For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகேனக்கல்: அனைத்து கட்சி கூட்டம்-கருணாநிதிக்கு ராமதாஸ் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: ஓகேனக்கல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் பாமக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

1998 செப்டம்பர் மாதத்தில் கர்நாடக- தமிழக அரசுகள் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதன்படி, கர்நாடக அரசு காவிரியில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் கொண்டு செல்லலாம். அதேபோல், தமிழகத்திற்கு ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூர் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு வேகமாக நிறைவேற்றி காவிரி நீரை அந்த நகரில் வினியோகித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை.

தமிழக மக்கள் பெங்களூரு, கோலார் தங்கவயல், கொள்ளேகால் ஆகியவை தமிழகத்துக்கு சொந்தமான இடம் என சொல்ல எத்தனை நாளாகும். 40 ஆண்டுக்கு முன் முடிந்து விட்ட பிரச்னையை இப்போது எழுப்புவது தேசிய கட்சிக்கு அழகல்ல.

தண்ணீர் இல்லாத வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 250 கி.மீ. தூரத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றார்கள். ஆனால் தர்மபுரியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கிற காவிரி நதியில் இருந்து தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீரை கொடுக்க முடியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் உள்ளன.

பெங்களூரில் உள்ள தினத்தந்தி அலுவலகம், தாக்கப்பட்டிருப்பது காட்டு மிராண்டித்தனமான செயல். தினத்தந்தி நடுநிலையுடன் செயல்படுகிற ஒரு பத்திரிகை. பெங்களூரில் அதனுடைய பதிப்பு இருப்பது கர்நாடகத்திற்கு தான் பெருமை. தமிழ்நாட்டுடனும் தமிழர்களுடைய உணர்வுடனும் இரண்டற கலந்து இருப்பது தினத்தந்தி.

அந்த பத்திரிகையின் அலுவலகத்தை பெங்களூரில் தாக்கி இருப்பது தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு ஒப்பாகும். 24 மணி நேரமும் பெங்களூர் தினத்தந்தி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும்.

இந்த சிக்கலில் 2 புறமும் நடக்கிற விரும்ப தகாத சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். 2 மாநிலங்களிலும் அமைதி நிலவ உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: ஒகேனக்கல் விவகாரத்தில் கருணாநிதி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ராமதாஸ்: முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் கூட்டி இந்த விவகாரம் பற்றி பேச வேண்டும். தற்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால், இடையில் அரை மணி நேரமோ 1 மணி நேரமோ ஒதுக்கி, அனைத்து கட்சியினரையும் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்யலாம் என்றார்.

கேள்வி:25 ஏக்கர் வரை தனி நபர்கள் நிலம் வாங்கி போடுவது பற்றி?

பதில்: 5 ஏக்கருக்கு மேல் யார் யார் நிலம் வாங்கி இருந்தாலும் அவற்றை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே பாமக சார்பில் கூறி இருக்கிறோம் என்றார்.

பெங்களூர், கோலாரை கேட்போம்:

இதற்கிடையே சென்னையில் பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி,

தமிழக குடிநீர் இந்த திட்டத்தை, தேர்தல் ஆதாயத்துக்காக சிலர் தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசும், கர்நாடக மற்றும் தமிழக அரசும் பேசி எல்லை பிரச்சினை முடிவு செய்யப்பட்டது. தற்போது ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை தாக்குகிறார்கள். அங்கு தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் முதல்வரும், காவல் துறையும் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியுள்ளனர். கர்நாடகாவில் உள்ள காவல்துறையோ வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உடனடியாக மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை போலீசாரை கர்நாடகாவிற்கு அனுப்பி, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கர்நாடகத்தில் 7 நாட்கள் முதல் அமைச்சராக இருந்த பாஜக எதிடியூரப்பா தேர்தல் ஆதாயத்துக்காக பிரச்சினை கிளப்பி வருகிறார்.

ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்று கர்நாடகா உரிமை கொண்டாடினால், எல்லை பிரச்சினையின் போது இழந்த பகுதிகளான பெங்களூர், கோலார் தங்க வயல், கொண்டக்கல், சாம்ராஜ் ஆகிய பகுதிகள் எங்களுக்கே சொந்தம் என்பதை மீண்டும் திருப்பி கேட்போம். கர்நாடகாவில் மீண்டும் மீண்டும் தமிழர்கள் தாக்கப்பட்டால் தமிழர்கள் பொறுத்து கொள்ளமாட்டார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X