For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் இலவச டிவியை விற்றால் குண்டர் சட்டம் பாயும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அரசு கொடுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சியை வெளியில் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை நகர காவல்துறை ஆணையாளர் நாஞ்சில் குமரன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் இலவச கலர் டிவி விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. இதை வாங்கி விற்றுத் தர புரோக்கர்கள் வேறு கிளம்பிவிட்டனர்.

அதிகாரிகளிடம் இருந்து டிவியை வாங்கிக் கொண்டு வரும்போதே வழியில் விற்றவர்கள் ஏராளம். காரணம் வீட்டில் ஏற்கனவே டிவி இருப்பது அல்லது பணத்துக்கு தட்டுப்பாடு இருப்பது.

கலர் டிவியை அடிமாட்டு விலைக்கு ரூ. 1,500க்கு எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள். இந்தப் பணம் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளுக்குத் தான் போகிறது என்பது தனிக் கதை.

இந் நிலையில் இந்த சட்ட விரோத டிவி விற்பனையைத் தடுக்க அரசு களமிறங்கியுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக அரசு ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக கலர் டிவி வழங்கி வருகிறது. ஒருசில இடங்களில் சமூக விரோத இடைத்தரகர்கள் ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, ஆசைவார்த்தை கூறி, ஏமாற்றி இலவச டிவிக்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்கிறார்கள். இதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இது அரசு கொள்கைகளுக்கு எதிரானதும், சட்ட விரோதமானதாகும். இது போன்ற சம்பவங்கள் சென்னை நகரில் நடக்காமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட் ஆலோசனைப்படி இணை போலீஸ் கமிஷனர்கள் பாலசுப்ரமணியம், ரவி ஆகியோர் மேற்பார்வையில் அந்தந்த பகுதி துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய வேட்டையில் இதுவரை 13 கலர் டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இது போன்று அரசு வழங்கும் கலர் டிவிக்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார் நாஞ்சில் குமரன்.

வீடு வீடாக விலைக்கு கேட்கும் கும்பல்

இதற்கிடையே சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, அசோக்நகர், செரியன் நகர், தேசிய நகர் ஆகிய இடங்களில் கால் டாக்சியில் வந்த கும்பல் வீடு வீடாக சென்று, உங்களிடம் கவர்மென்ட் கொடுத்த இலவச கலர் டிவி இருக்குதா. விற்க விருப்பமா இருந்தா ரூ.1,500 தருகிறோம் என்று கூறியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து டிவி மெக்கானிக்கான செல்வராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோரை கைது செய்து அவர்களது வீட்டிலிருந்த 7 கலர் டிவிக்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலை வைத்து டிவி புரோக்கர்கள் செல்வம், ஜான்பாஷா, மற்றும் கால் டாக்சி டிரைவர் ஹைதர் அலிம் ஆகியோரை கைது செய்தனர்.

இதே போல் சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் எலக்ட்ரானிக் கடைகளில் வைத்து இலவச கலர் டிவி விற்ற முருகன் மற்றும் முரளியை போலீசார் கைது செய்து 5 டிவிக்களை பறிமுதல் செய்தனர்.

இந்த இலவச டிவிக்களை ரூ.1,500க்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத்தி சென்று கிராமங்களில் ரூ.2,500க்கு விற்பனை செய்வதற்காக இன்னொரு கும்பல் வேறு அலைகிறதாம்.

அடடா, இலவச டிவியை வைத்து எத்தனை பேருக்கு பொழப்பு!!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X