For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் எப்போதும் ஜாதி பற்றி பேசியதில்லை: சரத்குமார்

By Staff
Google Oneindia Tamil News

Sarath Kumar with Rathika
மதுரை: 2011ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும், வன்முறை அரசியல் ஒழிய வேண்டும். 40 ஆண்டு காலம் நாம் ஏமாந்தது போதும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாடு இரவில் சரத்குமாரின் உரையுடன் முடிவடைந்தது.

மாநாட்டில் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் பேசினர். சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநாட்டின் இறுதியில் சரத்குமார் பேசுகையில், தமிழகத்தில் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் என்றார்.

சரத்குமார் பேச்சு:

2011ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளையும், கைப்பற்றி தமிழகத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். முடியும் என்று நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் தற்போது பண்பாடற்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அண்ணன், தம்பி வெவ்வேறு கட்சிகளில் இருந்தால், அண்ணன் வீட்டுக்கு தம்பி செல்லக் கூடாது, தம்பி வீட்டுக்கு அண்ணன் செல்லக் கூடாது என்ற நிலை உள்ளது.

ஆனால் இது அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. எங்களது கட்சியைப் பொறுத்தவரை தலைவர் முக்கியமல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் முதல்வராகும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

இன்று பலர் வாக்குச் சாவடிகளுக்குப் போவதில்லை. படித்தவர்களே வாக்குச் சாவடிக்குச் செல்வதில்லை. ஏன் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள் என்றால், வாக்குச் சாவடியில் வெட்டுக் குத்து விழும், நாம் வாக்குச் சாவடிக்கு செல்வதற்கு முன்பே நமது ஓட்டை யாராவது போட்டு விடுவார்கள் என்ற அவ நம்பிக்கைதான்.

தேர்தல்களில் 100 சதவீத வாக்குப் பதிவு இருக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். அதுதான் எங்களது கொள்கை. வன்முறை அரசியல் ஒழிய வேண்டும். குடும்ப அரசியல் ஒழிய வேண்டும்.

40 ஆண்டுகளாக ஏமாந்து விட்டோம். இனியும் ஏமாறக் கூடாது. இளைஞர்களே இனியும் ஏமாற வேண்டாம். இலவசங்களை நாடாதீர்கள். சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொள்ளுங்கள். கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.

தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும். பிறரும் அதைக் கற்க வேண்டும். சரத்குமாருக்கு 6 மொழிகள் பேசத் தெரியும் என்பது முக்கியமல்ல.

பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர். ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். படித்தவர்கள், விஞ்ஞானிகளை வைத்து பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான செயல் வடிவம் கொடுப்போம்.

இனி வரும் காலங்களில் இலவசங்கள், சலுகைகள், பணம், வன்முறையால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மக்கள் சக்தியால் மட்டுமே வெல்ல முடியும். இளைஞர்களுக்கு நாங்கள் அதிக வாய்ப்புகள் தருவோம்.

நான் எப்போதும் ஜாதி பற்றி பேசியதில்லை. கருவில் இருந்தபோது எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று தெரியாது. பள்ளியில் படித்தபோதும் நான் ஜாதி குறித்துப் பேசியதில்லை. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு, என் கட்சியை ஜாதிக் கட்சி என்கிறார்கள். எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு நிறம்தான்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். இதற்காக பாடுபடுவோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காலடி எடுத்து வைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சரத்குமார்.

தீர்மானங்கள்:

பின்னர் மாலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளன. அதை இந்த மாநாடு கண்டிக்கிறது.

விலைவாசி உயர்வுக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதுதொடர்பாக ஆளுங்கூட்டணிகளுக்குள் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வது வெறும் கண் துடைப்பு நாடகமாகும்.

- இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்ைத விரைவில் மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தி அளவு பெருகும். மின்சாரப் பற்றாக்குறை நீங்கும்.

மின்சாரப்பற்றாக்குறையால் தொழில் வளர்ச்சி மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து, அதனால் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

- தமிழக ஆறுகளை இணைக்கும் மாநில அரசின் திட்டம் வரவேற்புக்குரியது. ஆறுகளை இணைக்கும் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர்ப் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். கர்நாடகம் மற்றும் கேரள மாநில அரசுகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்.

- சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக முத்துக்குமரன் கமிட்டி கொடுத்துள்ள பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது. உயர் கல்வி ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமிழகத்தில் மின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றில் பெரும் கவனக்குறைவு காணப்படுகிறது. இதனால் மாநிலம் மின் வெட்டு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கு கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆட்சி புரிந்த தலைவர்களும், ஆட்சிகளும் தான் முக்கிய காரணம்.

செய்யூர், ஜெயம்கொண்டம் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்ட புதிய மின் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சரியில்லை, கவலை அளிப்பதாக உள்ளது. குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. அரசியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

- இலங்கைப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும்.

- நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரு. 1000 ஆதார விலை அளிக்கப்பட வேண்டும்.

- புதி தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும்.

- குடிசைத் தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

- மும்பையில் பிற மாநிலத்தவர் மீது வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு இல்லை:சரத்குமார் வேதனை

மதுரையில் நடைபெற்ற அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் இதற்கு போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை.

இதற்கு முன்னெச்சரிக்கையாக தனியார் செக்யூரிட்டி அமைப்பை சேர்ந்த 400 பேரை பாதுகாப்புக்கு சரத்குமார் அமர்த்தியிருந்தார்.

அவர்கள் தான் தொண்டர்களின் ஒழுங்குபடுத்திய போதும், லட்சக்கணாக்கான தொண்டர்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் ஏராளமான தொண்டர்கள் முறையான கட்டுப்பாடு இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதே நேரில் பார்த்த சரத்குமார் தயவுசெய்து தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் தொடர்ந்து அவர்கள் சத்தம் போட்டுக் கொண்டேயிருந்ததால் மீண்டும் சரத்குமார் மைக்கில்,

இங்கு போலீசார் இல்லாத குறையை நாம் தான் போக்க வேண்டும். நமக்கு போலீசார் தேவையில்லை என்பதை நாம் உணரவைக்க வேண்டும் என்று உரக்கக் கூறி தொண்டர்களை கட்டுப்படுத்தினார்.

மேலும் அவரது பேச்சிலும், மாநாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாதது குறித்து விமர்சனம் செய்தார்.

போக்குவரத்து நெரிசல்:

மாநாடு நடந்த விரகனூர் ரிங் ரோடு முழுவதும் வாகனங்கள் அணி வகுத்து வந்ததால் வெளியூர் வாகனங்கள் செல்ல திணறியது. இதனால் ரிங் ரோடு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும், திருச்சி மற்றும் சென்னை செல்லும் பல வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறியது.

இதனால் அந்த வாகனங்களை வேறு வழியில் போலீஸார் திருப்பி விட்டனர். மதுரை மாவட்ட புறநகர் எஸ்.பி. அன்பு தலைமையில் குறைந்த அளவு போலீசாரே பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 தொண்டர்கள் விபத்தில் பலி:

நெல்லை மாவட்டம், சிவகிரி தாலூக்கா ராயகிரியை சேர்ந்த சிவ நாடார் (32) அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநாட்டிற்கு தொண்டர்களுடன் காரில் மதுரை வந்து கொண்டிருந்தார்.

டி.கல்லுப்பட்டி அருகே இந்த கார் மீது லாரி மோதியது. இதில் லாரியின் இருந்த மரக்கட்டைகள் சிவநாடார் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதே போல் அஇசமக மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 7 பேர் வேனில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். விழுப்புரம் அருகேயுள்ள அரூர் கிராமம் அருகே வந்தபோது எதிரில் வந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.

இதில் வேன் டிரைவரும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X