For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு ராமதாஸ் திடீர் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சுவரொட்டிகள், கட்-அவுட்டுகள் வைப்பதை தவிர்க்குமாறு திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள துணிச்சலான உத்தரவை அறிவிப்பை மனதார வரவேற்பதாகவும், விரைவில் அவரை நேரில் சந்தித்து பாராட்டப் போவதாகவும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

முதல்வருடன் பல மாதமாக அறிக்கைப் போர் நடத்தி வருவதோடு, அரசை எதிர்த்துப் போராட்டமும் நடத்தி வருகிறார் ராமதாஸ். நீண்ட காலமாக அவர் கருணாநிதியை சந்திக்கவும் இல்லை. இந் நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரை நேரில் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

ராமதாஸின் அறிக்கை விவரம்:

சுவரொட்டிகள் ஒட்டுவது, கட்-அவுட்டுகள் வைப்பது, பேனர்களை கட்டுவது மற்றும் படங்களுடன் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுப்பது போன்றவை மக்களிடையே மன எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்றும், எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதி கட்டளையிட்டு இருக்கிறார். காலதாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவு என்றாலும், மிகத்துணிச்சலாக கருணாநிதி அறிவித்துள்ள இந்த முடிவை மனதார வரவேற்று பாராட்டுகின்றேன்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை மட்டும் செய்து கொண்டிருக்க மாட்டேன். நல்லது செய்தால் இருகரம் கூப்பி வரவேற்பேன்; தேவைப்பட்டால் முதல்வரை நேரிலும் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டுவேன் என்று அறிவித்திருப்பதற்கு ஏற்ப இந்த துணிச்சலான நடவடிக்கைக்காக கருணாநிதியை சந்தித்து என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் நேரில் தெரிவிக்க இருக்கிறேன்.

எந்த நிகழ்ச்சியானாலும் இது போன்ற தேவையற்ற வீண் விளம்பரங்களில் ஈடுபட கூடாது என்று பா.ம.கவினர் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த அறிவுறுத்தலை மீறி ஆர்வக் கோளாறு காரணமாக இது போன்ற விளம்பரம் செய்வதில் ஈடுபட்ட கட்சியினர் மீது தயவு தாட்சண்யமின்றி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின மாநில செயற்குழு கூட்டத்தையொட்டி ஆர்வத்தின் காரணமாக பேனர்களை கட்டிவைத்த கட்சி நிர்வாகிகள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது பெருமைக்காக அல்ல; மற்ற கட்சியினரும் இதை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நினைவூட்டத் தான்.

அரசியலில் புகுந்துவிட்ட இந்த சீரழிவுகளை தமிழகத்தில் மட்டுமே காணமுடியும். தமிழக எல்லையை தாண்டி நாட்டில் வேறு எங்கேயும் இது போன்ற வீண் ஆடம்பரங்களை காணவே முடியாது. தமிழகத்தில் நகரங்கள் முதல் சிற்றூர் வரையில் தொற்றிக் கொண்டு விட்ட இந்த அநாகரிகத்தை, இந்த சீரழிவை அகற்றவும், போக்கவும் அதன் மூலம் தமிழகத்தின் பெருமையை காக்கவும் அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும். மிக அண்மைக்காலமாக இத்தகைய சீரழிவுகளோடு சுவர் விளம்பரங்களும் தொற்றிக் கொண்டுள்ளன.

வீட்டு சொந்தக்காரர்களின் அனுமதி இன்றியும், பொதுக்கூட்டங்களில் உரிய அனுமதி பெறாமலும் மாதக்கணக்கில் ஆக்கிரமித்து கொண்டுள்ள அருவருக்கத்தக்க சுவர் விளம்பரங்கள் இங்குள்ளவர்களை மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வருபவர்களையும் முகம் சுளிக்க வைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

தேர்தல் காலங்களில் இது போன்ற சுவர் விளம்பரங்களுக்கு தடை விதித்து அதனை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் அமல்படுத்தி வருவதை போன்று எல்லாக் காலத்திலும் நகரங்கள் முதல் சிற்றூர்கள் வரையில் சுவர் விளம்பரங்களுக்கு நிரந்தரமாக தடை விதித்து அதனை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

பொதுமக்களின் வெறுப்புக்கும், மன உளைச்சலுக்கும் இடம் அளிப்பது மட்டுமின்றி, பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருக்கும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக, சில மாதங்களுக்கு முன்பு அரசு சில நடைமுறைகளை வகுத்து அறிவித்தது. ஆனால் அவை இன்றுவரையில் வெறும் அறிவிப்புகளாகவே நின்றுவிட்டன.

எந்த நிகழ்ச்சியானாலும் அது தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் விளம்பரத்தட்டிகளை வைக்க வேண்டும்; நிகழ்ச்சி முடிந்த 2 நாட்களில் அதை அகற்றிவிட வேண்டும். இல்லையேல் விளம்பரத்தட்டிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அகற்றுவார்கள். அதற்கான செலவை நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம் இருந்து வசூலித்து கொள்வார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

வெறும் அறிவிப்போடு நின்று விட்ட இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி கண்டிப்பான ஆணை பிறப்பிக்க வேண்டும்.

நிகழ்ச்சிகளுக்கு விளம்பரங்களே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. விளம்பரங்கள் என்ற பெயரில் நகரின் அழகை சீரழிக்கும் காரியங்களில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்கள் செய்வதற்காக ஒவ்வொரு நகரிலும் சில இடங்களை தேர்வு செய்து அவற்றில் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட நாட்களுக்கு விளம்பரம் செய்யலாம் என்ற ஏற்பாட்டினை செய்தால் உள்ளாட்சி மன்றங்களுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கும். இது குறித்து அரசும், முதல்வரும் பரிசீலனை செய்ய வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது? என்றிருந்த நிலையில் பா.ம.க. முதன்முதலில் இது தொடர்பாக உறுதியான முடிவை எடுத்து செயல்படுத்தி வருகிறது. இப்போது முதல்வர் கருணாநிதியும் மிகத் துணிச்சலான முடிவை மேற்கொண்டு கட்சியினருக்கு கண்டிப்பான அறிவுரையை வழங்கியிருக்கிறார். தமிழகத்தின் மானம் காக்கும் இந்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பதுடன், இது போன்ற அறிவுறுத்தலை செய்ய வேண்டும். இதை மீறுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X