For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் ஊடுவல்-நான் சொன்னது நிரூபணமாகிவிட்டது: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: திமுக ஆட்சியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடக்க ஆரம்பித்து விட்டன. இது குறித்து நான் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிவிட்டன என என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் தமிழகத்தை ஏன், இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் பலர் இந்தியாவில், அதாவது தமிழகத்தில் ஊடுருவி தங்களுக்கு உண்டான பணிகளை மிக ரகசியமாகச் செய்து வருகின்றனர் என்று பிடிபட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் உதவியால் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபரும் தஞ்சாவூரில், அதுவும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டிலேயே 8 மாதங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அவர்கள் பல வகையிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் எனக்குக் கிடைத்த தகவலை தெரிவித்தால், நான் தமிழ் உணர்வு இல்லாதவள் என்று பேசினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வன்னியரசு என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தேவையான படகுகள் மற்றும் படகுகளுக்குத் தேவையான உதிரி பாகங்களைக் கடத்தி வருகிறார் என்பது தெரிய வந்ததும் மத்திய அரசு, மாநில அரசை எச்சரித்தது.

சென்னை துறைமுகத்தில் படகுகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் கொண்ட கண்டெய்னர்கள் மாதக்கணக்கில் கிடக்கின்றன. இவை சுங்க அதிகாரிகள் அசரும் நேரத்தில் கடத்தப்பட்டு விடும் என்று மத்திய உளவுப் பிரிவு, மாநில அரசுக்குத் தகவல் அளித்தது.

இதனையடுத்த விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளரான வன்னியரசு என்கிற ஜெயராஜுக்கு நார்வே நாட்டில் உள்ள ஓஸ்லோவிலிருந்து வந்த பார்சல் அது என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வன்னியரசு கைதானார்.

பத்திரிகைகளில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கருணாநிதியை சந்தித்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வன்னியரசு, அதே நாளில் (கடந்த அக்டோபர் 10ம் தேதி) ஜாமீனிலும் வெளியே வந்து விட்டார். அதே வன்னியரசு தான் தற்போது கைதாகியுள்ள விடுதலைப் புலிகளுக்கு கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடத்துவதற்கும் உதவி செய்திருக்கிறார் என்பது பிடிபட்ட விடுதலைப் புலிகளின் வாக்குமூலம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனோ தமது கட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புகிறார்கள் என்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக அரசுக்கு முட்டு கொடுக்கின்ற கட்சியானதால் வன்னியரசு உடனடியாக விடுதலையாகிறார்.

ஆனால் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை நடத்திய அதிமுகவினர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்படுகிற கொடுமை தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தேன். அதே போல் தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தேன். ஆனால் இன்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே விடுதலைப் புலி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். கடந்த 8 மாத காலமாக.

விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, காவல் துறையில் உளவுத்துறை என்ற ஒரு அமைப்பு தற்போது இருக்கிறதா, இல்லையா. அவர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

கைதான விடுதலைப் புலிகளில், ஜெயக்குமார் என்கிற கெளரிசங்கர் கடற் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். அவர் விசாரணையின் போது தெரிவித்ததாவது:

கடற்புலிகள் பிரிவில் 1995ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இலங்கை ராணுவத்திற்கு எதிராகப் பணியாற்றினேன். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைக்கு வந்தேன். மார்ச் மாதம் தஞ்சாவூர் போனேன். கடல் புலிகள் பிரிவில் உள்ள சூசை அவ்வப்போது எனக்கு உத்தரவிடுவார். தஞ்சாவூரில் புதிய படகை வாங்கி அதை சென்னையில் தங்கியுள்ள புலி ஆதரவாளர் ஜேம்ஸ் வசம் ஒப்படைக்க, இலங்கையில் இருந்து உத்தரவு வந்தது.

லண்டனில் உள்ள விடுதலைப்புலி கடால்பி (எ) கருப்பையா மூலம் படகு வாங்க பணம் கிடைத்தது. கடால்பி உத்தரவின் பேரில் வன்னியரசை சந்தித்தேன். அவர் புலிகள் இயக்கத்துக்கு மறைமுகமாக உதவிகள் செய்து வந்தார். வன்னியரசுடன் மொபைல் போனில் பேசி இருக்கிறேன். எங்கள் இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய நபர் அவர். சென்னையில் புலிகள் அமைப்பின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என்று கூறி இருக்கிறார்.

எனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள்தான் இந்தக் கைதும், வாக்குமூலமும்.

அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் ஊடுருவி பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் தெரிய வருகிறது.

திமுக ஆட்சியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடக்க ஆரம்பித்து விட்டன. ஊடுருவியவர்கள் தங்களது அண்டர்கிரவுண்ட் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர விடுதலைப் புலிகளின் நிதி உதவிகளில் வெளிநாடு சென்று திரும்பிய ஆதரவாளர்களும் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே பணி முடிக்கிறார்கள்.

ஆனால் இந்த தேசத்தைக் காக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற மத்திய அரசும்-அதனை ஆளும் கட்சியும் இவற்றையெல்லாம் எப்படி சகித்துக் கொள்கின்றன என்பது புரியவில்லை. தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் கூடாரமாக மாறி நாட்டின் பாதுகாப்புக்கே பேராபத்தாகிவிடும். ஆகவே, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அப்ப உங்க கூட்டணியில் இருக்கும் வைகோ தீவிர புலிகள் எதிர்ப்பாளரா?!?!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X