For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமறைவான சென்னை போலி சாமியார் கைது

By Staff
Google Oneindia Tamil News

Palanichamy
சென்னை: சென்னை வேளச்சேரியில் ஆசிரமம் அமைத்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதாகவும், 3வதாக டாக்டர் ஒருவரை மோசடியாக கல்யாணம் செய்து கொண்டதாகவும் சர்ச்சையில் சிக்கிய சாமியார் பழனிச்சாமியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியில் துர்கா ஆசிரமம் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தார் பழனிச்சாமி. இந்த ஆசிரம வளாகத்தில் மதுரை வீரன் ஆலயம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு போஜராஜ் என்பவர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதில் சாமியார் பழனிச்சாமி தனது மகள் டாக்டர் திவ்யாவை மயக்கி மோசடியாக மணந்து கொண்டார். அவர் பல பெண்களை இதுபோல ஏமாற்றியுள்ளார். எனவே அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத் தருமாறு கோரியிருந்தார்.

முதலில் இந்தப் புகாரை போலீஸார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து போஜராஜ் காவல்துறை ஆணையரை அணுகினார். இதையடுத்து முகப்பேர் ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சாமியார் பழனிச்சாமி, திவ்யா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் சாமியார் பழனிச்சாமி குறித்து பல்வேறு பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

பழனிச்சாமிக்கு சுருட்டு சாமியார் என்றும், சாமியாடி, குறிசொல்லி சாமியார் என்றும் பல பெயர்கள் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். பழனிச்சாமிக்கு பெண் பக்தர்கள்தான் அதிகம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பழனிச்சாமியின் முதல் மனைவி போலீஸில் கொடுத்த புகாரில், பல பெண்களை தனது கணவர் கெடுத்துள்ளதாகவும், ஆபாசமாக பேசுவார், நடந்து கொள்வார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தி புகார் கொடுத்தார்.

இந்தப் பின்னணியில் பழனிச்சாமியின் ஆசிரமத்தில் நேற்று போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தலைமறைவாக சென்ற டாக்டர் திவ்யா திடீரென திரும்பி வந்தார்.

ஆசிரமத்திற்கு வந்த அவர் அங்கு போலீஸார் நடத்திய விசாரணைக்கு உட்பட்டார். பின்னர் செய்தியாளர்களையும் அவர் சந்தித்தார்.

இதற்கிடையே, திவ்யாவுடன், டெல்லியிலிருந்து நேற்று திரும்பிய பழனிச்சாமி, விமான நிலையத்திலிருந்து காரில் ஏறி எங்கோ போய் விட்டார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் பயனாக, இன்று காலையில், காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பழனிச்சாமியை போலீஸார் கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி, வரதட்சணைக் கொடுமை, குற்றச் செயல் செய்தது, பெண் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பழனிச்சாமியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பழனிச்சாமி பரபரப்பு வாக்குமூலத்தை அளித்ததாக தெரிகிறது. பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பழனிச்சாமி பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

விரும்பித்தான் மணந்தேன்:

முன்னதாக 3வது மனைவி திவ்யா செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், எனது கணவரை நானாக விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண்டேன். எக்காரணம் கொண்டும் அவரை நான் பிரிய மாட்டேன்.

நான் ஹோமியோபதி படிப்பை முடித்துள்ளேன். தற்போது ஹவுஸ் சர்ஜனாக உள்ளேன். என்னை யாரும் மயக்கவும் இல்லை, மோசடியும் செய்யவில்லை.

சிறு வயது முதலே எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு. கடவுள் பக்தி அதிகம் உண்டு. எந்தக் கோவிலைப் பார்த்தாலும் நின்று சாமி கும்பிடாமல் போக மாட்டேன்.

குறி சொன்ன விதம் கவர்ந்தது:

எனது தந்தைக்கு குடிப்பழக்கம் உண்டு. அதிலிருந்து அவரை மீட்க நாங்கள் மிகவும் போராடி வந்தோம். இந்த நிலையில் எனது பெரியப்பா சொல்லித்தான் பழனிச்சாமியை சந்தித்தோம். அவரை முதன் முதலில் பார்த்தபோதே அவரை எனக்குப் பிடித்துப் போய் விட்டது.

அவர் குறி சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. அவரிடம் போன 6 மாதத்திலேயே எனது தந்தையின் குடிப்பழக்கம் போய் விட்டது. இதனால் பழனிச்சாமி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் ஏற்பட்டது.

நான் அவரிடம் கொண்டது காதல் அல்ல. ஆன்மீக ஈர்ப்புதான். நானாகத்தான் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறினேன். அதைக் கேட்டதும் முதலில் அவர் அதிர்ச்சியும், பின்னர் ஆச்சரியமும் அடைந்தார்.

அந்த சமயத்தில் அவரது 2வது மனைவி மணிமேகலை வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் நான் என்னை சீடராக்கிக் கொள்ளுங்கள். வெறுமனே சீடராக இருந்தால் ஊர் தப்பாக பேசும். எனவே என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். உங்களுடனேயே இருந்து ஆன்மீக சேவை புரிகிறேன் என்றேன். இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து 2வது மனைவி மணிமேகலையின் பெயரில் அழைப்பிதழ் அச்சிட்டு எனக்கும், எனது கணவருக்கும் மதுரை வீரன் சாமி கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது. இந்தக் கல்யாணத்தில் எனது கணவரின் 2 சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

எனது கணவர் வழக்கம் போலத்தான் கடந்த 11ம் தேதி ரிஷிகேஷ் புறப்பட்டுச் சென்றார். அவருடன் நானும் சென்றேன். இதைப் பிடிக்காமல்தான் எனது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்து பிரச்சினையாக்கி விட்டனர்.

இதை அறிந்ததும் இருவரும் சென்னை திரும்பினோம். அவரை தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்து விட்டு நான் மட்டும் ஆசிரமத்திற்கு வந்துள்ளேன்.

இல்லற சுகத்தில் விருப்பம் இல்லை:

எனது கணவருக்கு இல்லற சுகத்தில் விருப்பம் இல்லை. அதை அவர் விட்டு ரொம்ப காலமாகி விட்டது. எனக்கும் அந்த விருப்பம் இல்லை. கடைசி வரை அவருக்குத் துணையாக இருந்து ஆன்மீக சேவை புரியவுள்ளேன்.

நான் இங்குதான் இருப்பேன். போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனது கணவர் நல்லவர், அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரது முதல் மனைவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார். அவர் என் கணவரின் ஆன்மீக சக்தி குறித்து விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் என்றார் திவ்யா.

சாமியார் பழனிச்சாமி போலீஸில் சிக்கி விட்டதால், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இனி பழனிச்சாமி கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவர் என்ன மோசடிகளைச் செய்துள்ளார், பெண்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்து தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X