For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஒப்பந்தம் நிறைவேறும்: பிரணாப்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

ராஜ்யசபாவில் அவர் பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தால், இந்தியா அணு சோதனை நடத்துவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதிலும் எந்தத் தடையும் இருக்காது.

தேவைப்பட்டால் 1974 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் செய்தது போன்ற அணு ஆயுத சோதனைகளை நாம் மேற்கொள்ளலாம். அதை யாராலும் தடுக்க முடியாது.

ஹைட் சட்டம் இந்தியாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. 123 ஒப்பந்தம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்தப் போகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது.

அவையின் உணர்வுகளை மதித்து, இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கூடாது என்று பாஜக, இடதுசாரிக் கட்சிகள் கோருவது ஏற்புக்குரியதாக இல்லை. இந்த ஒப்பந்தம் இப்போதுதான் தொடக்க நிலைக்கே வந்துள்ளது.

அவையின் உணர்வுகளை நாங்கள் அவமதிக்கவில்லை. ஆனால் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு ஒப்பந்தத்தை முறிப்பது தேவைதானா என்பதுதான் அரசின் கேள்வி. எதிர்க்கட்சியினரின் கோரிக்கையில் எந்தவித நியாயமும், காரணமும் இல்லை.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு கொடுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

இந்த ஒப்பந்தத்தால், நாட்டுக்கு பெரும் செலவீனம் ஏற்படும், பாதகம் ஏற்படும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. இப்படித்தான் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், செல்போன்கள் வந்தபோதும் கூறினார்கள். ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரத்தில் இந்த இரண்டு துறையும் பெரும் பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

பாஜக, இடதுசாரிகள் வெளிநடப்பு:

முன்னதாக இடதுசாரி உறுப்பினர்கள் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவையின் உணர்வுகளை மதிக்க மன்மோகன் சிங் அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டி அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பர்தான், ஷமீம் பாசி ஆகியோர் கூறுகையில், அரசு முன்பு அளித்த வாக்குறுதியிலிருந்து விலகி விட்டது. அவையின் உணர்வுகளை மதிக்கத் தவறி விட்டது.

இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தப் போகிறோம் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் வகையில் உள்ளது பிரணாப் முகர்ஜியின் பதிலுரை. சம்பிரதாயத்திற்காக அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று பேசியுள்ளனர் என்றார்.

லோக்சபா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா கூறுகையில், இரு அவைகளிலும் நடந்த விவாதங்களைப் பார்க்கும்போது பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. இதை அரசு மதிக்க வேண்டும். அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்றார்.

இடதுசாரிகளைப் போல பாஜகவும் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்புச் செய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X