For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுஜாதாவுக்கு நன்றி சொல்வோம்- கமல்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைகிறேன். ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமது துணைவியார் பெயரையே சுஜாதா எனப் புனைப் பெயராகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும், இரு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாடகங்களையும், அறிவியல் சார்ந்த பல ஆய்வு கட்டுகரைகளையும் எழுதிக் குவித்து தமிழ்மொழிக்கு அருந்தொண்டு புரிந்துள்ளார்.

இவரது நாவல்களில் சில திரைப்படங்களாகவும், உருவாகி உள்ளன. புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய சிறப்பினையும் பெற்ற இவர், கணினி அறிவாற்றல் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளவர்.

பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் பொது மேலாளராக பணியாற்றியபோது இவரது தலைமையிலான குழுவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய பன்முகத் திறன்கள் வாய்ந்த சுஜாதாவுக்கு 2000ம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்த நிகழ்வை நினைவு கூர்கிறேன். பெருமைக்குரிய திருமகன் சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுஜாதாவுக்கு நன்றி சொல்வோம்- கமல்:

கமல் வெளியிட்டுள்ள செய்தியில், சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் அறிந்தே இருந்தேன். அவரும்தான்.

வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள் சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார்.

அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்தது போல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கை முறை, நெறி அது.

விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் தான் அவருக்கு தன் எழுத்தைதப் பற்றி செறுக்கு இல்லை.

அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவு செய்து யாரும் சுஜாதாவை கணித்து விடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காவும், நட்புக்காகவும் அன்புக்காகவும் அவர் செய்து கொண்ட சமரசம்.

இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டும் என்றால் நன்றி சொல்லிக் கொள்ளலாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவது போல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது, சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை விட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.

பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்பொழுது, ஏதோ குறுகிய வட்டம் போல ஆகியது.

தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

நாளை உடல் தகனம்:

இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.

இயக்குநர் ஷங்கர், நேற்று இரவு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சுஜாதாவின் குடும்பத்தினருடன் இருந்தார்.

ஷங்கரின் பெருந்தன்மை:

சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இதே அப்பல்லோ மருத்துவமனையில் சுஜாதா சேர்க்கப்பட்டிருந்தபோது, பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர்.

ஷங்கர் மட்டும் ஒரு சூட்கேசுடன் வந்துள்ளார். அதை சுஜாதாவின் படு்க்கைக்கு கீழே வைத்துவிட்டு, அதை அப்புறமா திறந்து பாருங்க என்று சொல்லிவிட்டுப் போனாராம்.

பின்னர் சுஜாதா குடும்பத்தினர் திறந்து பார்த்தபோது லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. என்ன இது என்று ஷங்கரை போனில் பிடித்து அவர்கள் கேட்கவே, சாருடைய மெடிக்கல் எக்ஸ்பென்சசுக்கு, தயவு செய்து திருப்பித் தந்துடாதீங்க.. இது எங்க அப்பாவுக்கு நான் செய்ற கடமை மாதிரி என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம் ஷங்கர்.

இந்த சம்பவத்தை பின்னர் சுஜாதாவே ஒரு வார இதழில் தெரிவித்து நெகிழ்ந்தது நினைவுகூறத்தக்கது. சினிமா உலகில் இதுபோன்ற நன்றி உணர்வு கொண்டவர்கள் எல்லாம் மிகக் மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X