• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆற்காடு வீராசாமியை வன்னியர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராமதாஸ்

By Staff
|

சென்னை: வன்னியர் அறக்கட்டளை புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு விட்டதாகவும், புறம்போக்கு நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளது, வன்னிய சமுதாயத்தினரை புண்படுத்தி விட்டது.

இந்த அவமானத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டாம். புறம்போக்கு நிலங்களை, ஏரிகளை வளைத்துப் போட்டுள்ளது யார் என்பதை வெளிப்படுத்துவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் இடையே கடும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. இரு தரப்பும் மிகக் கடுமையான புகார்களைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வன்னியர் அறக்கட்டளை, விளைநிலங்களில்தான் கல்லூரிகளைக் கட்டி வருகிறது, கூடவே புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து விட்டனர் என்று ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தார்.

இதைக் கடுமையாக மறுத்துள்ளார் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

கடலூரில் அமைக்கப்பட இருக்கிற தனியார் மின் உற்பத்தி நிலையத்துக்காக, 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பு நியாயமானது என்பது என்னுடைய வாதம். ஆகவே அவர்கள் பக்கம் நிற்கிறேன். இதைக் கண்டு அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு கோபம் வருகிறது.

திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள கல்லூரி மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கி இருக்கிறார். ஏரிப்பாசனம் பெறும் விளைநிலத்தில் கல்லூரி கட்டப்பட்டிருப்பதாக, அவதூறு புரளியை கிளப்பி வருகிறார். இதற்கு நான் விளக்கம் அளித்ததும், வீராசாமி புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு புஞ்சை நிலம் என்றும், சவுக்கு பயிரிடப்பட்ட நிலம் என்றும் ஆதாரத்தை தேடிப் பிடித்து கூறியிருக்கிறார்.

இவர் இந்த ஆதாரத்தை தேடிப்பிடித்தது எப்படி என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும். எதை எதை அடித்து, எப்படியெல்லாம் திருத்தி ஆதாரம் என்று வெளியிடப் போகிறார்கள் என்பது அவருக்கு தெரிவதற்கு முன்பே எனக்கும் விவரம் சொல்லப்பட்டது.

சவுக்கு பயிரிடப்பட்டுள்ள நிலம் என்கிறார். எந்த ஒரு விவசாயியும் ஏரிப் பாசனம் பெறும் வளமான நிலத்தில் சவுக்கு பயிரிட மாட்டார். வேறு பயிர் எதுவுமே விளையாது என்ற நிலையில்தான் வேறு வழியின்றி சவுக்கு பயிரிடுவார்கள். வந்தால் வரவு; வராவிட்டால் பெரிய இழப்பில்லை என்பதுதான் சவுக்கு விவசாயிகளின் நம்பிக்கை.

ஒரே நாளில் வாங்கிக் குவிக்கவில்லை:

2002 முதல் 2006 தொடக்கம் வரையில் இந்த கல்லூரிக்காக பல கட்டங்களாக நிலம் வாங்கப்பட்டு இருக்கிறது. திடீரென ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களை சிலர் வாங்கி குவிப்பதை போல இந்த கல்லூரிக்கு நிலம் வாங்கப்படவில்லை.

எந்த பயிரும் விளைவிக்க முடியவில்லை; கடைசியாக சவுக்கு பயிரிட்டோம்; அதுவும் கருகி போய்விட்டது என்ற நிலையில், நிலத்தின் சொந்தக்காரர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு கல்லூரிக்கு நிலத்தை விற்க முற்பட்டார்கள்.

இந்த நிலம் வாங்கப்படுகிற வரையில் அது எந்த பயிருக்கும் பயன்படாத தரிசாகவும், களர் நிலமாகவும்தான் இருந்தது. கல்லூரிக்காக, நிலம் வாங்கப்பட்டதற்கு பின்னர் வேறு இடங்களில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு கரடு முரடுமாக இருந்த நிலம் சமப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்னர் அந்த நிலம் மேடு பள்ளமாகத்தான் காட்சியளித்தது.

வன்னியர் அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டுள்ள நிலத்தில் நெல் மற்றும் பூஞ்செடிகள் பயிரிடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கும் பரப்பளவு ஒரு ஹெக்டேர் அளவுக்குத்தான் உள்ளது. அதற்கு மேல் அமைச்சரால் ஆதாரம் காட்ட முடியவில்லை.

அடங்கலை பார்த்தால் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் அமைச்சர் அப்படி கூறியிருக்கிறார். நிலத்திற்கான வரியை செலுத்தும் போது அந்த நிலம் எத்தகைய தன்மை கொண்டது என தெரிவிப்பது வழக்கம். நிலத்தை பயிரிடாமல் போட்டாலும் எந்த ஒரு விவசாயியும் அது பயிரிடப்படாத நிலம் என்றோ, தரிசு நிலம் என்றோ சொல்வது இல்லை. அதிகாரிகளும் அப்படி பதிவு செய்து கொள்வதும் இல்லை.

அபாண்டமாக பேசும் ஆற்காடு:

வன்னியர் கல்வி அறக்கட்டளையால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு அபாண்ட பழியை வீராசாமி சுமத்தி இருக்கிறார். ஆக்கிரமிப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ள 4 இனங்களில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு சுமார் 3 ஹெக்டேர். ஆனால் அமைச்சர் குறிப்பிட்டுள்ளது போல அங்கே புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவும் இல்லை. வேலி போட்டு வளைத்து போடப்படவும் இல்லை.

அமைச்சரே நேரடியாக இங்கே வரலாம். இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி அவதூறு குற்றச்சாட்டை கூறி வன்னியர் கல்வி அறக்கட்டளையை கொச்சைப்படுத்தி இருக்கும் அமைச்சர் வீராசாமியின் வீண்பழி ஒன்றரை கோடி வன்னிய மக்களின் மனதை மேலும் புண்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அவமானத்தை வன்னியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்

வன்னியர்கள் மன்னிக்க மாட்டார்கள்:

வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடங்க ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அளவுக்கு கூட வன்னிய மக்கள் தங்களது பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு உண்டியல் அளித்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது கொடுங்கள் என்று கேட்டு, அவர்களும் மனம் உவந்து இந்த அறக்கட்டளைக்காகப் பணம் கொடுத்து வருகிறார்கள்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தனிபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்றால், அவர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அவர்கள் அளிக்கும் ரூ.500, ரூ.1,000த்தை பிச்சையெடுப்பதைப் போல் சிறுக, சிறுக சேர்த்து எழுப்பப்பட்டிருக்கிறது இக்கல்லூரி.

இன்றைக்குக் கூட உத்திரமேரூர், வந்தவாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற திருமணங்களில் நான் பங்கேற்றபோது இந்த கல்வி அறக்கட்டளைக்காக ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

இப்படி வன்னிய மக்களின் ஒத்துழைப்போடும், அவர்களது பங்களிப்போடும், அவர்களுக்காக உருவாகி வரும் இக்கல்வி நிலையத்தை களங்கப்படுத்த அமைச்சர் ஆற்காடு வீரசாசாமி முயற்சி செய்கிறார். இதனை வன்னிய மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டுள்ள நிலம், அமைச்சர் சொல்வதைப் போல் விளை நிலமல்ல. விவசாயத்துக்கு லாயக்கற்றது என்பதால் உரிமையாளர்களால் விரும்பி விற்கப்பட்ட நிலம். முக்கியமாக விளை நிலத்தில் கை வைக்காதே என்ற முழக்கம் எழுதுவதற்கு முன்பாகவே வாங்கப்பட்ட நிலம்.

அந்த முழக்கம் எழுந்த பிறகு ஒரு சென்ட் நிலம் கூட இக்கல்லூரிக்காக வாங்கப்படவில்லை. கல்லூரியைச் சுற்றி அரசுப் புறம்போக்கு நிலம் இருக்கலாம். ஆனால், அந்த புறம் போக்கு நிலத்தில் ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. இதுதான் உண்மை.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் ஏரி புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கூறு போட்டு விற்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து விற்கப்படுகின்றன. இப்படி ஏரி புறம்போக்கு நிலங்களை கூறு போட்டு விற்ற குபேரர்கள் யார் என்பது ஊருக்கு நன்றாகவே தெரியும்.

ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலை...:

ஊரை அடித்து உலையில் போட்ட இந்தக் குபேரர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்? யாருடைய தயவில் இருக்கிறார்கள்? எத்தகைய பதவியில் இருக்கிறார்கள். அவர்களுடைய தயவில் யார், யார் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்ற பட்டியல் எல்லாம் என்னிடம் இருக்கிறது.

தேவைப்படுகிற போது அப்பட்டியல் வெளியே வரும். அப்போது வீராப்புப் பேசுகிறவர்களின் முகமூடி கிழியும். நாட்டு மக்களை ஏமாற்றுகிறவர்கள் யார்? உத்தமர்கள் போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? என்பதை அப்போது மக்கள் அறியத்தான் போகிறார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more