அம்பானியை முந்திய டோணி!!
டெல்லி: இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியை விட கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சம்பளம் வழங்கப்படவுள்ளது.
நேற்று மும்பையில் நடந்த ஏலத்தில் டோணியை, சென்னை அணி ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் லீக்கில், 3 ஆண்டு காலத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவார் டோணி. இதன் மூலம் அவருக்கு மொத்தமாக ரூ. 18 கோடி சம்பளம் கிடைக்கும்.
இந்த பிரமாண்ட ஏலம் மூலம் டோணி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு மணி நேரத்திற்கு அவர் சம்பாதிக்கும் பணம், முகேஷ் அம்பானி சம்பாதிப்பதை விட அதிகமாக இருக்கும்.
எப்படி?:
மார்ச் 18ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தமாக 44 நாட்களுக்கு இப்போட்டிகள் நடைபெறும். இதில் டோணி தோராயமாக, மணிக்கு ரூ. 56 ஆயிரத்து 818 ஊதியமாக சம்பாதிப்பார்.
ஆனால் அம்பானியோ மணிக்கு ரூ. 34 ஆயிரத்து 771தான் சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு சம்பளம் ரூ. 30.46 கோடி என்பது வேறு கதை. ஆனால் ஒரு மணி நேர சம்பளம் என்று பார்த்தால் அம்பானியை விட டோணிதான் இந்த 44 நாட்களில் அதிகம் சம்பாதிக்கப் போகிறார்.
இதில் மட்டும்தான் அம்பானியை முந்தியுள்ளார் தவிர உலக அளவில் அம்பானிக்குப் பக்கத்தில் கூட டோணி வர முடியாது என்பது தனிக் கதை.
அதேபோல இந்தியாவின் பெரும் பெரும் பணக்காரர்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோரை விடவும், டோணியின் இந்த ஒரு மணி நேர சம்பளம் அதிகமாம்.
சச்சினை முந்தும் டோணி, யுவராஜ் சிங்:
மார்க்கெட்டில் கிராக்கி உள்ள 'சரக்கு' என்ற அடிப்படையில் சச்சின் டெண்டுல்கர்தான் இதுநாள் வரை கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக மதிப்புள்ளவராக இருந்து வந்தார். தற்போது அவரை முந்தியுள்ளனர் டோணியும், யுவராஜ் சிங்கும். இதற்கும் ஐபிஎல்தான் காரணம்.
ரூ. 6 கோடிக்கு ஏலம் போயுள்ள டோணியின் மார்க்கெட் மதிப்பு இனிமேல் ஒரு விளம்பரத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை இருக்குமாம். இது சச்சினை விட அதிகம்.
அதேபோல யுவராஜ் சிங்கின் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளதாம். ஐபிஎல் போட்டித் தொடர் வெற்றிகரமாக முடிந்தால் இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கும். வெளிநாட்டினரும் நம்மூர் வீரர்களை நோக்கி வருவாரர்கள் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபல குளோபோஸ்போர்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனீர்பென் தாஸ் கூறுகையில், ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், நமது வீரர்களின் மதிப்பு கணிசமாக உயரும். யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களுக்கு மிகப் பெரும் மதிப்பும், கிராக்கியும் உருவாகும் என்றார்.
யுவராஜ் சிங்கின் விளம்பரங்கள் தொடர்பானவற்றை குளோபோஸ்போர்ட்தான் பார்த்துக் கொள்கிறது. இது பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சானியா மிர்ஸாவும் இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
யுவராஜ் சிங்கின் விளம்பர வருவாய் இனிமேல் சச்சினை விட அதிகமாக இருக்குமாம். டோணியும், யுவராஜும் தற்போது ரூ. 1.5 கோடி முதல் 2 கோடி வரை வருவாய் ஈட்டுகிறார்கள். சச்சின் ரூ. 3 முதல் 4 கோடி வருவாய் ஈட்டுகிறார். ஆனால் ஐபிஎல் புண்ணியத்தால் சச்சனை பீட் செய்யப் போகிறார்கள் இந்த இருவரும்.
தற்போது டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். ஆனால் சச்சின், டிராவிட் ஆகிய இருவருமே கிரிக்கெட் களத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சோபையிழந்து வருவதால் அவர்களின் மார்க்கெட் ரேட் குறையக் கூடும் என்று தெரிகிறது.
அவர்களின் இடத்தை விரைவில் டோணியும், யுவராஜ் சிங்கும் பிடிக்கக் கூடும்.
அதேபோல ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்திய சந்தையில் இனி மதிப்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது. இவர்கள் தற்போது ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை வாங்குகின்றனர். இனி இது அதிகரிக்கும்.
மொத்தத்தில் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறதோ இல்லையோ, ஏற்கனவே கோடீஸ்வரரர்களாக உள்ள கிரிக்கெட் வீரர்களை மேலும் பெரும் கோடீஸ்வரர்களாக்கப் போகிறது.
நாமெல்லாம் அடித்துப் பிடித்து, சட்டை கிழிந்து, வியர்வையில் நனைந்து டிக்கெட் எடுத்து வேடிக்கை பார்த்து கொட்டாவி விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!