For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆரின் வாரிசு ஜெயலலிதாதான்- டி.ஆர். அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

T.Rajendiran
சென்னை: எம்.ஜி.ஆரின் வாரிசு என்று பலரும் கூறிக் கொள்கிறார்கள். என்னைக் கேட்டால், ஜெயலலிதாதான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று லட்சிய திமுக கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் அதிரடியாக கூறியுள்ளார்.

திமுகவின் அனல் பறக்கும் பிரசார பீரங்கியாக ஒரு காலத்தில் விளங்கியவர் ராஜேந்தர். நீண்ட காலமாக திமுகவில் இருந்த ராஜேந்தர் எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்.

நீண்ட கால திமுக வாசத்திற்குப் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து விலகி கட்சி ஆரம்பித்தார். இதில் தேற முடியாமல் போன அவர் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார்.

பின்னர் திடீரென திமுக கூட்டணிக்கு மாறினார். தேர்தலுக்குப் பின்னர் அவரை திமுக கண்டு கொள்ளவில்லை. இதனால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் ராஜேந்தர். இதையடுத்து உடனடியாக அவருக்கு மாநில சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

இந் நிலையில் எம்.ஜி.ஆரின் வாரிசு யார் என்ற சமீப கால சர்ச்சையில் ராஜேந்தரும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனித்தே தேர்தலை சந்திப்பேன் என விஜயகாந்த் கூறி வருகிறார். கடைசி வரை அந்த கொள்கையை அவர் பின்பற்றுவாரா என்று பார்க்கலாம்.

காமராஜர் ஆட்சி அமைப்பேன் என சரத்குமார் கூறிவருவது அவருடைய தனிப்பட்ட கருத்து. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை வெளியிடலாம்.

பல கட்சிகள் 2011ல் தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என கூறி வருகிறார்கள். மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொல்வார்கள். அன்று மழை வராது. திடீரென ஒருநாள் வந்து சேரும். அதுபோல சொல்கிறவர்கள் ஆட்சியை பிடிக்காமல் எங்களை போன்ற கட்சிகளும் மாற்றத்தை கொண்டு வரலாம்.

இன்னும் நான் திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு சீட் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு, இப்போதைக்கு பதில் இல்லை. பிள்ளையே பிறக்காதபோது அதற்கென்ன பேர் வைப்பீர்கள் என்று கேட்பது அர்த்தமற்றது.

லட்சிய திமுக என்ற புள்ளியில்லாமல் யாரும் இங்கு அரசியல் கோலம் போட முடியாது.

எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என பல பேர் பேசி வருகிறார்கள். பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவன் என்ற அடிப்படையில் என்னுடைய கருத்து என்னவென்றால், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என்று சொல்வதற்கு ஜெயலலிதாவிற்கு தான் தகுதி உள்ளது.

லதிமுகவின் லட்சிய கீதம்:

லட்சிய திமுக கட்சியின் பிரச்சார பாடல்கள் "லட்சிய கீதம்' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாடல்கள் எழுதி நானே இசையமைத்துள்ளேன். வரும் 4ந் தேதி தி.நகர் தியாகராயர் அரங்கில் நடைபெறும் விழாவில் இந்த பிரச்சார பாடல்களை மதுரை ஆதீனம் வெளியிட உள்ளார்.

தொடர்ந்து 8ந் தேதி அரக்கோணத்திலும், 9ந் தேதி திருவண்ணாமலையிலும், 15ந் தேதி தூத்துக்குடியிலும் கட்சியின் கொடியேற்று விழாவும், பிரச்சார கூட்டமும் நடைபெறும்.

விரைவில் லட்சிய திமுகவின் முதலாவது மாநில மாநாடு நடைபெறும். ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.

அடுத்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதற்குள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பிரச்சார கூட்டங்களும், கொடியேற்று விழாவும் மாநிலங்கள் முழுவதும் நடைபெறும் என்றார் அவர்.

அப்ப மீண்டும் அதிமுக நோக்கி 'காவடியா?'...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X