10 ஆண்டுகளில் 40,000 விவசாயிகள் தற்கொலை!
புவனேஸ்வர்: 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய சமூக கண்காணிப்பு கூட்டணி என்கிற கூட்டமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பல்வேறு சமூக நல அமைப்புகள், குடிமக்கள் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டமைப்புதான் தேசிய சமூக கண்காணிப்பு கூட்டணி. நாடாளுமன்றம், நீதித்துறை, காவல்துறை, மத்திய, மாநில அரசுத்துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்த அமைப்பு அவ்வப்போது அறிக்கை வெளியிடும்.
தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல விவசாயத்துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியும் கூட படு மோசமாக உள்ளது.
40 சதவீத விவசாயக் குடும்பங்களில், விவசாயம் முதன்மையான தொழிலாக இல்லை. நஷ்டத்தைக் கொடுப்பதாக உள்ளதால் விவசாயத்தை முதன்மையான தொழிலாக அவர்கள் செய்ய முடியவில்லையாம்.
2004ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த நாடாளுமன்றத் தொடரின்போது உறுப்பினர்கள் மேற்கொண்ட வெளிநடப்புகள், கூச்சல் குழப்பங்கள், ஒத்திவைப்புகளால் நாடாளுமன்றத்தின் 26 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்துக்களுக்கும், நகராட்சிகளுக்கும் முழுமையான அளவில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாநில அரசுகள் சுத்தமாக மதிக்காமல் நடந்து கொள்கின்றன. மாநில அரசுகள் வசம்தான் இன்னும் கூட பஞ்சாயத்துக்கள், நகராட்சிகளின் நேரடி நிர்வாகம் உள்ளது. இவற்றுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.
ஜவஹர்லால் நேரு நகர்ப்பு புணரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 4,430.23 கோடியை ஒதுக்கியது. இதில் நகர்ப்புற மக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக ரூ. 1003.27 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் பெருமளவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் 33 ஆயிரத்து 635 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநில உயர்நீதிமன்றங்களில் 34 லட்சத்து 24 ஆயிரத்து 518 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் நாடு முழுவதும் உள்ள பிற நீதிமன்றங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 135 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளனவாம்.