• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜயகாந்தை நம்பினால் பிரியாணி கிடைக்கும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்தை நம்பி அவர் கட்சியில் சேருபவர்களுக்கு சோறு என்ன, பிரியாணியே கிடைக்கும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை,

கேள்வி: கலர் டி.வி. கொடுக்கின்ற டெண்டர் குழுவில் நானும் உறுப்பினராக இருந்திருந்தால் நானும் என் விருப்பம் போல் கலர் டி.வி. கொடுத்திருக்கலாம். ஆனால் மக்கள் இந்த அரசாங்கத்திடம் இலவச டி.வி.யும், நிலமுமா கேட்டார்கள். வேலையைத் தானே கேட்டார்கள். அதை கொடுக்கவில்லை என்று தேமுதிக தலைவர் (விஜய்காந்த்) குற்றம் சாட்டியுள்ளாரே

பதில்: அரசின் சார்பில் கலர் டி.வி. கொடுக்கின்ற டெண்டர் குழுவில் உறுப்பினராக இருக்குமாறு கேட்டு கடிதம் அனுப்பியதற்கு, தொகுதிப் பணியாற்ற இருப்பதால் உறுப்பினராக இருக்க இயலாது என்று அவர் தானே கடிதம் எழுதினார்.

அது மாத்திரமல்ல, உறுப்பினராக இருந்திருந்தால் அவரது விருப்பம் போல கலர் டி.வி. கொடுத்திருக்கலாம் என்று கூறியிருப்பதில் இருந்து அந்த குழுவிலே உறுப்பினர்களாக இருப்பவர்களை எல்லாம் அவர்கள் விருப்பம் போல் டி.வி. கொடுப்பதைப் போன்று குற்றம் சாட்டியுள்ளார்.

யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் கலர் டி.வி. பெட்டிகள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஊரிலும் அதற்காகவே பொது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அந்த குழு பரிந்துரை செய்பவர்களுக்கு தான் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படுகின்றன. மக்கள் வேலை தானே கேட்டார்கள். அதை கொடுக்கவில்லை என்றும் ஒரு குற்றச் சாட்டை சுமத்தியிருக்கிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை நியமனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரங்கள் அடிக்கடி அரசின் சார்பில் சொல்லப்பட்டு வருகின்றன. விஜயகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விவரங்களை மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன்.

2 லட்சத்து 28 ஆயிரத்து 149 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் மட்டும் வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.11 ஆயிரத்து 83 கோடி முதலீட்டிலான 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

படித்து விட்டு வேலை வாய்ப்பு இன்னமும் கிடைக்காத 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 இளைஞர்களுக்கு ரூ.77 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரத்து 360 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பகத்தில் புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் புதுப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

வேலை நியமனத் தடைச் சட்டம் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து 5 ஆண்டு காலம் யாருக்கும் வேலை வாய்ப்பளிக்க மறுத்ததுடன், அரசு பணிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கானவர்களையும் எவ்வித காரணமுமின்றி வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதா ஆட்சியில் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு தற்போது லட்சக்கணக்காணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்த் சீறிப் பாய்ந்து கணை விடுப்பது சரியல்ல!

கேள்வி: அரசாங்கத்திடம் மக்கள் இலவச நிலமா கேட்டார்கள் என்கிறாரே விஜயகாந்த்?

பதில்: ஆமாம் மக்கள் கேட்டார்கள். அவர்கள் கேட்டதின் பேரில் தான் திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் கொடுப்போம் என்று உறுதி கூறினோம்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 3 மாதங்களுக்கு ஒரு முறைவீதம் இதுவரை 6 கட்டங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 965 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 671 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளோம். நிலத்தை யார் கேட்டார்கள் என்று கேட்கும் விஜயகாந்திற்கு, டிசம்பர் 29ம் தேதி காலைக்கதிர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி ஒன்றினைத் தெரிவிக்க விரும்புகிறேன். அரசு வழங்கிய நிலத்தில் வாழை சாகுபடி செய்து, அந்தப் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்திக்கு தலைப்பு அரசு வழங்கிய இலவச நிலத்தில் பச்சைப் பசேல் ஓராண்டில் செழித்தது விவசாயமும், விவசாயி வாழ்வும்!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாளில் நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் இலவச நிலம் வழங்கப்பட்டது. இலவச நிலம் பெற்ற விவசாயிகள் சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி, குச்சிக் கிழங்கு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.

இலவச நிலம் பெற்ற விவசாயிகளின் நிலத்தில் வேளாண்துறை மூலம் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டு, மண் வள அட்டை கொடுக்கப்படுகிறது. ஆத்மா திட்டத்தின் மூலம் செயல் விளக்கமும் அளிக்கப்படுகிறது. மாற்று பயிர் திட்டத்தின் மூலம் மானியமாக விதைகள், உரம், மருந்துகள் வழங்கப் படுகின்றன இதைத் தொடர்ந்து அந்தச் செய்தியில் அந்த நிலங்களைப் பெற்று சாகுபடி செய்து வரும் 2 பெண்கள் அளித்த மகிழ்ச்சிகரமான பேட்டியும் இடம் பெற்றுள்ளது.

அரசு வழங்கிய இலவச நிலத்தில் வாழை பயிரிட்டுள்ள சென்னம்பட்டி அருகே ஜரத்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள்(40) கூறியதாவது,

அரசு கொடுத்த நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளேன். விவசாய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இதுவரை வாழைக்கு உரமிடுதல், களையெடுத்தல், மருந் தடித்தல், விவசாயக்கூலி போன்ற வற்றுக்கா ரூ.30 ஆயிரம் வரை செலவிட்டுள்ளேன். தற்போது வாழைத்தார் வந்துள்ளது. இன்னும் இரண்டொரு மாதத்தில் வாழைத்தார் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.

வாழைக்கு பின்னர் நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றில் ஒன்றை பயிரிட உள்ளேன். விவசாயக் கூலியாக இருந்த எனக்கு அரசு நிலம் கொடுத்ததன் மூலம், நிலம் எனக்கு சொந்தமாகி வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி பழனியம்மாள்(55) கூறியதாவது,

நான் நிலம்மற்ற ஏழை விவசாயக்கூலி. மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் வரை கூலி வேலை கிடைக்கும். நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அரசு கொடுத்த நிலத்தில், கேழ்வரகு, கம்பு பயிரிட்டேன் தற்போது வாழை பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

எனது 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. சமூகத்தில் அனைவரும் எங்களை மதிக்கும் வகையில் வாழ்க்கைத் தரம் தற்போது உயர்ந்துள்ளது. நான் மட்டுமல்ல, இப்பகுதியில் எங்களைப் போன்று இலவச நிலம் பெற்றவர்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

யார் நிலம் கேட்டார்கள் என்ற விஜயகாந்தின் கேள்விக்கு இந்த ஏழைத் தாய்மார்களின் பேட்டியே தக்க பதிலாக அமையும்.

கேள்வி: விஜயகாந்தை நம்பி வந்தால் வயிராற சோறு கிடைக்கும் என்று வந்து சேருகிறார்கள் என்று அவரே சொல்லியிருக்கிறாரே

பதில்: ஓகோ, சோறு கிடைக்கும் என்பதற்காகத்தான் அந்தக் கட்சியில் சேர்வதற்காக செல்கிறார்களா. சோறு என்ன, முதல் நாளில் பிரியாணி கூடக் கிடைக்கும்.

கேள்வி: சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்போம் என்று சொன்னார்கள். இன்னும் செயற்படுத்தவில்லை என்று விஜயகாந்த் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: இவர் ஏன் இன்னும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவில்லை என்று கேட்கிறார். விளை நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்தல் ஆகாது என்ற கருத்தும் வலுவாக உள்ளது.

இதற்கிடையிலே தான் இந்த அரசு விளை நிலங்கள் இல்லாத இடமாகப் பார்த்து அங்கே சிறப்புப் பொரு ளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியிலே ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக 2 நாட்களுக்கு முன்புகூட நெல்லைச் சீமையிலே கங்கை கொண்டான் பகுதியில் விளை நிலமாக இல்லாத இடமாகப் பார்த்து அங்கே சிறப்புப் பொரளாதார மண்டலம் அமைத்திடும் முயற்சியிலே இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

வறண்ட பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் கூட விளை நிலம் இல்லாத பகுதியாகப் பார்த்துதான் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் மத்திய அமைச்சர் தம்பி ராசா முயற்சியினால் விரைவில் அமைந்திடவுள்ளது.

கேள்வி: கட்சி ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகிறது. இப்போதுதான் கட்சியில் இளைஞர்கள் இருப்பது தெரிந்ததா என்ற விஜயகாந்தின் கேள்வி பற்றி?

பதில்: கட்சியில் இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு தான் 1980ம் ஆண்டிலேயே மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது. அந்த அணியின் சார்பில் இதுவரை பல நிகழ்ச்சிள் நடைபெற்றிருக்கின்றன என்ற போதிலும், மாநில மாநாடு என்ற வகையில் இப்போதுதான் புதிதாக நடத்தப் பட்டது.

1986ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக நடத்திய முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இளைஞர் அணி மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தியது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பரில் அண்ணா அறிவாலயத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் இளைஞர் அணியின் சார்பில் மிகப்பெரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

1988 செப்டம்பர் மாதம் வி.பி.சிங், என்.டி.ராமராவ், தேவிலால், எஸ்.ஆர்.பொம்மை, மகந்தா, பிஜூ பட்நாயக், ஐ.கே.குஜ்ரால், பர்னாலா, உன்னி கிருஷ்ணன், உபேந்திரா, அஜீத்சிங், ராம்தன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தேசிய முன்னணியின் தொடக்க விழாவிலும் இளைஞர் அணியின் பேரணி நடத்தப்பட்டது.

1989ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சாதனை விளக்கப் பேரணியிலும், 1990ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கழகத்தின் 6வது மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணியிலும், அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற பேரணி மற்றும் ஐம்பெரும் விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற 7வது மாநில மாநாட்டினையொட்டிய பேரணியிலும்,

1994ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற சமூக நீதிப் பேரணியிலும், 1994ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மண்டல மாநாட்டினையொட்டிய பேரணியிலும், 1996ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற 8வது மாநில மாநாட்டின் போது நடைபெற்ற பேரணியிலும், 1997ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற சிறப்பு மாநில மாநாட்டுப் பேரணியிலும் இளைஞர் அணி சார்பில் அணி வகுப்புகள் நடத்தப் பட்டுள்ளன. அப்பொழுதெல்லாம் இவர், ஷூட்டிங்கில் இருந்திருப்பார். அதனால் தெரிந்திருக்க நியாயமில்லை என முதல்வர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X