For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 1094 புதிய அரசுப் பேருந்துகள்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: தமிழகத்தில் இன்று 1,094 வழித் தடங்களில் புதிய பேருந்துகளை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், கோவை ஆகிய கோட்டங்களுக்கான புதிய பேருந்துகள் தொடக்க விழா பிராட்வே பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு 1,094 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.

விழாவில் கருணாநிதி பேசியதாவது,

இந்த விழாவுக்கு தலைமை ஏற்றுள்ள அமைச்சர் ஸ்டாலின் இது ஒரு திருவிழா என்று குறிப்பிட்டார். நான் விழாவுக்கு வந்த வழியெல்லாம் புதிய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதை பார்க்கும்போது இது ஒரு திருவிழா அல்ல. பெருவிழா என்று கூறலாம். அமைச்சர் நேருவுக்கும் இந்த துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன் முதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை சென்னை நகரில் இருந்து இயக்கி ஒவ்வொரு பகுதிக்கும் பிரித்து கொடுக்கின்ற விழா என்று சொல்ல வேண்டும்.

இந்த புதிய பேருந்துகள் அழகுடனும், அழகான இருக்கைகளுடனும், நல்ல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளன. நான் காரில் வரும்போது இறங்கி ஒரு பேருந்தில் உட்கார்ந்து சவாரி செய்யலாமா? என்று ஆசை வந்தது. அதை அமைச்சர் நேரு விரைவில் நிறைவேற்றி வைப்பார் என நம்புகிறேன்.

பேருந்து பயணம் என்பது குறைவானது அல்ல. பேருந்துகளில் பயணம் செய்துதான் எங்கள் இயக்கத்தை வளர்த்தோம். பேருந்தில் பயணம் செய்யும்போது எனது அன்புக்குரிய தொழிலாளர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

அதுவே மிகப்பெரிய பேறாக அமையும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பேருந்துகளும் தேசிய மயமாக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியின்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மட்டுமே அரசு பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்தன.

திமுக ஆட்சி அமைத்து அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து பஸ்களையும் தேசியமயமாக்க திட்டமிட்டு அதை நிறைவேற்றும் வாய்ப்பு அண்ணா அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த எனக்கு கிடைத்தது.

அண்ணா மறைவுக்கு பிறகு தலைமை ஏற்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு அனைத்து தடங்களும் முழுமையாக தேசிய மயமாக்கப்பட்டது.

இதற்கு அப்போது மிகப்பெரிய பஸ் நிறுவனங்களாக இருந்த டி.வி.எஸ். உள்பட பல நிறுவனங்கள் தேசியமயத்துக்கு ஆதரவு கேட்டபோது, முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆதரவு தரும் வகையில் விழாவுக்கே அவர்கள் வந்து கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

எதிர்காலத்தில் தேசிய மயமாகும் நிறுவனம் (சிமெண்ட்) பற்றி நேற்று ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அரசுடமையாக்கும் அந்த திட்டத்துக்கும் அந்த தொழில் அதிபர்கள் வந்து வாழ்த்துவார்கள் என்று நம்புகிறேன்.

மிகப் பெரிய பஸ் நிறுவனங்களை அரசுடமையாக்கிய போது பலாத்காரமாக நடந்து கொள்ளவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைப்பதற்காக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டபோது உடனடியாக ஆதரவு தந்து ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். அது அமைதி புரட்சியாக அமைந்தது.

தமிழ்நாட்டில் இன்றளவும் போக்குவரத்துத்துறை எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் அனைவருடைய ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.

பணி காலத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கி வருகிறோம். போக்குவரத்து தொழிலாளர்கள் கடமையை செய்து, உரிமைகளை பெறலாம். வீட்டுக்கு அனுப்ப நாங்கள் சட்டங்கள் போடவில்லை.

கடந்த ஆட்சியில் சட்டம் போட்டு வேலை கொடுப்பதை தடுத்தார்கள். தற்போது வாரிசுதாரர்களுக்கும் வேலை கொடுத்து வருகிறோம். சிலருக்கு வாரிசே பிடிக்காது. அவர்களுக்கு வாரிசு என்றால் பெற்ற பிள்ளைகள் அல்ல. சேர்த்து கொண்டதுதான் வாரிசு.

நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது எத்தனை கோப்புகள் கையெழுத்துக்காக ஏங்கி கொண்டிருந்தன என்பதை ஏற்கனவே பத்திரிகையாளர்களிடையே கூறி இருக்கிறேன். அரசு பணிக்காக தாசில்தார் ஒருவர் உயிர் இழந்தார். அவரது பிள்ளைக்கு அரசு வேலை கொடுக்கலாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் சிபாரிசு செய்து அனுப்பி இருந்தார். அந்த கோப்பு 3 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது. எப்போது கருணாநிதி வருவான் என்று காத்திருந்த அந்த கோப்பு என் கையை முத்தமிட்டு பலன் பெற்றது. அந்த குடும்பத்துக்கு வாழ்வளித்த கரம்தான் இந்த கரம்.

இப்படி ஏங்கி கிடந்த பல கோப்புகள் இந்த அரசு வந்த பிறகுதான் செயல் வடிவம் பெற்றுள்ளன.

இன்றைய தினம் 1,094 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இலவச டி.வி. கொடுக்கிறார்கள் அதில் என்ன பயன்? வேலை என்ன ஆச்சு? என்று சிலர் கேட்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 14,863 பேருந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 3 லட்சம் பேர் இந்த அரசால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

போக்குவரத்து கழகத்தின் மூலம் கடந்த ஆட்சியில் ஒரு நாளைக்கு 10 கோடியே 74 லட்சம் ரூபாய் கட்டண வசூல் கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 கோடியே 35 லட்சம் ரூபாய் வருகிறது. ஒரு வருடத்துக்கு கணக்கு பார்த்தால் 365 கோடி லாபம் கிடைக்கிறது. இதில் 200 கோடிக்கு 1000 பேருந்துகளை வாங்கி இருக்கிறோம்.

மக்கள் வசதியாக பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய உரிய முறையில் இவை இயக்கப்பட வேண்டும். தொலைக்காட்சியில் பார்க்கும்போது அரசு பஸ்- லாரி மோதியது. 10 பேர் சாவு என்பது போன்ற செய்திகள் வருகின்றன.

இது போன்ற செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களை கேட்டுக்கொள்கிறேன்.

விபத்தே இல்லாமல் பயணிகளுக்கு ஒரு சிறு காயம் கூட இல்லாமல் பேருந்தை ஓட்டும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவர்கள் குடும்பமே வாழும் அளவுக்கு, வாழ்த்தும் அளவுக்கு வழங்கப்படும் அந்த பரிசு என்ன என்பதை பட்ஜெட்டில் அறிவிப்பேன் என்றார் முதல்வர்.

வாரிசுகளுக்கு பணி உரிமை:

இந்த விழாவின் போது போக்குவரத்து பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் உத்தரவையும், பேருந்து ஊழியர்களுக்கு பணி உயர்வு உத்தரவையும் கருணாநிதி வழங்கினார்.

சென்னை-செங்கல்பட்டு சிட்டி பஸ்:

சென்னை மந்தைவெளியில் இருந்து 4 பேருந்துகளும், தி.நகரில் இருந்து 6 பேருந்துகளும் தினந்தோறும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் ஏற்கனவே கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது தொடங்கப்பட்ட புதிய பேருந்துகளில் 500 பேருந்துகள் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டதால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 3,300யைத் தொட்டுள்ளது.

இதுதவிர விரைவு போக்குவரத்துகழகத்துக்கு 50 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரைக்கு 70ம், சேலத்திற்கு 142ம், கோவைக்கு 112ம், விழுப்புரத்திற்கு 100ம், கும்பகோணம் கோட்டத்திற்கு 120 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் திரிபாதி, மேயர் மா.சுப்பிரமணியன், குப்புசாமி எம்.பி., போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X