For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்துக்கு அங்கீகாரம்-ஐ.நாவுக்கு புலிகள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Sri Lanka
கிளிநொச்சி: இலங்கையில் தொடரும் தமிழர் படுகொலையைத் தடுக்க தமிழர்களின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மன்னார் மாவட்டம் மடு-பாலம்பிட்டி வீதியில் சென்ற பொதுமக்கள் பேருந்து மீது 2008 ஜனவரி 28 ஆம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 சிறார்கள் உள்ளிட்ட 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளியிலிருந்து சிறுவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து திரும்பும் நேரத்தை தாக்குதல் நடத்தியோர் அறிந்து வைத்துள்ளனர். அப்பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களே இருந்தனர். இது சிறுவர்களை இலக்கு வைத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். கொல்லப்பட்ட 12 சிறுவர்களும் 8 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.

3 வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 4 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டம் உப்புக்குளம் கிராமத்தின் மீதான வான்குண்டுத் தாக்குதலில் 3 வயது முதல் 16 வயது வரையிலான 7 சிறுவர், சிறுமியர் படுகாயமடைந்திருந்தனர்.

2 மாதங்களுக்கு முன்பு நவம்பர் 27ஆம் நாள் முதலுதவிப் பயிற்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய பாடசாலை சிறுவர், சிறுமியர் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 சிறார்கள் கொல்லப்பட்டனர். அதே நாளில் புலிகள் குரல் வானொலி நிறுவன கட்டடத் தொகுதி மீதான வான்குண்டுத் தாக்குதலின் போது வீதியில் சென்று கொண்டிருந்த 3 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்டம் தருமபுரம் கிராமத்தின் மீதான வான்குண்டுத் தாக்குதலில் 3 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

நவம்பர் மாதம் 8 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் கிராமத்தின் மீதான வான்குண்டுத் தாக்குதலின் போது ஒரு சிறுவன் கொல்லப்பட்ட்ட மற்றொரு சிறுவன் காலை இழந்தான்.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டது முதல் கடந்த 6 ஆண்டுகாலங்களில் தொடர்ச்சியாக தமிழ் மக்களை திட்டமிட்டு இலக்கு வைத்து இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

2005 ஆம் ஆண்டு தற்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றது முதல் 132 சிறார்கள் உள்ளிட்ட 2,056 தமிழ்ப் பொது மக்களை இலங்கை படைகள் படுகொலை செய்துள்ளன.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக இலங்கை அரசு கைவிட்ட பின்னர், போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியேறிய பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தினரை அனுமதிக்கவே முடியாது என்று மறுத்த பின்னர், இலங்கை படையினரால் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் கவலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். ஆனால் உரிமை மீறல்கள் தொடர்பாக கவலை தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளை "பயங்கரவாதிகள்" என்றும் "காலனியவாதிகள்" என்றும் இலங்கை அரசு முத்திரை குத்துகிறது.

இந்தத் தீவில் உரிமை மீறல் நிலைமைகளை தடுக்க அனைத்துலக சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையுமே இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

6 ஆண்டுகால போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போலவே இலங்கை அரசாங்கமானது எண்ணற்ற ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாகவே கைவிட்டிருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கு முகம் கொடுக்க முந்தைய அமைதிப் பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் வழி செய்தது.

உரிமைகள், நிலைமைகள் சீர்செய்யப்படவும் இந்தத் தீவில் அமைதியை உருவாக்கவும் அனைத்துலக சமூகம் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மதித்து நடந்து கொண்டோம் என்பதனை வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறோம்.

அனைத்துலக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து எமது அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் முற்றாகவே இல்லாத நிலைமையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க 2002 ஆம் ஆண்டு அனைத்துலகத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 100 சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அனைத்துலக சமூகத்தினது விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மேலே குறிப்பிட்ட ஒப்பந்தங்களை உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உடனடி மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதிலும் சுனாமி தாக்குதலுக்கு பின்னரான மீட்புப் பணிகளிலும் நார்வே அமைதி தூதர்களுக்கு நாங்கள் முழு அளவிலான ஒத்துழைப்பை அளித்தோம்.

அனைத்துலக சமூகத்துடன் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கு தற்போதும் தயாராக இருக்கிறோம்.

தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை அங்கீகரிப்பது என்ற ஒரே ஒரு வழிதான் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கான வழி.

ஆகையால் 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக முடிவில்லாமல் நீண்டு செல்லும் இந்த பிரச்சனைனயை முடிவுக்குக் கொண்டு வரவும் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக, தமிழர்களின் இறையாண்மையை அங்கீகரிப்பது குறித்து தாங்கள் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு புலிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X