For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர், நடிகைகளுக்கு சரத் எச்சரிக்கை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்க விசா பெற முறைகேடான வழியைப் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்படும் நடிகர், நடிகைகள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகினர் உள்பட தென்னிந்தியத் திரையுலகினர் பெருமளவில் விசா மோசடியில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க துணைத் தூதரகம் அம்பலப்படுத்தியுள்ளது.

போலியான ஆவணங்களைக் காட்டி, பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விசா கோரி விண்ணப்பித்து நடிகை புளோரா 2 நாட்களுக்கு முன்பு சிக்கி கைதானார்.

இதையடுத்து தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர், இதேபோன்ற விசா மோசடி காரணமாக அமெரிக்கா செல்ல நிரந்தரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அறிவித்தது.

இதுதவிர தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த 10 நடிகர், நடிகைகளின் பட்டியலையும் சென்னை காவல்துறையிடம் அமெரிக்க துணைத் தூதரகம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.

முன்னணிக் கலைஞர்கள் சிலரது பெயரும் இதில் அடிபடுவது திரையுலகினரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், இதுவரை இந்த விவகாரம் குறித்து அமெரிக்க துணைத் தூதரகம் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவித புகாரையும் அனுப்பவில்லை. தவறு செய்தவர்கள் என்று கூறப்படுவோர் குறித்த பட்டியலையும் தரவில்லை.

ஒருவேளை அமெரிக்க துணைத் தூதரகம் கூறுவது போல எங்களது உறுப்பினர்கள் (நடிகர், நடிகையர்) தவறு செய்திருப்பதாக உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.

இது இந்திய இறையாண்மை குறித்த விஷயம். இதில் சமரசத்திற்கு இடமில்லை. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே விதிதான். இதில் நடிகர், நடிகைகள் விதி விலக்கல்ல என்றார் சரத்குமார்.

யு.எஸ். தூதரகம் எச்சரிக்கை:

போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்று பிடிபட்டால் அவர்கள் நிரந்தரமாக அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹாப்பர் எச்சரித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹாப்பர்,

அமெரிக்க துணைத் தூதரகத்தின் மோசடித் தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு மே மாதமே இந்த மோசடியைக் கண்டுபிடித்து விட்டனர்.

இந்த மோசடிகளில் தொடர்புடையவர்கள் திரைத் துறையினருடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்ததால், திரையுலகினர் பலரும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு வந்தது.

அவர்கள் இந்தித் திரையுலகினரா, தெலுங்குத் திரையுலகினரா, தமிழ்த் திரையுலகினரா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் மோசடியில் சிக்கியவர்கள் அனைவருமே தென்னிந்தியத் திரையுலகினருடன் தொடர்புடையவர்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற இடைத் தரகர்களால் அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு வருவது வருத்தம் தருகிறது.

போலியான ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்று பிடிபடுவோர் அமெரிக்காவுக்கு நிரந்தரமாக செல்ல தடை விதிக்கப்படுவார்கள். மோசடியா, விசா பெற்றிருப்போருக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படும்.

மோசடியான முறையில் விசா பெற்று அமெரிக்கா சென்றவர்கள், அங்குள்ள குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்க சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பிரச்சினை குறித்து விரைவில் தென்னிந்தியத் திரையுலகினருடன் பேசவுள்ளோம்.

மோசடியான முறையில் பெறப்பட்ட விசாக்கள் அனைத்தும் பி1 வகை விசாக்கள் ஆகும். வர்த்தகம் அல்லது வர்த்தகம் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்வோர் பெறும் விசாக்கள் இவை என்றார் ஹாப்பர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X