மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து எம்.பி.பிரகாஷ் விலகல்
பெங்களூர்: தேவே கெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி ஒரு வழியாக உடைந்தது. அதிருப்தி தலைவரான முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் தலைமையில் 13 முன்னாள் எம்.எல்.ஏக்களும், 2 எம்.எல்.சிக்களும் கட்சியை விட்டு நேற்று விலகினர்.
பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க தேவே கெளடாவும், அவரது மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமியும் மறுத்தது முதலே மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் பூசல் வெடிக்க ஆரம்பித்தது.
மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் உள்ளிட்ட சிலர், வாக்களித்தபடி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர் ஆனால் அதை கெளடாவும், குமாரசாமியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பிரகாஷ் விரக்தியில் இருந்தார்.
இடையில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமரவும் அவர் திட்டமிட்டார். இதை அறிந்த கெளடா, தடாலடியாக பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்து பிரகாஷை வாரி விட்டார்.
அதன்படி பாஜகவும் ஆட்சி அமைத்தது. ஆனால் ஒரே வாரத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து விட்டார் கெளடா.
இதையடுத்து சமீபத்தில் கர்நாடகத்தில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபையும் கலைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பிரகாஷ் தலைமையில் அதிருப்தியாளர்கள் ஒன்று திரண்டு நேற்று கட்சியை விட்டு விலகி விட்டனர். பிரகாஷ் தலைமையில் நேற்று கூடிய 13 முன்னாள் எம்.எல்.ஏக்கள் கெளடாவும், குமாரசாமியும் சர்வாதிகார மணப்பான்மையுடன் செயல்படுவதாகவும், ஒருதலைபட்சமாக முடிவுகள் எடுப்பதாகவும் குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.
பின்னர் கட்சியிலிருந்து விலகும் முடிவை பிரகாஷ் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் கூறுகையில், சட்டசபை மதச்சார்பற்ற ஜனதாதள தலைவராக இருந்த குமாரசாமிக்கு எங்களுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்ைக குறித்தும், வேறு எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்தும் முடிவு செய்ய 3 அல்லது 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்.
எங்களுக்கு மேலும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து விலகியுள்ள பிரகாஷும், அவரது ஆதரவாளர்களும் கண்டிப்பாக புதிய கட்சியைத் தொடங்க மாட்டார்கள், காங்கிரஸ் அல்லது பாஜகவில் இணைவார்கள் என்று பிரகாஷுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.