For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஐஐஎம், மத்திய பல்கலை. அமைக்க மத்திய அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 45 புதிய உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 45 உயர்கல்வி நிறுவனங்களை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 7 ஐஐடிகள், 8 ஐஐஎம்கள், 30 மத்திய பல்கலைக்கழகங்கள் இதில் அடங்கும். இதில் 14 பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும்.

ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் புதிய ஐஐடிகள் தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஒரிசா, மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மேலும் 4 ஐஐடிகள் திறக்கப்படும்.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இந்த ஐஐடி அமைக்கப்படும். மற்ற மாநிலங்களில் எந்த ஊர் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இது தவிர, தற்போது ஐஐடி பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பனராஸ் இந்து பல்கலையின் 'இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி' யை ஐஐடியாகவே தரம் உயர்த்தப்படும்.

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் புதிய ஐஐஎம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்துடன் தமிழ்நாடு, காஷ்மீர், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் ஹரியானாவிலும் புதிதாக ஐஐஎம்கள் அமைக்கப்படும்.

கோயம்புத்தூர், கொச்சின், மைசூர், விசாகப்பட்டினம், கோல்கத்தா, புனே, பாட்னா, காந்திநகர், ஜெய்ப்பூர், போபால், அமிர்தசரஸ், புவனேஸ்வரம், கிரேட்டர் நோய்டா மற்றும் குவாஹட்டியில் சர்வதேசத் தரம் பெற்ற 14 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

இவை தவிர மத்திய பல்கலைக்கழகங்கள் இல்லாத தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் மற்றும் கோவாவில் மத்திய பல்கலைக்கழகங்களை தொடங்கப்படும்.

அடிப்படை கட்டமைப்பு வசதி உடைய முக்கிய நகரங்களில்தான் இந்த கல்வி நிறுவனங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இந்த கல்வி மையங்களுக்குத் தேவையான நிலத்தை இலவசமாக வழங்கினால் நல்லது.

எவ்வளவு சீக்கிரம் நிலத்தை தருகிறார்களோ அவ்வளவு விரைவில் புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். இந்த நிறுவனங்களுக்குத் தேவையான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர்.

நாட்டில் தற்போது 7 ஐஐடிகள், 6 ஐஐஎம்கள் மற்றும் 19 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் இத்தனை உயர்கல்வி நிறுவனங்களை தொடங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த நிறுவனங்களைத் தொடங்க 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறக்குறைய 5 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X