For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு யு.எஸ். உதவிகள் நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

US Map

கொழும்பு: சீனா மற்றும் ஈரானிடமிருந்து இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் பெறப்படுவதாலும், தமிழர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியிருப்பதாலும், இலங்கைக்கான ராணுவ உதவிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவியும் நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் பலம் அதிகரித்திருப்பதாலும், புதிதாக விமான படை பலத்தை புலிகள் பெற்றிருப்பதாலும் தனது ராணுவ பலத்தைப் பெருக்க பல நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை.

இந்தியாவிடமிருந்து பகிரங்கமாக ஆயுதங்களைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவில் எதிர்ப்புகள் இருப்பதால், ஈரான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகிறது இலங்கை.

ஆனால் தமிழர்களைக் கொல்ல பெருமளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசின் போக்கால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக ஈரான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்குவது அமெரிக்காவை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான இலங்கைக்கான ஆயுத உதவிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆண்டுதோறும் அமெரிக்க அரசு போடும் பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கான ராணுவ உதவிகளுக்கான நிதியும் ஒதுக்கப்படும். அடுத்த ஆண்டுக்கான ராணுவ உதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்க்காமல் நிறுத்தி வைக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அவசர சட்ட மசோதா இந்த வாரத்திற்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் சபைகளில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் குறையும் வரை இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவியை நிறுத்தி வைப்பது என கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது முடிவு செய்யப்பட்டது.

இந்த சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பான மசோதா இந்த வாரத்திற்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதிபர் புஷ்ஷின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த புதிய தடையின் மூலம் இலங்கை அரசுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ராணுவ உதவியின் பெரும் பகுதி நிறுத்தி வைக்கப்படும்.

மேலும், அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, மனித உரிமைகள் மீறப்படவில்லை, ராணுவம் ஆள் கடத்தலில் ஈடுபடவில்லை என்பதை இலங்கை அரசு அமெரிக்காவிடம் நிரூபித்தால்தான் முழு அளவிலான நிதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா, அமெரிக்கா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை.

வளர்ச்சி திட்ட நிதியுதவியும் நிறுத்தம்:

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியுதவியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசு நிறுவனமான மில்லனியம் சாலன்ஞ் கார்ப்பரேஷன் (எம்.சி.ஐ) எடுத்துள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் நேரடியாக நிதி ஒதுக்கும். இந்த அமைப்பு, ஏழை நாடுகளுக்குத் தேவையான நிதியை கடனாக அளிக்கும்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் முழுமையான, ஆக்கப்பூர்வமான முதலீடுகள் இல்லை. ஊழல் பெருகி விட்டது. மனித உரிமை மீறல்கள் அதிகரித்து விட்டன. சட்டத்தின் ஆட்சி சுத்தமாக இல்லை உள்ளிட்ட 17 காரணங்களுக்காக இந்த நிதி நிறுத்த முடிவை எம்.சி.ஐ எடுத்துள்ளது.

டிசம்பர் 12ம் தேதி நடந்த இந்த கழகத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

நிதி பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதால், இனி 2009ம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற புதிதாக இலங்கை விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மனித உரிமை அமைப்பு கண்டனம்

இதற்கிடையே, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக இனியும், சர்வதேச சமுதாயத்தை இலங்கை அரசு ஏமாற்ற முடியாது எனவும் நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் சாருலதா ஹாக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சர்வதேச சமுதாயத்தை இந்த விஷயத்தில் இதுவரை இலங்கை அரசு ஏமாற்றி வந்திருக்கலாம். இருட்டடிப்பு செய்திருக்கலாம். ஆனால் இனியும் அதைத் தொடர முடியாது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு சர்வதேச உதவிகள் போய்ச் சேர விடாமல் இலங்கை அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது. இது இலங்கை அரசுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலையைத் தவிர்க்க, ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவை போர்ப் பகுதிகளுக்கு அனுப்பவும், அங்குள்ள உண்மை நிலையை ஆராயவும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் போய்ச் சேர உதவ வேண்டும் என்றார் அவர்.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவுகளால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X