For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வயது குழந்தைக்கும் பெண் நாய்க்கும் கல்யாணம்!

By Staff
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, ஒரு வயது பையனுக்கும், 6 வயது பெண் நாய்க்கும் இடையே கல்யாணம் செய்து வைத்த கொடுமை நடந்துள்ளது.

ஒரிஸ்ஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போனவை. பெரும்பாலான மலை வாழ் மக்கள் மூட நம்பிக்கைகளை மதிப்பவர்கள்.

இந்த நிலையில் தங்களது ஒரு வயது மகனுக்கு நோய், நொடி அண்டாமல் இருப்பதற்காக பெண் நாய்க் குட்டிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஒரு மலை வாழ் தம்பதியினர்.

மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன ஜகத்சிங்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் நடந்துள்ளது.

அந்த மாவட்டத்தில் உள்ள முண்டா சாஹி என்ற ஊரில் இந்த விநோத திருமணம் நடந்தது. திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்தான் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புது 'மாப்பிள்ளை'யின் பெயர் சிபு. அவனுக்கு வயது ஒன்றுதான் ஆகிறது. அவனது தந்தையின் பெயர் ராதா மோகன் சிங். இந்த சிறுவனுக்கு கட்டி வைத்து பெண் நாய்க்குட்டிக்கு மோத்தி என்று பெயரிட்டனர். அதற்கு ஆறு மாதமாகிறது.

சின்ன மஞ்சள் சேலையை நாய்க்குட்டிக்கு கட்டி அதை மாப்பிள்ளைக்கு அருகில் அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. பழங்குடியின பூசாரி ஒருவர் திருமண சடங்குகளை நடத்தினார். கிராம மக்கள் கூடி நின்று இந்தக் காட்சியைக் கண்டனர்.

இப்படி நாய்க்குத் திருமணம் செய்து வைத்தால் நோய், நொடி அண்டாது என்பது இந்தக் கிராம மக்களின் நம்பிக்கையாகும்.

இதுகுறித்து ராதா மோகன் சிங் கூறுகையில், இது எங்களுக்குப் புதிதில்லை. தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். ஆண் குழந்தைக்கு முதல் பல் முளைக்கும்போது இதை செய்வது வழக்கம். எனது மகனுக்கு இப்போதுதான் பல் முளைத்தது. எனவேதான் இந்தத் திருமணத்தை நடத்தினோம்.

இன்று முதல் மோத்தி எனது 'மருமகள்'. அவளை நாங்கள் பத்திரமாக பாதுகாப்போம் என்றார்.

திருமணத்திற்கு வந்திருந்த கிராமத்தினருக்கு விருந்துபச்சாரமும் தடபுடலாக நடந்தது.

சிபுவின் தாயார் கீதா சிங் கூறுகையில், எனது 'மருமகளை' நான் கண்ணின் இமை போல இருந்து பாதுகாப்பேன். எனது மகனுக்கு வரும் அனைத்து கேடுகளையும் எனது மருமகள் எடுத்துப் போட்டு விடுவாள் என்றார் பெருமையாக.

திருமணம் முடிந்த பின்னர் சிபுவுக்கு புட்டிப் பால் கொடுத்து விருந்தளித்தனர். அதேபோல அவனது 'மனைவிக்கு' ஒரு ரொட்டித் துண்டும், ஆட்டிறைச்சியும் கொடுத்து அசத்தினர்.

இதுதவிர சிபுவுக்கு, நாய்க்குட்டியின் வீட்டார் சார்பில் ஒரு ரேடியோ செட், தங்க மோதிரம், வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்து பக்காவாக திருமணம் நடந்தது.

இந்த கேவலமான சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்த தலைவர் டாக்டர் மகேத்ராவிடம் கேட்டபோது, இது கிராமத்து பழங்குடியின மக்களின் நம்பிக்கையாக இருக்கலாம். இதில் எப்படித் தலையிட முடியும் என்றார்.

ஒரிஸ்ஸாவுக்கு பெரியார் ஒருமுறை மறுபிறவி எடுத்து வந்தால் நலமாக இருக்கும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X