For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளுத்து கட்டுது மழை: மிதக்குது தமிழகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்திருப்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பரவலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழக கடலோரம் இலங்கை அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்துவந்த மழை வலுவடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக மழை விடாமல் தொடர்ந்து பெய்துவருவதால் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக சீர்காழி, பரங்கிபேட்டையில் தலா 13 செ.மீ. பதிவானது. காரைக்காலில் 11, நாகப்பட்டினம் 10, காட்டுமன்னார்கோயிலில் 9, சென்னையில் 2 என செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் தற்போது நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது.

கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையின் தாழ்வான பகுதிகளில் குறிப்பாக வடசென்னையின் பெரும்பான்மை பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

கொரட்டூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், கொளத்தூர், எண்ணூர் மற்றும் தென்சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், விஜயநகர், ராம்நகர், சேலையூர் மற்றும் கீழ்கட்டளை பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மழை பாதிப்பினால் சென்னை துறைமுக கண்டெய்னர் டெர்மினலில் சரக்குப் போக்குவரத்தைக் கையாளுவதும் தேக்கநிலை அடைந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க,
கோடைவெயிலின் உக்கிரத்தால் தவி்த்துக் கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தில் இந்த தொடர் மழையினால் சூடு தணிந்துள்ளது.


"குளுகுளு'' வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் முழுவதும் பச்சைபசேல் என்று காட்சியளிக்கும் பகுதியாகும். இங்கு கடந்த 3 மாதங்களாக நிலவிய உறைபனியின் காரணமாகவும் கோடை வெயிலின் காரணமாகவும் கடும் வறட்சி நிலவியது.

பசுமை மறைந்து சருகுபோல் புல்வெளிகள் மாறின. இதனால் இரவு நேரங்களில் காட்டுத்தீயும் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ முதுமலை சரணாலயத்துக்கும் பரவியது.

இதன் காரணமாக முதுமலை சரணாலயம் தற்போது மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஊட்டியில் திடீரென பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை 4 மணி வரை விடாமல் கொட்டியது.

ஊட்டி நகரில் பெய்த மழையால் தேவி பெட்டில் பகுதியில் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது சரிந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

குன்னூரிலும் விடிய விடிய மழை கொட்டியது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக குளுகுளு காற்று வீசத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான மரங்கள் கீழே சாய்ந்து கிடக்கிறது. ரோடு மற்றும் மலைப் பகுதி முழுவதும் சேறும் - சகதியுமாக உள்ளது.

இந்த திடீர் மழையால் காட்டுத்தீ அணைந்தது. இதனால் வனப்பகுதி மீண்டும் புதுப்பொலிவு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கோடை மலர் கண்காட்சிக்காக ஊட்டி பூங்காவில் மலர் செடிகள் நாற்று நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மலர் செடிகளும் துளிர்விடத் தொடங்கி விட்டன. தேயிலை செடிகளும் நன்கு வளரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X