For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கு சலுகை மழை!

By Staff
Google Oneindia Tamil News

Anbalagan
சென்னை: இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது அகவிலைப் படி 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்த 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக மக்களின் நீண்டகால கனவாக விளங்குவதும், பல ஆய்வுகளின் மூலமாக சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டு, வல்லுனர்களால் வரவேற்கப்பட்டதுமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் பணியில் உள்நோக்கத்துடன் அரசியல் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள தடைகளை விலக்கி,

தமிழ்நாடும் இந்தியாவும் மேலும் வளமும் வலிவும் பெறுவதற்கு பயன்படக்கூடிய இந்த திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

சென்னையி்ல் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய சட்டசபை வளாகத்தை, பாரம்பரிய திராவிட கட்டடக் கலை முறையில் வடிவமைத்திடுவதற்கான கட்டட வடிவமைப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டி கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்தப் பணிகளுக்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேலும் 8 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு:

அரசு அலுவலர்களுக்கு, கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமைகள் பலவற்றை இந்த அரசு மீட்டெடுத்துத் தந்துள்ளது. காலியாக இருந்த அரசுப்பணியிடங்கள் அனைத்தும், காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகள் பணிபுரிந்தாலே முழு ஓய்வூதியம் பெறவும், கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது கடைசி பத்து மாதங்களில் சராசரி ஊதியத்தில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அதன் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மட்டுமின்றி அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோரும் பயனடையும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயப்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நான்காண்டு காலத்திலும், தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் ஏற்படும் நோய்களுக்கு, மருத்துவ சிகிச்சைக் கட்டணத் தொகை ரூபாய் 2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 41 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக 1.1.2008 முதல் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பெற்று வரும் அகவிலைப்படியையும் 6 சதவீதம் உயர்த்தி, 1.1.2008 முதல் 47 சதவீதமாக இந்த அரசு வழங்கும்.

இதனால் நடப்பாண்டில் ரூ.136 கோடியும், வரும் நிதியாண்டில் ரூ.817 கோடியும் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

ஓய்வூதியதாரர்களில் மருத்துவ சிகிச்சை உதவித் திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சையை எந்த மருத்துவமனையில் மேற்கொண்டாலும் மருத்துவச் செலவினை மீளப் பெறலாம் என இந்த அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் மருத்துவச் செலவினை ஈடுகட்டக் கோரி விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ளதால், தற்போது அவர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து திரட்டப்படும் நிதி போதியதாக இல்லை.

இவ்வாறு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவு ஈட்டுத்தொகை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தை நீக்கும் வகையில் ரூ.10 கோடியை இந்த அரசு மானியமாக அளிக்கும்.

மத்திய அரசு அமைத்துள்ள 6-வது ஊதியக்குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அணை வெளியிட்டபின், அவ்வாணையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நமது மாநில அரசு அலுவலர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்திட விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X