For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் பதவியை உதறினார் கிருஷ்ணா - மீண்டும் அரசியலில்

By Staff
Google Oneindia Tamil News

SM Krishna
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கிறார். இதற்காக ஆளுநர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்தார்.

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு காங்கிரஸின் நிலைமை சற்றே கவலைக்கிடமாக உள்ளது. எனவே வலுவான ஒரு அரசியல் தலைவரின் தலைமையில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது.

இதற்குப் பொருத்தமானவர் எஸ்.எம்.கிருஷ்ணாதான் என்ற முடிவுக்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி வந்துள்ளார். ஏற்கனவே தீவிர அரசியலுக்குத் திரும்பும் யோசனையில் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணாவை அவசரமாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் சோனியா. இதை ஏற்று கிருஷ்ணாவும் டெல்லி விரைந்தார். அவருடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் இறுதியில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அரசியல் மறு பிரவேசம் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை கிருஷ்ணா சந்தித்தார். அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கிருஷ்ணா அளித்தார்.

2004ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் கிருஷ்ணா. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.

கர்நாடகத்தில் தற்போது அரசியல் நிலைமை மகா குழப்பமாக உள்ளது. பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து நடத்தி, பலே நாடகத்தால் அங்குள்ள மக்கள் மகா கடுப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது. இருப்பினும் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, சமயோஜிதமாக காய் நகர்த்தக் கூடிய அளவுக்கு இப்போது அங்கு தலைவர் யாரும் இல்லை.

இதைக் கருத்தில் கொண்ட அனுபவம் வாய்ந்த எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக அரசியலுக்கு மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் தலைமை தீர்மானித்ததாக தெரிகிறது.

தற்போது கர்நாடகத்தில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவதற்குள் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

தலைவர்கள் வரவேற்பு:

கர்நாடக அரசியலுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா திரும்பி வருவதற்கு தற்போதைய மாநிலத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் தரம்சிங் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிறந்த நிர்வாகியான எஸ்.எம். கிருஷ்ணா மீண்டும் கர்நாடக அரசியலுக்கு திரும்பி வருவது நல்ல அறிகுறி. கிருஷ்ணாவை கர்நாடக காங்கிரஸ் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார் தரம்சிங்.

இருப்பினும் கிருஷ்ணாவின் வருகையை கார்கே உள்ளிட்ட சில தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த முதல்வர்?:

மீண்டும் கர்நாடக அரசியலுக்குத் திரும்பும் எஸ்.எம்.கிருஷ்ணா, மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படக் கூடும். அவரையே முதல்வர் வேட்பாளராகவும் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.

'ஐடி பிரியர்' எஸ்.எம்.கிருஷ்ணா!:

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. பழம்பெரும் அரசியல்வாதி. அரசியலின் அத்தனை அம்சங்களையும் கரைத்துக் குடித்தவர். தாய்மொழியான கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை மிக்கவர். இந்தியிலும் சரளமாக பேசக் கூடியவர். நல்ல நிர்வாகி, திறமையான தலைவர்.

பெங்களூர் நகரை சர்வதேச நகராக வளர்த்துவிட்ட சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கம் தந்தவர். ஐடி துறைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆனால் அவர் ஐடி துறையின் மீது காட்டிய ஆர்வமும், ஈடுபாடும், விவசாயிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த சட்டசபைத் தேர்தலில் கெளடா கட்சியும், பாஜகவும் கிராமப்புற ஓட்டுக்களை அள்ளிக் கொண்டனர். இதனால்தான் காங்கிரஸ் தோல்வி அடைய நேரிட்டது.

இந்தியா சுதந்திரமடைந்தது முதல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி புரிந்துள்ளது. ஆனால் கடந்த தேர்தல்தான் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வியாகும்.

எஸ்.எம்.கிருஷ்ணா, ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர். கர்நாடகத்தின் பலமான ஜாதி இது. கெளடாவும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். காங்கிரஸ் தரப்பில் ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய தலைவர், வலுவான தலைவர் கிருஷ்ணாதான். எனவேதான் அவரை மீண்டும் கர்நாடகத்திற்கு திருப்பி விட்டுள்ளது காங்கிரஸ் மேலிடம்.

1962ம் ஆண்டு முதன் முதலாக எம்.எல்.ஏ ஆனார் கிருஷ்ணா. 1968ம் ஆண்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இருமுறை எம்.பியாக இருந்தார்.

1972ம் ஆண்டு கர்நாடக அரசியலுக்கு மீண்டும் திரும்பிய அவர் எம்.எல்.சி. ஆனார். 1977 வரை எம்.எல்.சி. ஆக இருந்தார். அப்போது மாநில தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

1983ம் ஆண்டு முதல் 84 வரை மத்திய தொழில்துறை இணை அமைச்சர் பொறுப்பை வகித்தார். 84 முதல் 85 வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1989ம் ஆண்டு மீண்டும் கர்நாடகத்திற்குத் திரும்பிய கிருஷ்ணா, சட்டசபை சபாநாயகராக 1992 வரை பணியாற்றினார்.

1992ம் ஆண்டு அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது முதல்வராக இருந்தவர் வீரப்ப மொய்லி. 94 வரை அப்பொறுப்பில் இருந்தார். 1996ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டு கர்நாடக முதல்வர் ஆனார். 2004ம் ஆண்டு மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் அமர்ந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X