For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்த பிஸ்கட் கும்பல் சிக்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ரயில்களில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் உ.பி. மாநில கும்பலை ரயில்வே போலீஸார் அதிரடியாக வளைத்துப் பிடித்துள்ளனர்.

வட மாநிலங்களிலிருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் அடிக்கடி பயணிகள் மயங்கிக் கிடப்பது வழக்கம். இவர்கள் அனைவரும் மயக்க பிஸ்கட் கொள்ளையர்களிடம் சிக்கி நகை, பணத்தை இழந்தவர்கள்.

அறிமுகம் இல்லாத சக பயணிகள் கொடுக்கும் பிஸ்கட்கள், குளிர்பானங்களை சாப்பிட்டு மயங்கி, அந்தக் கொள்ளையர்களிடம் நகை, பணத்தை இழக்கும் அப்பாவிகள் இவர்கள்.

இவர்களைப் பிடிக்க சென்னை சென்டிரல் ரயில் நிலைய ரயில்வே போலீஸார் பெரும் முயற்சிகள் எடுத்தும் இந்தக் கும்பலைச் சேர்ந்த யாரும் இதுவரை சிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட உ.பி. கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது.

இந்தக் கும்பல், சென்னையில், சமோசா கடையில் வேலை பார்த்துக் கொண்டு சைடில் இப்படி கொள்ளையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் சிக்கிய கதை..

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி கண்பத். இவர் கடந்த 23ம் தேதி ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது, மயக்க பிஸ்கட் கும்பலிடம் சிக்கி நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தார். இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளார் வியாபாரி கண்பத்.

மூன்று தினங்களுக்கு முன் சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே கண்பத் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலில் தனக்கு பிஸ்கட் கொடுத்து மோசடி செய்து ஏமாற்றிய கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

உஷாரான அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்த ரயில்வே போலீஸார் கண்பத் சொன்ன நபரை வளைத்துப் பிடித்தனர்.

பிடிபட்ட நபரின் பெயர் கணேஷ். 40 வயதாகும் இவருக்கு திணேஷ், ராம் அகர்வால் என பல்வேறு பெயர்கள் உள்ளன.

மயக்க பிஸ்கட் கொடுத்து பயணிகளிடம் கொள்ளை அடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் இவர். இவருடன் ஷியாம்லால், சுனு, கிருஷ்ணு ஆகிய மூன்று கூட்டாளிகளும் உள்ளனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் நான்கு பேரும் மூலக்கொத்தளம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். அங்குள்ள சமோசா தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் கொள்ளை அடிப்பதை ஒரு தொழிலாக செய்து வந்துள்ளனர்.

நான்கு பேருமே உ.பி. மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 7 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அதில் மூன்று வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.

பிடிபட்ட வட மாநில கும்பலிடமிருந்து 10 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்கள், ஒரு கைக்கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்ளை அடிப்படி எப்படி?:

கும்பலின் தலைவனாக கணேஷ் செயல்பட்டுள்ளார். ஜூனியர் திருடன் கிருஷ்ணு. 6 மாதங்களுக்கு முன்புதான் இணைந்துள்ளார்.

கணேஷ் பத்து வருடங்ளாக உ.பியிலிருந்து சென்னைக்கு வந்து சென்று கொள்ளையடித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சொந்த ஊரில் உள்ளார். 2வது மனைவி ஆந்திராவில் உள்ளார். இரு ஊர்களுக்கும் போகும்போதும், வரும்போதும் கொள்ளை அடிப்பது கணேஷின் ஹாபி.

கணேஷும், ஷியாம்லாலும் சேர்ந்து பல மாநிலங்களில் கொள்ளை அடித்துள்ளனர்.

இவர்கள் மயக்க பிஸ்கட் தயாரிப்பது குறித்து போலீஸாரிடம் விளக்கியுள்ளனர்.

தூக்கத்திற்காக பயன்படுத்தப்படும் அட்டிவன்-1 என்ற மாத்திரையை மருந்துக் கடையில் வாங்கி அதில் இரண்டு மாத்திரியை எடுத்து பொடி செய்து கொள்வார்களாம். பின்னர் அதில் தண்ணீர் கலந்து குழம்பு போல மாற்றுவார்கள்.

பிறகு கிரீம் பிஸ்கட்டை வாங்கி அதில் உள்ள கிரீமுடன் இந்த மயக்க மாத்திரைக் கலவையை கலப்பார்கள். பிறகு பிஸ்கட்டை சேர்த்து அதை பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்கள்.

ரயில் பயணத்தின்போது புதிய பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரிப்பது போல அதைப் பிரித்து சக பயணிகளுக்குக் கொடுப்பார்கள். வாங்கிச் சாப்பிட்டு மயக்கமடைபவர்கள் வைத்துள்ள பணம், நகை, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விடுவார்கள்.

இந்தக் கும்பல் பிடிபட்டுள்ளதன் மூலம் மயக்க பிஸ்கட் கும்பலின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அடுத்து குளிர்பானங்களில் மயக்க மருந்து கொடுக்கும் கும்பலைப் பிடிக்க வேண்டியுள்ளது. அவர்களும் பிடிபட்டால் ரயில் பயணிகளுக்கு பெரும் நிம்மதியாகி விடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X