For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறு செய்தி: 'அவுட்லுக்' இதழுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

Arcot Veerasamy
சென்னை: முதல்வர் கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள அவுட்லுக் ஆங்கில இதழுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என திமுக பொருளாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி அதில் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆற்காடு வீராசாமி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி குறித்து உள்நோக்கத்துடன், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உங்களது இதழில் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு பகிரங்கமாக, எந்தவித நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களது அடுத்த இதழில் மன்னிப்பு தெரிவிக்கப்பட வேண்டும்.

தவறினால், சிவில் மற்றும் கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் உங்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 18ம் தேதியிட்ட அவுட்லுக் இதழில், கிராசிங் தட் பிரிட்ஜ் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், நாத்திகரான முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகம் செல்வதற்கு கடற்கரை சாலை வழியாக செல்வதைத் தவிர்த்து அண்ணா சாலை வழியாக செல்கிறார். அதற்கு அவரது ஜோதிடர் தெரிவித்த ஆலோசனைதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தனது வக்கீல் நோட்டீஸில் மறுத்துள்ள ஆற்காடு வீராசாமி, முற்றிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே முதல்வர் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகை தர்மத்தை மீறும் வகையிலும், முதல்வருக்கு அவதூறை ஏற்படுத்தும் நோக்கிலும் இதுபோன்ற செய்தியை அவுட்லுக் வெளியிட்டுள்ளது.

தனது தலைவரின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர் முதல்வர் கருணாநிதி. இந்த அவதூறான செய்தியைப் பார்த்து அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

இந்த செய்தி முற்றிலும் தவறானது, அடிப்படை உண்மை சிறிதளவும் இல்லாதது. தினசரி முதல்வர் வீட்டில் பூசாரிகள் ஆஜராகி பூஜை செய்வதாகவும், அதை முதல்வருக்குக் கொடுப்பதாகவும் கூட அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகப் பெரிய பொய். மேலும் இந்த செய்தியோடு சேர்த்து போடப்பட்டிருக்கும் கேலிச் சித்திரமும் மிகவும் மோசமானதாக உள்ளது. அவுட்லுக் இதழின் மோசமான போக்கைக் காட்டுவதாக உள்ளது.

ஒரு செய்தியை பிரசுரிப்பதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய அவுட்லுக் தவறி விட்டது. அதிலும் சமூகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர் குறித்த செய்தியை பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்து தெளிவுபடுத்திக் கொள்ளத் தவறியது மிகப் பெரிய தவறாகும்.

தனது சிறு வயது முதலே பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமாக இருப்பவர் முதல்வர் கருணாநிதி. தந்தை பெரியாரின் தீவிர ஆதரவாளர், அவரது கொள்கைகளை தவறாமல் பின்பற்றுபவர். திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்.

தனது இத்தனை கால அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் தனது கொள்கைகளை அவர் விட்டுக் கொடுத்ததில்லை.

அப்படிப்பட்ட முதல்வர் மீது அவதூறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி மிகவும் மோசமானது. உள்நோக்கத்துடன் கூடியது.

திமுகவின் அனைத்துக் கொள்கைகளும், பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததும் கூட அதன் அடிப்படையில்தான்.

எனவே முதல்வர் குறித்து வெளியாகியுள்ள இந்த செய்திக் கட்டுரை, குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன், அவதூறை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது செய்தி என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X