For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் காதலா? - சரோஜாதேவி வருத்தம்!

By Staff
Google Oneindia Tamil News

Sarojadevi

பெங்களூர்: கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவிக்கும், கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் காதல் இருந்தது என்று முன்னாள் அமைச்சர் விஸ்வநாத் எழுதிய நூல் கர்நாடகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலுக்கு சரோஜாதேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹள்ளி ஹக்கிய ஹாடு - அதாவது ஒரு கிராமத்துப் பறவையின் கானம். கர்நாடக மாநிலத்தை பெரும் சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த நூல். இது முன்னாள் அமைச்சர் எச்.விஸ்வநாத்தின் சுயசரிதை நூலாகும்.

இதில், பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையே காதல் இருந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். சரோஜாதேவியின் பெற்றோர், 55 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றனர். இருப்பினும் அந்த முயற்சி கை கூடவில்லை.

சரோஜாதேவி மீது கொண்டிருந்த காதலால், அவருக்கு மாண்டியா சட்டசபைத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு கிருஷ்ணா கடுமையாக முயற்சித்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு வரவே அதை விட்டு விட்டார்.

இவ்வாறு அந்த நூலில் சரோஜாதேவி, எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் விஸ்வநாத்.

இந்த நூலை பிரபல எழுத்தாளர் அனந்தமூர்த்தியை வைத்து மாண்டியாவில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார் விஸ்வநாத். ஆனால் விழா அரங்கில் பெருமளவில் திரண்ட கிருஷ்ணா ஆதரவாளர்கள், பெரும் கலாட்டாவில் இறங்கினர். இதனால் புத்தகத்தை வெளியிட முடியவில்லை அனந்தமூர்த்தி அரங்கின் பின் வாசல் வழியாக ஓட வேண்டியதாயிற்று.

இந்த நிலையில், நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்புத்தகத்தை வெளியிட்டார் விஸ்வநாத். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் புத்தகத்தில் என்ன எழுதியுள்ளேனோ அவை அனைத்தும் உண்மை. அதில் உள்ள அனைத்துமே உண்மையில் நடந்தவை. சிறிதும் பொய், கற்பனை இல்லை. எனவே இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன், திரும்பப் பெறவும் மாட்டேன் என்றார் விஸ்வநாத்.

சரோஜாதேவி வருத்தம்:

இதற்கிடையே, இந்த நூல் குறித்து சரோஜாதேவி பெரும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரோஜாதேவி கூறுகையில், இது தேவையில்லாத செயல். என்னைப் பற்றி எழுத அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

விஸ்வநாத்தின் எழுத்தால் நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். தனது சுயசரிதை நூலில் தன்னைப் பற்றி மட்டும்தான் விஸ்வநாத் எழுதியிருக்க வேண்டும். அடுத்தவர்கள் குறித்துப் பேசவோ, எழுதவோ அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மற்றவர்கள் குறித்துப் பேச யாருக்குமே உரிமை இல்லை.

இந்த நூலில் ஏன் எனது பெயரை விஸ்வநாத் இழுத்துள்ளார் என்பது எனக்குப் புரியவில்லை. அரசியலில் எத்தனையோ நடிகைகள் உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு என்னை ஏன் அவர் இப்படி இழுத்துள்ளார் என்று எனக்குப் புரியவில்லை. மேலும் நான் அரசியலில் இல்லவே இல்லை.

ஒரு பெண்ணைப் பற்றி, அதிலும் பிரபலமான ஒரு கலைஞரைப் பற்றி இவ்வாறு கீழ்த்தரமாக எழுதியிருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது, பெரும் மரியாதைக்குறைவாக இருக்கிறது என்றார் சரோஜாதேவி.

விஸ்வநாத்தின் இந்த நூல், கிருஷ்ணாவின் பெயரைக் கெடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகி, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட கிருஷ்ணா முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் விஸ்வநாத்தின் நூல் வெளியிடப்பட்டிருப்பது உள் நோக்கம் கொண்டது, கிருஷ்ணாவின் பெயருக்கு களங்கம் கற்பிக்க நடக்கும் முயற்சி இது என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சர்ச்சை நூல் குறித்து கிருஷ்ணா கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவரது மனைவி பிரேமாவும், கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X