கமிஷனர் அலுவலகத்தில் நள்ளிரவில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
சென்னை: சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நள்ளிரவில் தீக்குளிக்க நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை போலீசார் பிடித்து எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வசந்தகுமாரி(23). இவர் நேற்று நள்ளிரவில் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று கொண்டிருந்தார். இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில்,
வசந்தகுமாரிக்கும், அப்பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் காண்டிராக்டருக்கு ஆதரவாக அரசியல் பிரமுகர் இருந்ததால், இதுகுறித்து வசந்தகுமாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அவர்கள் மீது கொடுத்த புகாரில், தன்னை மிரட்டி வரும் காண்டிராக்டர் மற்றும் அரசியல்வாதியிடமிருந்து தனக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த புகார் மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நள்ளிரவில் போலீஸ், கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாக தெரியவந்துள்ளது. அடையாறு துணை கமிஷனர் சேஷாயி வசந்தகுமாரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications