For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

31 தமிழர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

Malaysia map
கோலாலம்பூர்: மலேசியா தமிழர்கள் 31 பேர் மீது தொடரப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்கை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி உத்தரவிட்டுள்ளார்.

மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும் என்று மலேசியத் தமிழர்கள் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு போராட்டத்தையும் நடத்தியது.

கோலாலம்பூரில் கடந்த மாதம் 25ம் தேதி இந்த அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டனர்.

இந்தப் பேரணியை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதுதொடர்பாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இருப்பினும் 31 தமிழர்களை மீண்டும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது காவல்துறை அதிகாரியைக் கொல்ல முயன்றதாக கூறி வழக்கு தொடர்ந்தது. இதனால் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் 31 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சமீபத்தில் இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழுவின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தமிழர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மலேசிய அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த அமெரிக்கா தமிழர்கள் மீதான நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் 31 தமிழர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை மறு பரிசீலனை செய்யுமாறு அரசு தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி படாய்லுக்கு பிரதமர் படாவி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து படாவி கூறுகையில், 31 தமிழர்களும் சிலரால் தூண்டி விடப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அவர்களின் நிலைக்காக நான் அனுதாபப்படுகிறேன்.

மேலும் 31 பேரும், ஹிண்ட்ராப் அமைப்பின் கொள்கைகளை நிராகரித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட மாட்டோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.

எனவே அவர்கள் மீதான வழக்கை மறு பரிசீலனை செய்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

31 தமிழர்களும் இதுதொடர்பாக விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து தலைமை வழக்கறிஞர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் கூட சிலரால் தவறான பாதைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். எனவேதான் அப்பாவிகளான இவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் படாவி.

31 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டத்தோ சாமிவேலு, அரசு தலைமை வழக்கறிஞரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 13 தமிழர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பிரதமர் படாவியை சந்தித்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தமிழர்கள் மீது மலாய் மக்கள் தாக்குதல்?

இதற்கிடையே, கோலாலம்பூரில், மலாய் இனத்தவர் அதிகம் வசிக்கும் கம்புங் பாரு பகுதியில், மலாய் இனத்தவர்கள் கூடி தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பரபரப்பான எஸ்.எம்.எஸ். வெளியாகியுள்ளது.

இதனால் கோலாம்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே பீதி நிலவுகிறது. ஆனால் இந்த செய்தியை படாவி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. எனக்குத் தெரிந்தவரை மலாய் இனத்தவர்கள் இதுபோல செய்ய மாட்டார்கள். இனவெறியைத் தூண்டும் வகையிலான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை.

இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்புவோர், மக்களை பயமுறுத்தி பீதியூட்டக் கூடாது என்றார்.

முன்னதாக, நடந்த ஐக்கிய மலாய் தேசிய கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் படாவி பங்கேற்றார்.

இதற்கிடையே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோலாலம்பூர் ஐஜி மூசா ஹசன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் தவறான செய்தி. எந்த வகையான கலவரமும், வன்முறையும் நடக்கவில்லை. நடக்கவும் விட மாட்டோம். இன மோதலைத் தூண்டும் வகையில் இதுபோன்ற அவதூறான எஸ்.எம்.எஸ்களை சிலர் அனுப்பியுள்ளனர் என்றார் அவர்.

படாவி அரசுக்கு செல்வாக்கு சரிவு?

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் படாவி கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர்கள் மீதான படாவி அரசின் மிகக் கடுமையான நடவடிக்கை காரணமாக தமிழர்களின் வாக்குகள் படாவி அரசுக்குக் கண்டிப்பாக கிடைக்காது. இது ஐக்கிய மலாய் தேசிய கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியா விடுதலை அடைந்தது முதல் ஐக்கிய மலாய் தேசிய கட்சிதான் ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போதைய இனப் பிரச்சினை காரணமாகவும், தமிழர்களுக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவாக இருப்பதாலும், படாவி அரசுக்கு தேர்தலில் பெரும் நெருக்கடி ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

படாவி அரசுக்கு எதிராக திரண்டுள்ள தமிழர்களின் வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள முக்கிய எதிர்க்கட்சிகளான மலேசிய இஸ்லாமியக் கட்சியும், பதவி நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் மக்கள் நீதிக் கட்சியும் மும்முரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X