For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்து வரியை ஜெ. உயர்த்தவில்லையா-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று இப்போது அறிக்கை விடும் இதே ஜெயலலிதா தான், அவர் ஆட்சியிலே இருந்தபோது குடியிருக்கும் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் வணிக உபயோகக் கட்டிடங்களுக்கு 200 சதவீதமும் வரியை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: எதற்கெடுத்தாலும் போராடுவேன் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறாரே?

பதில்: காலையில் கைது-மாலையில் விடுதலை என்ற நிலை தொடரும் வரையில் இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டுதானிருக்கும்.

கேள்வி: 1.4.2008 முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சொத்து வரி மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: சொத்து வரி என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்ப யான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகும். பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சொத்து வரியை சீரமைக்க வேண்டுமென்று முடிவெடுத்து, வழிகாட்டி நெறிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வழிகாட்டி நெறிமுறைகளின்படி குடியிருப்பு வீடுகளுக்கு 25 சதவிகிதம் - தொழில் கட்டடங்களுக்கு 100 சதவிகிதம்-வணிக நிறுவனக் கட்டடங்களுக்கு 150 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்திக் கொள்ள வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த நகரங்களின் தேவைக் கேற்ப சொத்து வரியை தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம். தேவை இல்லையெனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை ஏற்கனவே இருந்த அளவிற்கே வசூலித்துக் கொள்ளலாம். அரசு உயர்ந்தபட்ச சதவிகிதத்தை மட்டுமே வகுத்தளித்துள்ளது. இதனை உயர்த்தித்தான் ஆக வேண்டுமென்று எந்தவிதமான கட்டாயமும் கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமேயானால் அதற்கு போதிய நிதி தேவை. எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி உதவி செய்திட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது என்பதையும் மறந்துவிட முடியாது.

அதே நேரத்தில் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களுடைய சொந்த வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் இது போன்ற அறிவிப்புகள் செய்யப்படும்போது அதை எதிர்த்தால் உள்ளாட்சி அமைப்புகளால் எந்தவிதமான நற்பணிகளையும் ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

மக்களுக்கான அடிப்படைத் திட்டங்களை நிறைவேற்றிட உதவியாகத் தான் சொத்து வரியை விரும்புகின்ற உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப உயர்த்திக் கொள்ள உச்சவரம்பு நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தியே ஆகவேண்டுமென்று எந்தவிதமான நிர்ப்பந்தமும் கிடையாது.

இதைத்தான் ஜெயலலிதா உயர்த்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறார். அதாவது உள்ளாட்சிப் பகுதிகளில் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற வேண்டாமென்று மறைமுகமாகக் கூறுகிறார் என்று பொருள்.

சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா தான், அவர் ஆட்சியிலே இருந்தபோது 1993ஆம் ஆண்டில் குடியிருக்கும் கட்டிடங்களுக்கு 100 சதவிகிதத்திற்கு மிகாமலும், தொழில் மற்றும் வணிக உபயோகக் கட்டிடங்களுக்கு 150 சதவிகிதத்திலிருந்து 200 சதவிகிதத்திற்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தார்.

அதனை அப்படியே மறந்து விட்டு, தற்போது சொத்து வரியை உயர்த்தலாமா என்கிறார் ஜெயலலிதா.

கேள்வி: காங்கிரஸ் உறுப்பினர் போளூர் வரதன் பேச்சை சில ஏடுகள் அவர் அரசை தாக்கியதைப் போலவும், முதியோர் உதவித் தொகையை மத்திய அரசு தான் தருகிறது என்பதைப் போலவும், அந்தத் திட்டங்களை காங்கிரஸ்காரர்கள் சொல்லத் தவறியதால் ஆட்சிக்கு வந்து விட்டதைப் போலவும் வெளியிட்டுள்ளனவே?

பதில்: போளூர் வரதனின் முழுப்பேச்சையும் நான் படித்துப் பார்த்தேன். அவர் ஆட்சியை பாராட்டிப் பேசிய பகுதிகள் தான் அவரது பேச்சிலே அதிகமாக உள்ளது. ஆனால் ஏடுகள் அவற்றையெல்லாம் விட்டு விட்டு சில பகுதிகளை மட்டும் வெளியிட்டுள்ளன.
அவர் பேசும்போது, ஒரு சமுதாயத்தினுடைய வளர்ச்சியை மனதிலே கொண்டு கலைஞர் இன்றைக்கு இந்த நிதிநிலை அறிக்கையைத் தீட்டியிருக்கிறார்கள் என்பது தானே உண்மை அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

தமிழுக்கு முதலிடம் கொடுப்பவர்கள் யார் என்று சொன்னால், எல்லோரும் வேண்டுமானால், வீம்புக்கு வேண்டுமானால் பேசலாம். தமிழகத்திலே இன்றைக்கு ஒரேயொரு மனிதன், கலைஞரால் மட்டும் தான் தமிழைத் திறமையாகப் பேசமுடியும் என்பதை உலக வரலாறு இன்றைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது. நான் யாருக்கும் துதி பாட வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் யாருக்கும் ஐஸ் வைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் யார் வீட்டு வாசலிலேயும் கை கட்டாதவன், மனதிலே பட்டதைச் சொல்லக் கூடியவன் என்றெல்லாம் பேசியதை விட்டு விட்டு வேண்டுமென்றே சில ஏடுகள் அவரது பேச்சை திரித்து வெளியிட்டுள்ளன.

கேள்வி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக நான்காவது முறையாக தோழர் ஏ.பி. பரதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே?

பதில்: அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர். அவரது நீண்ட அனுபவமும் நேர்மையான செயல்பாடும் அந்தக்கட்சியை கட்டிக் காத்திடும் கேடயங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்த நேரத்திலும் கூட, அதனை வெல்லக்கூடிய ஆற்றலாளர். அந்த 82யை இந்த 84 வாழ்த்துகிறது.

கேள்வி: தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தை நோபல் பரிசு பெற்ற பன்னாட்டு சுற்றுச்சூழல் ஆய்வின் தலைவர் ஆர்.கே. பச்சோரி நேற்று திறந்து வைத்திருக்கிறாரே?

பதில்: அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று அவர் தொடங்கி வைத்துள்ள ஆய்வகம் நாட்டிலேயே முதன் முறையாகத் தொடங்கி வைக்கப்படும் அமைப்பாகும். அதைத் தொடங்கி வைத்த நோபல் பரிசு பெற்ற பச்சோரி அவர்கள் நேற்று மாலை என்னைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.

வெப்ப நிலை அதிகரிப்பால் கடல் நீர் மட்டம் உயர்வது, தண்ணீர் பற்றாக்குறை, வேளாண் பொருட்களின் உற்பத்தி பாதிப்பு, புதிய வகையான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இவற்றையெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசினார்.
அந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X