For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் உள்பட நாட்டை உலுக்கும் கிட்னி மோசடி: சிபிஐ விசாரணை!

By Staff
Google Oneindia Tamil News


டெல்லி: நாட்டை உலுக்கியுள்ள குர்கான் சிறுநீரக மோசடி தொடர்பான வழக்கை சிபிஐக்கு அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகே உள்ள ஹரியானா மாநிலம் குர்கானில் சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கான பேரிடம் சிறுநீரகங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பெரும் மோசடியில் ஈடுபட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சிறுநீரக மோசடியை செய்து வந்த டாக்டர் அமீத் குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார். பல்வேறு மாநிலங்களைச் ேசர்ந்த ஆயிரம் பேரிடம் அவர் இதுபோல பெரும் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரூ. 1 லட்சம் வரை பணம் தருவதாக கூறி பல அப்பாவிகளிடம் இதுபோல சிறுநீரகங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மட்டுமே பணம் தரப்பட்டுள்ளதாம்.

ஆனால் இந்த சிறுநீரகங்களை பல லட்சம் ரூபாய்க்கு வெளிநாட்டவர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் அமீத்குமார் விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளார்.

அமீத்குமாருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன. ரூ. 4 கோடி மதிப்பில் நான்கு பெரும் வீடுகளும் அவருக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் அவருக்கு சிறுநீரக ஏஜென்டுகள் உள்ளனர்.

இவரிடம் சிறுநீரகம் பெறுவதற்காக கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச்ச சேர்ந்த 48 பேர் விண்ணப்பித்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது அமீத்குமார் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க இன்டர்போல் உதவியையும் குர்கான் போலீஸார் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுநீரக மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அமீத்குமாருக்கு ஏராளமான டாக்டர்கள் உதவியாக இருந்துள்ளனர். நோயாளிகளை ஆய்வு செய்ய, ஆபரேஷன் செய்த பிறகு அவர்களை பராமரிக்க டெல்லி மற்றும் குர்கானில் உள்ள பல மருத்துவமனைகளும் உதவியுள்ளன.

இந்த சிறுநீரக மோசடியில், அமீத்குமாருக்கு உடந்தையாக இருந்த டாக்டர் உபேந்திர குமார், அவரது டிரைவர்கள், ஏஜென்டுகள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குர்கான் நகரில் உள்ள 10 மருத்துவமனைகளிலும், 5 வீடுகளிலும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அமீத்குமாருக்கு உதவியாக 5 நர்சுகள் உள்பட 25 பேர் உதவியாக இருந்ததாக தெரிகிறது.

டாக்டர் உபேந்திராவும் சிறுநீரக மோசடி மூலம் பெரும் பணம் சம்பாதித்துள்ளார். அவருக்கு சொந்தமாக 2 சொகுசு பங்களாக்கள், 8 ஆடம்பர கார்கள், 10 வங்கிகளில் பல்வேறு வங்கிக் கணக்குகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும் 'கை வைத்த' அமீத்குமார்... :

தமிழ்நாட்டிலும் அமீத்குமாருக்கு பல புரோக்கர்கள் இருந்துள்ளனர். சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏமாற்றி டெல்லிக்கு அழைத்து சென்று கிட்னியை திருடி உள்ளனர்.

தமிழ்நாட்டில் யார்-யார் புரோக்கர்களாக செயல்பட்டார்கள் என்பதை கண்டு பிடிக்க ஹரியானா போலீசார் விரைவில் வரவுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் கிட்னி புரோக்கர்கள் சிலர் மீது வேலூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மதுரப்பள்ளியைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் இந்த புகாரை கொடுத்தார்.

அதில் வேலூரை சேர்ந்த புரோக்கர்கள் ராஜேந்திரன், அவரது அண்ணன் கதிர்வேல், மகன் சரவணன் மற்றும் காசிம் என்கிற மணி ஆகியோர் எனக்கு சிறுநீரகம் பெற்று தருவதாக கூறி ரூ. 3 லட்சத்தை வாங்கினார்கள். ஆனால் சிறுநீரகத்தையும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்ைல என்று அவர் கூறியிருந்தார்.

அப்போது போலீசார் அந்தப் புகாரை பெரிதாக கருதவில்லை. இரு தரப்பையும் கூட்டி வைத்து பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்து விட்னர்.

ஆனால், ராஜேந்திரன் வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை பகுதியில் பிரபலமான சிறுநீரக புரோக்கராகவும், கதிர்வேல் சென்னையிலும் பெரிய அளவில் செயல்பட்டு வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

இவர்கள் டாக்டர் அமீத்குமாருக்கு ஆட்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களை விசாரிக்க அரியானா போலீசார் வருகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே தப்பி விட்டனராம்.

கதிர்வேலுக்கு சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாம். எனவே அந்த இரு மருத்துவமனைகளையும் சோதனையிட போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

வேலூர் டாக்டருக்கு தொடர்பு:

வேலூரில் உள்ள பிரபல டாக்டர் ஒருவருக்கும் அமீத் குமாருடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அமீத்குமார் முன்பு ஐதராபாத்தில்தான் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். அப்போது தமிழ்நாட்டில் பல டாக்டர்கள் அவருடன் தொடர்பு வைத்துள்ளனர். இப்போதும் அந்த தொடர்பு நீடித்து மோசடிக்கும் உடந்தையாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக மோசடி விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட எஸ்.பி. அறிவுச்செல்வன் கூறுகையில், ஹரியானா போலீசார் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இருந்தாலும் நாங்களும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்ைககளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

சிறுநீரக மோசடி பல மாநிலங்களிலும் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X