ளார் அம்பிகா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X