For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - மழை பலி 52 ஆனது

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: தமிழகத்தில் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. தாமிரபரணி, வைகை, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல முக்கிய அணைகள், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த கன மழை நேற்று அடங்கியது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மட்டுமே நேற்று மழை இருந்தது.

இருப்பினும் பலத்த மழையால் பல ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.

மதுரையில் நீண்ட காலத்திற்குப் பிறகு வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையிலிருந்து மேலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமராவதி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தாமிரபரணி ஆற்றில் பெருகி வரும் வெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பியது. ஆற்றில் உள்ள கடைசி அணை இது. இதனால் மீதமுள்ள உபரி நீர் கடலில் கலந்து வருகிறது.

கன மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன.

இதற்கிடையே, மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை பொள்ளாச்சி, வைகை நகர் பகுதியில், மழையால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து 2 குழந்தைகள் பலியானார்கள். இருவருக்கும் 4 வயது இருக்கும்.

கருணாநிதி பேட்டி:

வெள்ள நிலைமை குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உதவி கோரப்படும். அதற்கு முன்னதாக மழை, வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக மதிப்பிடப்படும்.

மாநிலம் முழுவதும் 85 ஆயிரத்து 253 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. 22 ஆயிரத்து 500 பேர் மழையால் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் இறந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 149 ஏரிகள், குளங்கள் உடைந்துள்ளன. 5495 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 1183 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 79 கிராமங்களை நீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் என்றார் முதல்வர்.

தீவுகளான சென்னை புறநகர்கள்:

மழை விட்டு 2 நாட்களாகியும் கூட சென்னை புறநகர்களைச் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை.

சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்ததால் ஏராளமான கிராமங்கள் நீரால் சூழப்பட்டன.

மேலும் இந்த ஏரி நீர் அடையாற்றில் கலந்து ஓடி வருவதால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை பகுதியில் உள்ள, ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலிருந்து மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்தும், மாட்டு வண்டிகளில் வந்தும் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் உபரி நீரால் குன்றத்தூரைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகியவை நிரம்பியுள்ளன. பூண்டி ஏரியிலிருந்தும், செம்பரம்பாக்கத்திலிருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் தண்ணீர் வெளியேறுவதால் பாலம் ஒன்று உடைந்து, ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுகளத்தூர், திருநீர்மலை, வழுத்தமேடு, சோமங்கலம், அமரம்பேடு ஆகிய கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கரூரில் விளையாட்டு மைதான சுவர் இடிந்தது:

கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு கரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அருகில் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

இங்கு ஏராளமான மக்கள் காலை நேரத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். தற்போது இங்கு ஹோம்லிங்க் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மைதானத்தின் சுவர் இடிந்து விழும்போது அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எவரும் காயம் அடையவில்லை.

காம்பவுண்ட் சுவர் இடிந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X