For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலை விட்டே விலக தயார்-ஆற்காடுக்கு ராமதாஸ் சவால்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பதை போல ஏரிக்கரையில் நான் கல்லூரி கட்டினேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மின் உற்பத்தி செய்யக் கூடாது, துணை நகரங்கள் கூடாது, விமான நிலைய விரிவாக்கம் கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதிக்கக் கூடாது, புதிய தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என்று பேசி வரும் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தை காட்டுமிராண்டிக் காலத்துக்கு கொண்டு செல்ல முயல்கிறார் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கு பதிலளித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மின் உற்பத்தி செய்யக்கூடாது, துணை நகரங்களை அமைக்க கூடாது, விமான நிலையத்தை விரிவாக்கக் கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க கூடாது, புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று நான் பேசி வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வீண் பழி சுமத்தியிருக்கிறார். மின் உற்பத்திக்கான புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் 200 ஏக்கர், 300 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படுகிறபோது, கடலூரில் அமைய இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு மட்டும் 1,300 ஏக்கர் நிலத்தை ஏன் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி.

கடலூர் அருகே தியாகவள்ளி, குடிகாடு என்ற இடத்தில் அந்த அனல் மின் நிலையம் அமைய போகிறது என்றாலும், அதை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரம் பறி போகும் என்றும், விளை நிலங்கள் பாழாகும் என்றும் அஞ்சி அந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இந்த மின் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று அந்த மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை.

இதற்கு எத்தனையோ மாற்று இடங்கள் இருக்கின்றன. மாற்று இடங்களை அடையாளம் காட்டுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

கடலூர் அனல் மின் நிலையத் திட்டம் நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட திட்டம் என அமைச்சர் கூறுகிறார். பல ஆண்டுகளாக செயல்படுத்த முடியாமல் போன இந்த திட்டம் இப்போது, இங்கே ஆற்காடு வீராசாமி மின் துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னர் அவசர அவசரமாக உயிர் பெற்று எழுந்திருக்கிறது.

இது எப்படி?. இது ஒன்றும் வெளிவராத அப்பு' (கமலஹாசன் நடித்த குள்ள வேடம்) ரகசியம் அல்ல. ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

திருப்போரூர் காட்டாங்கொளத்தூர் பகுதியில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை அந்த பகுதி மக்கள் எதிர்த்தார்கள். அவர்களோடு இணைந்து நானும் போராடினேன். துணை நகரம் திட்டம் கூடாது என்பதற்காக அல்ல. அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 110 சிற்றூர்களில் வசிக்கும் ஒன்றரை லட்சம் மக்களை விரட்டி அடித்துவிட்டு அவர்களது வாழ்வாதாரமாக விளங்கி வரும் 55,000 ஏக்கர் விளை நிலங்களை அபகரித்து, ஏரிகளையும், குளங்களையும், வனங்களையும் அழித்து விட்டு, குடியிருப்புக்களையெல்லாம் இடித்து நொறுக்கிவிட்டு துணை நகரத்தை உருவாக்க தேவையில்லை. அதற்கு பதிலாக வேறு மாற்று இடங்களை தேர்வு செய்யுங்கள் என்பது என்னுடைய வாதம்.

நான் எடுத்து வைத்த அந்த வாதத்தில் நியாயம் இருக்கிறது என்பதால்தானே, துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அன்று அரசு அறிவித்தது. என்னுடைய கோரிக்கை காட்டுமிராண்டி காலத்திற்கு மாறிவிட செய்யும் நிலைப்பாடு என்று இப்போது கூறும் இந்த மூத்த அமைச்சர், அன்றைக்கு முதலமைச்சரிடம் இதை எடுத்து சொல்லி, துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டாம் என்றும் அப்படி கைவிட்டால், அமைச்சர் பதவியை துறந்துவிடுவேன் என்றும் சொல்லி இருக்கலாமே? அதன் மூலம் தமிழகத்தை சொர்க்கபுரியாக மாற்றியிருக்கலாமே?

வாயில்லா பூச்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களுக்காக, நான் வாதாடுவதால் என்னை வளர்ச்சிக்கு விரோதி என்று முத்திரை குத்த முயன்றால், அதற்கெல்லாம் நான் அஞ்ச போவதில்லை. மக்கள் அதை நம்ப போவதும் இல்லை.

மின் பற்றாக்குறை என்பது திடீர் என்று ஒரே நாளில் ஏற்படுவதல்ல. மின்தேவையை எதிர்பார்த்து திட்டமிட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது யாருடைய தவறு?. இதற்கு விளக்கம் கேட்டால் ஏட்டிக்குப் போட்டி என்ற வகையில் ஏரிக்கரை விளை நிலங்களில் கல்லூரியை கட்டலாமா? என்று கூறி பிரச்சினையை திசை திருப்பப் பார்க்கிறார் அமைச்சர்.

கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மாநிலத்திலேயே மிக மிக பின்தங்கிய மாவட்டங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது விழுப்புரம். அந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மிக பின்தங்கிய வன்னிய மக்கள் சேர்ந்து தொடங்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது அந்த கல்லூரி. அங்கே பயிற்சி பெறுகிற மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து இப்போது, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிற மாணவர்களிடமும் விண்ணப்பக் கட்டணம் என்ற வகையில் கூட ஒரு ரூபாய் அளவுக்கேனும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

அந்த கல்லூரி அமைந்துள்ள இடம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடப்படாமல் கரம்பாகக் கிடந்த களர் நிலம். அதற்கு ஏரி பாசனம் என்பதே இல்லை. எனவே, அமைச்சருக்கு சவாலாக ஒன்றைக் கூறுகிறேன்.

சென்னையில் இருந்து மூத்த பத்திரிக்கையாளர்களை எல்லாம் அழைத்து வாருங்கள். மாவட்ட கலெக்டர் முதல், கிராம நிர்வாக அதிகாரி வரையிலான உங்களது அதிகாரப் பரிவாரங்களையும் உடன் கூட்டி வாருங்கள்.

அமைச்சர் பழி சுமத்தி இருப்பதைப்போல அந்தக் கல்லூரி ஏரிக்கரையின் கீழ் உள்ள விளை நிலங்களில் அமைந்திருக்கிறது என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலக நான் தயார். அப்படி நிரூபிக்கத் தவறினால் பாவம் அந்த அமைச்சர் அரசியலில் நீடித்துவிட்டு போகட்டும். குறைந்தபட்சம் மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும். இதற்கு ஆற்காடு வீராசாமி தயாரா?

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X