For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் பரவிய மர்ம வாயு: சிபிசிஎல் மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

CPCl
சென்னை: சென்னையில் நேற்று பரவியது விஷ வாயு அல்ல, ஹைட்ரோகார்பன்கள்தான், இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஹைட்ரோகார்பன்கள் வெளியான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகலிலிருந்து நேற்று வரை மர்ம வாயு பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டது. துர்நாற்றத்துடன் கூடிய இந்த வாயுவை நுகர்ந்த பலருக்கு கண் எரிச்சல், உடல் அரிப்பு, வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்பட்டன.

விஷ வாயு பரவி விட்டதோ என்ற பெரும் பீதி மக்களை ஆட்டிப்படைத்ததது. முதலில் வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பரவிய இந்த வாயு பின்னர் நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் மக்கள் பெரும் பதட்டமடைந்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எங்கிருந்து வாயுக் கசிவு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர். இதில் மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்துதான் இந்த வாயுக் கசிவு ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

அங்கு விசாரணை நடத்தியபோது பரவியது விஷ வாயு அல்ல, ஹைட்ரோகார்பன்கள் என்றும் தெரிய வந்தது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், சிபிசிஎல் நிறுவனத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சுத்தப்படுத்தும் பணி நடந்துள்ளது. அப்போது அதிலிருந்து ஹைட்ரோகார்பன்கள் வெளியாகியுள்ளன.

வெயில் காலமாக இருந்தால், இந்த ஹைட்ரோகார்பன்கள் ஆவியாகியிருக்கும். ஆனால் தற்போது மழைக் காலம் என்பதால் காற்றில் கரையாமல் அப்படியே தங்கி விட்டது. இதனால்தான் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இதை நுகர்ந்தவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஹைட்ரோகார்பன்கள் காற்றில் ஆவியாகி விடக் கூடிய ஆர்கானிக் வேதிப் பொருட்கள்.

காற்றில் பரவிய ஹைட்ரோகார்பன்களின் அளவைக் கணக்கிட்டபோது ஒரு கியூபிக் மீட்டருக்கு 1.6 மைக்ரோகிராம்களாக இருந்தது. தற்போது சிபிசிஎல் அதிகாரிகள் இந்த அளவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் ஹைட்ரோகார்பன்களின் அளவு 0.6 மைக்ரோகிராம்களாக குறைந்துள்ளது. எனவே இனிமேல் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றனர்.

ஹைட்ரோகார்பன்களை சுவாசித்தால் உடல் அரிப்பு, கண் எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், மயக்கம் ஆகியவை ஏற்படும். அதுதான் கடந்த 2 நாட்களாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை மக்களுக்கு நடந்துள்ளது.

வழக்குப் பதிவு

இதற்கிடையே வாயுக் கசிவு தொடர்பாக சிபிசிஎல் நிறுவனம் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள சிபிசிஎல் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமாகும். இங்கு மொத்தம் 3 பெட்ரோலியப் பொருட்கள் சுத்திகரிப்பு பிரிவுகள் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பெட்ரோலியக் கச்சாப் பொருட்கள் இங்கு சுத்திகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு அனுப்பப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X