For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய்: இந்திய ஏஜெண்டுகளின் 'ஆள் கடத்தல்'

By Staff
Google Oneindia Tamil News


துபாய்: மத்திய அரசின் விசா விதிமுறை தளர்வை ஆள் கடத்தலுக்கு இந்திய ஏஜென்டுகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈராக்குக்கு அதிக அளவிலான தொழிலாளர்கள் முறைகேடாக அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசு, விசா விதிமுறைகளை தளர்த்தியது. விசிட் விசாவில் வெளிநாடு செல்வோர், அவர்களது பாஸ்போர்ட்டில், எமிகிரேஷன் சோதனை தேவையில்லை என்ற முத்திரை இருந்தாலும் கூட, கண்டிப்பாக அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்ற ஒரு முக்கிய ஷரத்து முன்பு இருந்தது.

10ம் வகுப்புக்கும் குறைவாக படித்தவர்களுக்குத்தான் பாஸ்போர்ட்டில் எமிகிரேஷன் சோதனை தேவை என்று முத்திரை இடம் பெற்றிருக்கும். மற்றவர்களுக்கு அது இருக்காது.

இதன் காரணமாக 10ம் வகுப்புக்குக் குறைவாக படித்தவர்கள், இந்தியாவில் உள்ள எட்டு குடியேற்றப் பிரிவு அலுவலகத்தில் ஏதாவது ஒன்றில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். அப்போதுதான் அவர்களால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்.

ஆனால் மத்திய அரசு எந்தவிதமான முத்திரை பாஸ்போர்ட்டில் இருந்தாலும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக, வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோரைப் பார்க்கப் போனால் கூட எமிகிரேஷன் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை இறுந்து வந்தது. இதனால் விசிட் விசாவில் செல்லும் பலருக்கு தேவையில்லாத அலைச்சல், கால விரையம் ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாகவே கடந்த அக்டோபர் மாதம் இந்த நிபந்தனையை மத்திய அரசு ரத்து செய்தது.

இதுதான் இப்போது தொழிலாளர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜென்டுகளுக்கு பெரும் உதவியாக மாறியுள்ளது.

இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தொழிலாளர் நல ஆலோசனை அதிகாரி பி.எஸ்.முபாரக் கூறுகையில், இந்த ஷரத்து நீக்கம் நல்ல நோக்கத்தோடு வெளிநாடு செல்வோருக்கு பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால் இதை சிலர் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

எந்த சலுகைகளையும் தவறாகப் பயன்படுத்த சிலர் இருப்பார்கள். அதேபோல இதிலும் முறைகேட்டாளர்கள் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டுகள், பல அப்பாவிகளிடம் அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு விசிட் விசாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, வேலை பார்க்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

முதலில் அரபு நாடுகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பின்னார் ஈராக்குக்கு இவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இப்படி விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு செல்லும் பல அப்பாவிகள், அங்கு பெரும் அபாயங்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆந்திராவிலிருந்துதான் அதிக அளவிலான பேர் இப்படி விசிட் விசாவில் வருகின்றனர்.

இப்படி திருட்டுத்தனமாக ஈராக்குக்கு அனுப்பப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல் நம்மிடம் இல்லை. அதைக் கணக்கிடவும் முடியாது. இருப்பினும் ஆயிரக்கணக்கான பேர் இவ்வாறு அனுப்பப்படுவதாக அனுமானிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சமீபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள், இப்படி விசிட் விசா மூலம் துபாய்க்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அந்த விசாக் காலம் முடிவடைந்ததும், கிஷ் தீவுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் நிராதரவாக விடப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து விசாவை பேக்ஸ் மூலம் அவர்களை அனுப்பிய ஏஜென்டுகள் அனுப்பி வைத்தனர். நல்ல வேளை தப்பித்தோடும் என்று நினைத்த அவர்கள், அந்த விசா நகலோடு துபாய்க்கு வந்தபோது விமான நிலையத்தில் போலீஸாரிடம் சிக்கிக் கைதாகினர். அவர்கள் வைத்திருந்த விசா நகர், போலியானது என்பதால் இருவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியத் தூதரகம்தான் அதற்கான செலவுகளை ஏற்க வேண்டியதாகி விட்டது.

இதேபோல ஆந்திராவின் கரீம் நகர், நிஜாமாபாத் மாவட்டங்களைச்சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு தொழிலாளர் குழு ஈராக்கில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. ஷார்ஜாவில் அவர்களை அவர்களது ஏஜென்ட் தங்க வைத்துள்ளார்.

இதுகுறித்து அந்தக் குழுவைச் சேர்ந்த துர்கா பிரசாத் ரெட்டி, கணேஷ், பிரம்மய்யா, வெங்கல சீனிவாசா, காஷி ராம் ஆகியோர் கூறுகையில், ஷார்ஜாவில் நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏஜென்டு ஒருவரிடம் தலா ரூ. 1.80 லட்சம் பணம் கொடுத்து வந்துள்ளோம்.

எங்களது குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. எனவே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கவே இங்கு வந்து காத்திருக்கிறோம் என்றனர்.

கணேஷுக்கு 19 வயதுதான் ஆகிறது. ஈராக்கில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்க அவர் தயாராக இருக்கிறார். இவருக்கு வயதான பெற்றோரும், 2 தங்கைகளும் உள்ளனராம். தனது உயிர், வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு வேலைக்காக ஷார்ஜா வந்து காத்திருக்கிறார்.

இப்படி முறைகேடாக ஆட்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி பின்னர் அங்கிருந்து ஈராக்குக்கு அனுப்பி வரும் ஏஜென்டுகள், குடியேற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கி அனுப்பி வருகின்றனராம்.

இதுதவிர அதிகாரிகளையும், விதிமுறைகளையும் மீறுவதற்காக பல்வேறு உபாயங்களையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

தற்போது ஷார்ஜாவில் வந்து தங்கியுள்ள இந்த எட்டு ஆந்திர இளைஞர்களும், முதலில் ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு கோவைக்கு கொண்டு போகப்பட்டனர். அங்கிருந்து சென்னைக்கு வந்து பிறகு துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது ஷார்ஜாவில் தங்கியுள்ள 9 பேரில் ஒருவரின் விசா காலம் முடிந்து விட்டதாம். எனவே அவர் தலைமறைவாகி விட்டார். மற்றவர்களும் விசா காலம் முடியப் போவதால் ஒரு வாரத்திற்குள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம்.

தற்போது இவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருப்பது சமூக சேவகர் டாக்டர் சசிகலா மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர்தான்.

இவர்களில் மல்லிகார்ஜூனாவே இப்படி மோசடியான ஏஜென்டு மூலம் வந்து சிக்கியவர்தான். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் ஷார்ஜா விமான நிலையத்தில் 6 நாட்கள் பரிதவித்தார். அவருக்கு டாக்டர் சசிகலாதான் உதவி செய்து விசா கிடைக்க உதவினார். தற்போது தன்னைப் போல ஏமாற்றப்பட்டு பரிதவிப்போருக்கு சசிகலாவுடன் இணைந்து மல்லிகார்ஜூனா உதவி வருகிறாராம்.

கை நிறைய பணம் என்ற கனவோடு, இப்படி இவர்கள் வளைகுடா நாடுகளில் வந்து தவித்துக் கொண்டிருக்கும் நிலை ஒருபக்கம். மறுபக்கமோ, இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், வளைகுடா நாடுகளுக்கு வருவதற்காக கடன்களை வாங்கியும், நகை, நட்டுக்கள், நிலங்களை விற்றும் பணத்தைத் திரட்டிக் கொண்டுதான் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X