For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பேச்சால் சட்டசபையில் பெரும் அமளி- கைகலப்பு தவிர்ப்பு: அவை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha

சென்னை: சட்டசபைக்கு இன்று திடீரென வந்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா நிதியமைச்சர் அன்பழகன் குறித்து பேசிய பேச்சு பெரும் அமளியை ஏற்படுத்தியது.

இதனால் அதிமுகவினரும் திமுகவினரும் கைகலப்பில் ஈடுபடும் சூழல் உருவானது. இதையடுத்து சட்டசபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திடீரென அவைக்கு வந்த ஜெயலலிதா:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திடீரென சட்டசபைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசினார். அவர் கூறுகையில்,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய சட்ட நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். நான் கூட வேணுகோபால், சோலி சோராப்ஜி, நாரிமன் போன்ற சட்ட மேதைகளைக் கொண்ட குழு தான் அமைக்கப்படவுள்ளதோ என நினைத்தேன்.

அன்பழகன் மீது ஜெ தாக்கு:

ஆனால், அந்தக் குழுவில் அன்பழனும் துரைமுருகனும் தான் உள்ளனர். இவர்கள் என்ன சட்ட மேதைகளா?. பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்த அன்பழகனும், சட்ட மேதை என்று சொன்னால் தானே ஆச்சரியப்படும் துரைமுருகனும் இதில் எப்படி இதில் பங்கேற்றார்கள் என ஜெயலலிதா பேசியபோது இதற்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதிலுக்கு அதிமுகவினரும் கடுமையாக எதிர்த்துப் பேசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

அப்போது பேசிய அமைச்சர் அன்பழகன், விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீதான நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் தான் அது. அதில் கமிட்டி ஏதும் அமைக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இருக்கும் சட்டத்தின் கீழேயே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் முடிவானது என்றார்.

ஆனால், அன்பழகனை தரக்குறைவாக பேசியதால் கோபமான அமைச்சர் துரைமுருகன் எழுந்து ஜெயலலிதா-அதிமுகவினரை நோக்கி ஏதோ சொன்னார். இதற்கு அதிமுக தரப்பில் மிகக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தன்னை துரைமுருகன் நீ என்று ஒருமையில் அழைத்ததாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இதையடுத்து அதிமுகவினர் எழுந்து நின்று கூச்சலிட, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் மற்றும் அதிமுக கொறடா செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது எழுந்த அமைச்சர் அன்பழகன், என்னை கழகத்தினர் உள்ளிட்ட பலரும் அன்பு மிகுதியால் தான் பேராசியர் என்று அழைக்கின்றனர். நாங்களும் கூட சிலர் 50 வருடத்துக்கு முன்னாள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கச் சொல்ல முடியும் என்றார் ஜெயலலிதாவை நோக்கி.

'ஊ.ஊ..ஊ..' சண்முகம்:

இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ சேகர் பாபு ஆகியோர் அவையின் மையப் பகுதியை நோக்கி ஓடி வரவே அவர்களைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களும் ஓடி வந்தனர்.

இதையடுத்து திமுகவினரும் அதிமுகவினரை நோக்கி ஓடி வந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை நோக்கி ஒருவர் மிக ஆவேசமாக பேசியபடி முன்னேறினர். அடிதடி ஏற்படும் சூழல் உருவானது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கையை சங்கு போல வைத்து 'ஊ.ஊ..ஊ..' என்று சவுண்டு கொடுத்தார். யார் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டது.

அவை ஒத்திவைப்பு:

கிட்டத்தட்ட கைகலப்பே ஏற்பட்டுவிடும் நிலை உருவானது. இதையடுத்து சட்டசபையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் சபை, அமளி காரணமாக ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடன் ஜெ வாக்குவாதம்:

பின்னர் மீண்டும் சபை கூடியது. அப்போதும் ஜெயலலிதா எழுந்து பேசினார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட முதல் மாநில அரசு திமுக அரசு தான் என் ஜெயலிலதா கூற, அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது இடைமறித்த நிதியமைச்சர் அன்பழகன், அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் நீதிமன்றத்திலே நிரூபிக்கப்படவில்லை. இதை எம்ஜிஆரே ஒப்புக் கொண்டுவிட்டார். அதே நேரத்தில் டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார்.

முதல்வர் கருணாநிதி எழுந்து, ஜெயலலிதா உண்மைக்குப் புறம்பாக பேசக் கூடாது. நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்றார்.

இதையடுத்துப் பேசிய ஜெயலலிதா, ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காக திமுக அரசை சந்திரசேகர் கலைத்தார் என்றார்.

விஷம்..மோர்: ஜெவுக்கு கருணாநிதி எச்சரிக்கை:

அப்போது இடைமறித்த முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவால் பேராசிரியர் என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் நிதியமைச்சர் அன்பழகன். இந்த அவையின் மூத்த உறுப்பினர். அவரை இப்படி அவதூறாக, மரியாதைக் குறைவாக எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா.

ஜெயலலிதா பழைய விஷயங்களைப் பேசுவார் என்றால், நாங்களும் பேச முடியும். ஜானகி அம்மையாரும் ஜெயலலிதாவும் எப்படியெல்லாம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினார்கள் என்பதை சொல்ல வேண்டுமா. விஷம், மோர் (எம்ஜிஆருக்கு மோரில் விஷம் வைத்து ஜானகி எம்ஜிஆர் கொன்றதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது) என்று நாங்களும் பழைய விஷயங்களை கிளறினால் நன்றாக இருக்காது என்று எச்சரிக்கிறேன் என்றார்.

இதையடுத்து தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் திமுக அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறியதால் ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது. புலிகளை ஆதரிக்கும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆட்சியை மக்களே நீக்கும் காலம் விரைவில் வரும் என்று கூறியபடி அதிமுக உறுப்பினர்களுடன் ஜெயலலிதா வெளிநடப்புச் செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X