For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுஜாதாவின் படைப்புகள்-ஒரு பிளாஷ்பேக்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இளம் வயதிலிருந்தே கவிதைகள், கதைகள் மீது காதல் கொண்டவர் எழுத்தாளர் சுஜாதா.

குறிப்பாக அவருக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் மீதுதான் அதீத நாட்டம் இருந்தது. பின்னாளில் எழுத்தாளராக பிரபலமான பின்னர் அவர் ஏராளமான கதைகள் எழுதியபோதும், அவர் எழுதிய என் இனிய இயந்திரா, ஜீனோ உள்ளிட்ட சயின்ஸ் பிக்சன் கதைகளும் அதிக பாப்புலராயின.

என் இனிய இயந்திரா மற்றும் ஜீனோ ஆகிய கதைகளைத்தான் இயங்குநர் ஷங்கர், ரஜினிகாந்த்தை வைத்து ரோபோட் என்ற பெயரில் படமாக்குகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்காக ஏவுகணை தொழில்நுட்பம்-கடத்தலை அடிப்படையாக வைத்த திரைக்கதையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்தைத் தாங்காத தமிழ் இதழ்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சாதாரண இதழ்கள் முதல் இலக்கிய வட்டங்களில் மட்டுமே புழங்கும் இதழ்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுஜாதாவின் படைப்புகள் அலங்கரித்துள்ளன. காரணம் வசீகரிக்கும் வகையில் அமைந்த அவரது தமிழ்.

பாமரரர்களும், அறிவுஜீவிகளும் ஒரே நேரத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியும். அந்த அளவுக்கு தமிழை திறமையாகக் கையாண்டவர் சுஜாதா. ஒரு காலத்தில் அவரது தொடர் கதைகள் இடம் பெறாத பத்திரிகைககளே இல்லை என்று கூறும் அளவுக்கு எந்த இதழைப் பார்த்தாலும் சுஜாதாவின் கதைகளாக இருந்தன.

சிறு கதைகள், தொடர் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் தொடர்பான கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார் சுஜாதா.

இவரது கதைகளில் கணேஷ்-வசந்த் கேரக்டர்களை கொண்டு வெளியான திரில்லர் கதைகள் மிகவும் பாப்புலர் ஆனவை.

100க்கும் மேற்பட்ட நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நாடகக் கதைகள், கட்டுரைகள், அறிவியல் கேள்வி- பதில்கள் என அவரது படைப்புகளின் வட்டம் மிகப் பெரியது.

இ-தமிழின் முன்னோடி:

அதுவரை காகிதம் காகிதமாக கை வலிக்க பேனாக்களில் எழுதி வந்த படைப்பாளிகளை கம்ப்யூட்டருக்கு மாற்றிய பெருமை சுஜாதாவையே சாரும். முதல் முதலில் கம்ப்யூட்டர் மூலம் கதை, கவிதைகள் எழுதிய எழுத்தாளர் சுஜாதாதான். அவரைத் தொடர்ந்தே அனைத்துப் படைப்பாளிகளும் கம்ப்யூட்டருக்கு மாறினர்.

இன்று கம்ப்யூட்டர் இல்லாத படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயமாகி விட்டது. இந்தப் புரட்சிக்கு சுஜாதாதான் முக்கிய முன்னோடி.

சுஜாதாவின் படைப்புகளில் காணப்பட்ட ஸ்டைல், அவருக்கு பெரும் ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளராக வளைய வந்தவர் சுஜாதா. அவரது எழுத்துக்களில் காணப்படும் நகைச்சுவை உணர்வு, கேஷுவலான வார்த்தைகள், நக்கல், எதார்த்தம் உள்ளிட்டவற்றுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் இலக்கிய உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா என்று கூட கூறலாம். அதுவரை சுத்தத் தமிழில் எழுதினால் மட்டுமே இலக்கியம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதை மாற்றி புதுமையைப் புகுத்தினார் சுஜாதா. எழுத்துக்களில் ஒரு சகஜ நிலையை கொண்டு வந்தவர் சுஜாதா.

சுஜாதாவின் முதல் கதை:

1953ம் ஆண்டு சிவாஜி என்ற வார இதழில் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. அதன் பின்னர் அவரது கதைகள் பெரிய அளவில் வரவில்லை. ஆனால் 1962ம் ஆண்டு முதல் அவரது கதைகளும், படைப்புகளும் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அன்று முதல்
அவரது இறுதி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருந்தார் சுஜாதா.

சுஜாதாவின் படைப்புகளில் 10 அறிவியல் நூல்களும், 10 நாடகங்களும் அடங்கும்.

கனையாழியில் இடம் பெற்ற சுஜாதாவின் கடைசிப் பக்கம், மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் சுஜாதாவின் பக்கங்கள் இடம் பெற்றன.

அறிவியலை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அழகாக விளக்கி பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சுஜாதா. அவரது அறிவியல் கேள்வி-பதில் பகுதிகள் ரொம்பப் பிரசித்தமானவை.

கம்ப்யூட்டர்கள் குறித்தும், மனித மூளை குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், தமிழ் எழுத்துருக்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஏராளமாக எழுதியுள்ளார். இவரது ஆலோசனையைக் கேட்டு பயன் அடைந்த தகவல் தொழில்நுட்பத் துறையினர் பலர். இவரது ஆலோசனையின் பேரில் உருவான எழுத்துருக்களும் கணிசமானவை.

ஆங்கில கம்ப்யூட்டர் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வைத்துள்ளார் சுஜாதா.

எழுத்துத் துறையில் சகலகலா வல்லவனாக, சகல பிரிவினருக்கும் தோழமையாக திகழ்ந்த சூப்பர் எழுத்தாளர்தான் சுஜாதா.

கட் அவுட்:

எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவு தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் பாகம்1, 2 ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் கட் அவுட் வைத்துப் பெருமைப்படுத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X