For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாரியத் தலைவர் பதவியை உதறினார் டி.ராஜேந்தர்

By Staff
Google Oneindia Tamil News

T.Rajendar
சென்னை: மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

லட்சிய திமுக கட்சியை விடாமல் நடத்தி வரும் டி.ராஜேந்தர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்த முதல் கட்சித் தலைவராவார்.

அவரை கூட்டணிக்கு அன்போடு வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சீட் தரவில்லை. இதையடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு திமுக கூட்டணிக்கு தாவி வந்தார்.

ஆனால், அங்கு இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டதால் அங்கும் சீட் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது.

தனது கட்சி சார்பில் ஒரே ஒரு இடத்தில் போட்டியிட்டபடி திமுக கூட்டணிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் டி.ஆர். தேர்தலில் திமுக வென்றது. அத்துடன் டி.ஆரும் மறக்கப்பட்டார்.

இதை நினைவுபடுத்தும் வகையில், தான் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ராஜேந்தர். இதையடுத்து அவரைக் கூப்பிட்டு அமைச்சர் அந்தஸ்துடனான சிறுசேமிப்பு ஆணைய துணைத் தலைவர் பதவியை வழங்கினார் முதல்வர்.

எந்தவிதமான அதிகாரமும் இல்லாத இந்தப் பதவி மூலம் டி.ஆருக்கு கிடைத்த ஒரே லாபம் சிவப்பு விளக்கு பொருத்திய சைரன் கார் மட்டும் தான்.

ஆனால், இந்த சைரனை சுழலவிட்டபடி இவரது கார் எங்கு போனாலும் மரியாதை மட்டும் கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக, அரசின் பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தனது அதிருப்தியைக் காட்டினார் ராஜேந்தர்.

இந் நிலையில் இன்று தனது சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் டி.ராஜேந்தர் கூறுகையில்,

மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழு துணைத் தலைவர் பதவியிலிருக்கும் நான், தமிழக முதலமைச்சருக்கு என் நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளவற்றை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக..:

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. ஆனால் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவே உதவி செய்வது வருத்தத்தை வரவழைக்கிறது.

இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்திற்கு உரியது. அதற்காக இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

தமிழர்கள் கண்ணில் சுண்ணாம்பு வைக்கலாமா?:

சீக்கிய இனத்தின் கண்ணில் வெண்ணையை வைத்துவிட்டு, தமிழ் இனத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கலாமா? இவ்விஷயத்தில் இந்திய அரசின் செயல்பாடு முரண்பாடாக இருக்கிறது. அதனால் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 29ந் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5ந் தேதி சென்னையிலும் லட்சிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன்.

மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது கூட்டணி கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதில் துவங்கி தமிழக மக்கள் பிரச்சனைக்காக லட்சிய திமுக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும்.

இன்று காலை முறைப்படி விலகல் கடிதத்தை கொடுத்து அனுப்பினேன். ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தை கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார் ராஜேந்தர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X