For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமகவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் 'படபட' பதில்!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: சட்டசபையில் பாமக உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விகள், குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் குறுக்கிட்டு அதிவேகத்தில் பதில்களைத் தந்தனர்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பாமக எம்எல்ஏ ஜிகே.மணி பேசுகையில்,

தமிழ் புத்தாண்டு தினத்தை தை மாதம் முதல் நாளுக்கு மாற்றியது என்பது உலக வரலாற்றில் நிலைத்து நிற்கும். அதே போல சென்னையில் செம்மொழி தமிழ் மையம் அமைப்பதும் வரவேற்கத்தக்கது. இது போன்ற நல்ல அம்சங்களை பாராட்டும் அதே நேரத்தில் குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டியது எங்கள் கடமை.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை கொண்டு வருவதை தாமதப்படுத்தக்கூடாது. தனியார் கல்லூரிகளில் கூடுதல் நன்கொடை வசூலிக்கப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன. எல்.கே.ஜியில் சேர்க்கக் கூட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே போல வேளாண்மை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் அதற்கான சான்றிதழ் பல இடங்களில் வழங்கப்படவில்லை என்றார்.

அப்போது இடைமறித்த விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இதுபற்றி அரசுக்கு ஆதாரத்துடன் தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், எங்களுக்கு இதுகுறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.

அடுத்து நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, அரசுக்கே தெரியாத விஷயங்களை குற்றச்சாட்டாக சொல்லக்கூடாது. அரசு நிர்வாகத்தில் எந்த குறையும் இல்லை என்றார்.

இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் தலையிட்டு, உறுப்பினர் ஜி.கே.மணி ஆதாரம் இல்லாததை பேச வேண்டாம் என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி: நான் ஆதாரத்துடன்தான் பேசுகிறேன். அவற்றைத் தரவும் தயாராக உள்ளேன். வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஊழல்கள் நடக்கின்றன என்றார்.

அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி, ஊழல் செய்தவர்கள் பட்டியலை வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடந்ர்து பேசிய ஜி.கே.மணி, 2002ம் ஆண்டிலேயே விவசாயக் கடன்களை விவசாயிகளுக்கு கொடுத்ததாக கூறி கூட்டுறவு வங்கி செயலாளர்களே அந்தப் பணத்தை எடுத்துள்ளனர் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, அது நடந்தது இந்த ஆட்சியில் அல்ல என்றார்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் எழுந்து, எந்த ஆட்சியில் தவறு இருந்தாலும் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டலாம் என்றார்.

ஜி.கே.மணி பேசுகையில், மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் பணி இடங்கள் கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன என்றார்.

இதற்கு நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3,000 மருத்துவர்களும், 3,400 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 31ம் தேதி கூட 591 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எல்லா காலி இடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப இயலாது. இந்த அரசு பெரும்பாலான காலி இடங்களை நிரப்பியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நமது நாட்டில் மருத்துவர்களுக்கு எவ்வளவு தட்டுப்பாடு உள்ளது என்பது மத்தியில் சுகாதார துறை அமைச்சராக இருக்கும் அன்புமணிக்கு தெரியும். தமிழக அரசின் நடவடிக்கைகளை அவரே பாராட்டியுள்ளார். மருத்துவத்துறை செயல்பாட்டில் நம் மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது என்றார்.

பின்னர் பேசிய ஜி.கே. மணி, சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது என்றாலும் கூட குறைந்த விலை சிமெண்ட்டை துறைமுகத்தில் இருந்து பெரிய முதலாளிகள்தான் இறக்குமதி செய்ய முடியும் என்றார்.

இதற்கு பதிலளித்த பொன்முடி,- ஏழைகளுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்க அரசு 3 விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

ஜி.கே.மணி பேசுகையில், உள்ளாட்சித் துறையின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

இதற்கு பதில் தந்த அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது பற்றிய அறிக்கை வழங்கப்படும் என்றார்.

ஜி.கே.மணி கூறுகையில், 6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்க வேண்டும். பாமகவினர் மீது தேவை இல்லாமல் வழக்குகள் தொடரப்படுகின்றன. அதைத் நிறுத்த வேண்டும். மதுவை ஒழிக்க படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

கருணாநிதி முதல்வராக உள்ள இந்த காலக் கட்டத்திலேயே ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். இது கசப்பு இல்லாத இனிப்பும் புளிப்பும் கலந்த ஆளுநர் உரை. அந்த புளிப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X